search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இறை வசனங்கள் மூலம் நபிகளாருக்குக் கிடைத்த உற்சாகம்
    X

    இறை வசனங்கள் மூலம் நபிகளாருக்குக் கிடைத்த உற்சாகம்

    நபி முஹம்மது (ஸல்) மக்காவிற்குத் திரும்பச் சென்று இஸ்லாமைப் புத்துணர்வுடனும் உற்சாகத்துடனும், துணிவுடனும், வீரத்துடனும் பரவச் செய்ய வேண்டுமென்ற முனைப்புடன் புறப்பட்டார்கள்.
    திருக்குர்ஆனில் ‘ஜின்’ எனும் அத்தியாயத்தில், “நிச்சயமாக, ஜின்களில் சிலர் இவ்வேதத்தைச் செவியுற்றுத் தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களை நோக்கி “நிச்சயமாக, நாங்கள் மிக்க ஆச்சரியமான ஒரு குர்ஆனைச் செவியுற்றோம் அது நேரான வழியை அறிவிக்கின்றது. ஆகவே, அதனை நாங்கள் நம்பிக்கை கொண்டோம்.

    இனி நாங்கள் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் இணையாக்க மாட்டோம்...” என்றும் “நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வைத் தோற்கடிகவோ இயலாமலாக்கவோ முடியாது என்பதையும், பூமியிலிருந்து ஓடி ஒளிந்து அவனை விட்டுத் தப்பித்துக்கொள்ள முடியாது என்பதையும் உறுதியாக அறிந்துகொண்டோம்” என்று ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து குர்ஆனை கேட்டுச் சென்றதை பற்றி, இந்த வசனங்கள் மூலம் அல்லாஹ், பெருமானார் நபிகளுக்கு அறிவித்த பிறகு, தாயிஃப் நகரத்து மக்கள் இஸ்லாம் அழைப்பை மறுத்தது குறித்ததான வேதனை நபி முஹம்மது (ஸல்) அவர்களை விட்டும் அகன்றது.

    அல்லாஹ்வின் இந்தத் திருவசனத்தில் சொல்லப்பட்ட நற்செய்தியைக் கேட்டு நபிகளார் மகிழ்ந்தார்கள். நபி முஹம்மது (ஸல்) மக்காவிற்குத் திரும்பச் சென்று இஸ்லாமைப் புத்துணர்வுடனும் உற்சாகத்துடனும், துணிவுடனும், வீரத்துடனும் பரவச் செய்ய வேண்டுமென்ற முனைப்புடன் புறப்பட்டார்கள்.

    நபிகளாரைக் குறைஷிகள் எதிர்த்தவேளையில் எப்படி மீண்டும் மக்காவிற்குள் செல்வது என்று ஸைத் யோசித்ததை நபி முஹம்மது (ஸல்) அவர்களிடமே கேட்டார். அதற்கு நபிகளார் “ஸைதே! நாம் அவதிப்படும் இத்துன்பங்கள் அனைத்திற்கும் விரைவில் முடிவு வரும். அல்லாஹ் நமக்கு மகிழ்ச்சியைத் தருவான். மாற்றங்கள் எல்லோரின் மனதிலும் ஏற்படும். அல்லாஹ் அதற்கான உதவியை நிச்சயம் செய்வான் என்று நம்புகிறேன்” என்றார்கள்.

    நபி முஹம்மது (ஸல்), மக்காவில் அடைக்கலம் வேண்டியபோது பலர் மறுத்துவிட்டனர். முத்இம் என்பவர் மட்டும் மிகத் தைரியமாக நபிகளாருக்கு அடைக்கலம் தருகிறேன் என்று நபி முஹம்மது (ஸல்) அவர்களைப் பாதுகாப்புடன் கஅபாவிற்கு அழைத்துச் சென்றார். முத்இம் இஸ்லாமிற்கு மாறவில்லை ஆனால் அடைக்கலம் வேண்டியவருக்குப் பாதுகாப்பு அளித்து, அதனை அறிவிக்கவும் செய்தார். முத்இமின் அடைக்கலத்தில் நபிகளார் கஅபாவிற்குச் சென்று தொழுதார்கள். ஹஜ்ருல் அஸ்வத் கல்லை (சொர்க்கத்து கல்லை) முத்தமிட்டார்கள்.

    நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ஹஜ்ஜுடைய காலம் நெருங்கியபோது பல திசைகளிலிருந்து ஹஜ்ஜு கடமையை நிறைவேற்றுவதற்காக மக்காவிற்கு மக்கள் அனைவரும் வந்தனர். அந்த சந்தர்ப்பத்தை நபிகளார் பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொரு ஆண்டையும் போலவே அம்மக்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி விவரித்து இஸ்லாத்திற்கு அழைப்பு விடுத்தார்கள். ஆனால் அந்த ஆண்டு அம்மக்களிடம் தனக்கு, தமது எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு வேண்டுமென்றும் உதவி வேண்டுமென்றும் கோரிக்கைகளைச் சேர்த்தே முன் வைத்தார்கள்.

    நபி முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பல குலத்தாருக்கும் கோத்திரத்தாருக்கும் குழுக்களுக்கும் அறிமுகப்படுத்தியது போலவே தனி நபர்களுக்கும் அறிமுகப்படுத்தினார்கள். அதில் சிலர் “அதிகாரம் கிடைக்குமா? செல்வம் கிடைக்குமா?” என்று கேட்டனர். அதற்கு நபிகளார் “அதிகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்விற்கே உரியன. அவன் விரும்பியதைக் கொடுப்பான்” என்று அவர்கள் அளித்த பதிலை ஏற்காமல், லாபம் தராத இந்த மார்க்கத்தை ஏற்கத் தயாரில்லை என்று நிராகரித்தனர்.

    மிகச் சிலர் ‘லாஇலாஹஇல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வழிபாட்டிற்குரியவன் வேறு எவருமில்லை), ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்), ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லி நல்ல பதில்களையும் தந்து இஸ்லாத்தை ஏற்றனர்.

    (ஆதாரம்: இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம், திருக்குர்ஆன் 72:1-15)

    -ஜெஸிலா பானு.
    Next Story
    ×