search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இறைவேதம் ‘திருக்குர்ஆன்’
    X

    இறைவேதம் ‘திருக்குர்ஆன்’

    ‘திருக்குர்ஆன்’ இறைவனின் அருள் வாக்காகும். அது இறைவனின் இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்டதாகும்.
    ‘திருக்குர்ஆன்’ இறைவனின் அருள் வாக்காகும். அது இறைவனின் இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்டதாகும்.

    “இது அல்லாஹ்வின் வேதமாகும். இதில் யாதொரு சந்தேகமும் தேவை இல்லை” (2:2) என்றும்,

    “(முகம்மதே!) இது ஒரு வேதமாகும். இதனை நாம் உம் மீது இறக்கியுள்ளோம். மக்களை அவர்களுடைய இறைவனின் உதவி கொண்டு இருளில் இருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் நீர் கொண்டு வரவேண்டும் என்பதற்காக” (14:1) என்றும் இறைவன் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

    திருக்குர்ஆனை இறைவன்தான் இறக்கி அருளினான் என்று குர்ஆனே திட்டவட்டமாகக் கூறுகிறது.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடக்கக் கல்வியைக்கூட கற்றதில்லை. அதனால்தான் அவர்களை ‘உம்மீ நபி’ என்கிறார்கள். ‘உம்மீ நபி’ என்றால் ‘எழுதப் படிக்கத் தெரியாத நபி’ என்று பொருள்.

    திருக்குர்ஆன் அரபி மொழியின் மிகச்சிறந்த இலக்கியமாகக் கருதப்படுகிறது. அரபி மொழிக்கு இலக்கணம், சொல் வளம், சொற்றொடரியல் ஆகியவற்றுக்கான அடித்தளமாக அமைந்தது, குர்ஆனே. அப்படிப்பட்ட குர்ஆனை எழுதப்படிக்கத் தெரியாத ஒருவர் இயற்றினார் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள். இதுவே திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகளே என்பதற்கு முதல் அத்தாட்சியாகும்.

    திருக்குர்ஆன் 23 ஆண்டு கால இடைவெளியில் சிறிது சிறிதாகப் பல்வேறு சூழ்நிலைகளில் அருளப்பட்டது. ஆனாலும் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை குர்ஆனின் உரை அனைத்தும் ஒழுங்காகவும், சீராகவும் அமைந்துள்ளதைக் காணலாம். அதில் முரண்பாடுகள் எதையும் காண முடியாது. ஏக இறைவனின் வார்த்தையாக இருந்தால் மட்டுமே முரண்பாடுகள் இல்லாமல் இருக்கும்.

    இதுகுறித்து திருமறையில், “இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து கவனிக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடம் இருந்து வந்திருந்தால் இதில் பல (தவறுகளையும்) முரண்பாடுகளை(யும்) அவர்கள் காண்பார்கள்” (திருக்குர்ஆன்-4:82) இறைவன் கூறுகின்றான்.

    திருக்குர்ஆனில் முரண்பாடுகள் இல்லை என்பது அது இறைவேதம் என்பதற்கு போதுமான சான்றாகும்.

    இறைமொழி என்றால் அது தரமாக இருக்க வேண்டும்; உயர்தரமாக இருக்க வேண்டும்; நிரந்தரமாக இருக்க வேண்டும். திருக்குர்ஆன் இப்படி அமைந்துள்ளதா என்றால், அரபி மொழி அறிந்த முஸ்லிம் அல்லாதார் திருக்குர்ஆனை ஆய்வு செய்தால் நிச்சயமாக அது இறைவேதம் என்பதை அறிந்து கொள்ளவும், அறிவிக்கவும் முடியும்.

    குர்ஆனின் நடை உரைநடையும் அல்ல; கவிதையும் அல்ல. இவைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஈர்க்கும் இசைநயம் கொண்ட ஓசையுடன் புதிய பாணியில் அமைந்துள்ளது. பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும், அதே நேரத்தில் அறிஞர்களும் ஆச்சரியப்படத்தக்க வகையிலும் அதன் வசனங்கள் அமைந்துள்ளன. இவ்வளவு உயர்ந்த இலக்கிய தரத்தில் ஒரு நூலை இயற்ற வேண்டும் என்றால் நபிகளார், அறிஞராகவோ, அரபி மொழியில் கரை கண்டவராகவோ இருக்க வேண்டும். ஆனால் அவர்களோ படிப்பறிவு இல்லாதவர்.

    இதையே, “(நபியே!) நீங்கள் இதற்கு முன்னர் யாதொரு வேதத்தை ஓதி அறிந்தவருமல்ல; உங்களுடைய கையால் அதை எழுதி(ப் பழகி)யவருமல்ல. அவ்வாறு இருந்திருக்குமாயின், நிராகரிப்பவர்கள் (இதனை நீங்கள் தாமாகவே கற்பனை செய்து கொண்டீரே தவிர இறைவனால் அருளப்பட்டதல்ல என்று) சந்தேகம் கொள்ளலாம்” (29:48) என்று இறைவன் திருமறையில் கூறுகின்றான்.

    திருக்குர்ஆனின் நடையும் நயமும், நபிகளாரின் மொழி நடையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது; வேறுபட்டது. சில நேரங்களில் நபிகளார் ஏதேனும் நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டினாலோ அல்லது பாராமுகமாக இருந்தாலோ இறைத் தூதராயிற்றே என்று இறைவன் பார்ப்பதில்லை.

    சான்றாக, பார்வையற்ற ஒருவர் நபிகளாரிடம் அறிவுரை கேட்க வந்தபோது அதனை அவர்கள் விரும்பவில்லை. அப்போது, “(நமது நபி) கடுகடுத்தார்; புறக்கணித்தார். (எதற்காக?) தன்னிடம் ஒரு பார்வையற்றவர் வந்ததற்காக” (திருக்குர்ஆன்-80:1) என்ற இறைவாக்கு வருகிறது.

    சில பல சமயங்களில் சிக்கலான பிரச்சினைகள் வரும்போது இறை வழிகாட்டுதல் வரும் வரை நபிகளார் காத்திருந்தார்கள். இவை அனைத்தும் திருக்குர்ஆன் இறைவாக்கு என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

    திருக்குர்ஆனில் உள்ள கம்பீரம், தொனி, உவமை, சொல்லாட்சி, இலக்கிய நயம் ஆகிய அனைத்தும் மனித ஆற்றல் களுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன.

    குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதுதானா என்று சந்தேகம் கொள்வோரைச் சந்திக்க இறைவன் தயாராக இருக்கின்றான் என்பதற்கு கீழ்க்கண்ட வசனங்கள் சான்றாகத் திகழ்கின்றன.

    “இவர்தான் இவ்வேதத்தை புனைந்து கூறுகிறார்” என்று இவர்கள் வாதிடுகிறார்களா? நீர் கூறும்: அவ்வாறாயின் இதுபோன்ற பத்து அத்தியாயங்களை நீங்கள் இயற்றிக் கொண்டு வாருங்கள்” (11:13)

    “என்ன, இவர்கள் இறைத்தூதர் இதனைச் சுயமாக இயற்றியுள்ளார் என்று கூறுகின்றார்களா? நீர் கூறும்: “(இக்குற்றச்சாட்டில்) நீங்கள் உண்மையானவர்களாயின், இதுபோன்ற ஓர் அத்தியாயத்தை இயற்றிக் கொண்டு வாருங்கள்!” (10:38)

    இறைவன் விடுத்த இந்தச் சவால் திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு மட்டுமல்ல; உலக முடிவு நாள் வரையுள்ள அனைத்து மக்களுக்கும் விடப்பட்ட சவால் ஆகும். குர்ஆன் அருளப்பட்டு 1,500 ஆண்டுகள் ஆகி விட்டன. இந்தச் சவாலுக்கு இன்று வரை எவராலும் பதில் அளிக்க முடியவில்லை.
    Next Story
    ×