search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எல்லா முயற்சிகளிலும் நபிகளாரிடம் தோற்ற குறைஷிகள்
    X

    எல்லா முயற்சிகளிலும் நபிகளாரிடம் தோற்ற குறைஷிகள்

    இறைவன் ஒருவன் என்ற மார்க்கத்தை ஏற்றுக் கொண்டால் அது உங்களின் ஈருலகத்திற்கு நன்மையைத் தரும்.
    உத்பாவை வசியப்படுத்திவிட்டார் முஹம்மத் (ஸல்) என்று நம்பினர் குறைஷிகள். அதனால் உத்பா பேசிய பேரத்தை ஒரு குழுவாக இருந்து பேச குறைஷி தலைவர்கள் ஒன்று கூடினர். அனைவரும் சேர்ந்து கேட்டால் நபிகளார் ஒப்புக் கொள்வார்கள் என்று நம்பினர். நபிகளாரை அழைத்து ஆசை வார்த்தை கூறினர். ஆனால் நபி முஹம்மது (ஸல்), “உங்களின் ஆட்சி அதிகாரங்கள் எனக்குத் தேவையற்றது. நான் இறைத்தூதர் மட்டுமே. வேதத்தின் மூலம் உங்களுக்கு நற்செய்தி சொல்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மட்டுமே நான் இருக்கின்றேன். இறைவன் ஒருவன் என்ற மார்க்கத்தை ஏற்றுக் கொண்டால் அது உங்களின் ஈருலகத்திற்கு நன்மையைத் தரும். நீங்கள் அதை மறுத்தால் அல்லாஹ்வின் கட்டளைக்காக நான் பொறுத்திருப்பேன்” என்று பதிலளித்தார்கள்.

    குறைஷிகள் தங்களின் கேள்விகளைத் தொடர்ந்தனர் “நாங்கள் உங்களிடம் பல கோரிக்கைகளை வைப்போம், கேள்விகளைக் கேட்போம் என்று உங்களது இறைவன் உங்களுக்குச் சொல்லவில்லையா? பதில் சொல்வதற்குத் தேவையானதை அவன் உங்களுக்குக் கற்றுத்தரவில்லையா? சரி, உங்களது இறைவன் உண்மையானவர் என்றால் இந்த மலைகளை இடம்பெயரச் செய்ய வேண்டும். இவ்வூரை செழிப்பாக்க வேண்டும், இறந்துவிட்ட முன்னோர்களை உயிர்ப்பிக்க வேண்டும். மாட மாளிகைகளையும், தோட்டங்களையும், தங்கம், வெள்ளிகளையும் - எங்களுக்கில்லை - உங்களுக்காக உங்களது இறைவனிடம் கேளுங்கள். குறைந்தபட்சம் ஒரு வானவரை எங்களிடம் அனுப்பச் சொல்லுங்கள், நாங்களே அவருடன் பேசித் தெரிந்து கொள்கிறோம். இப்படி ஏதாவது செய்தால்தானே நீங்கள் கூறுவதெல்லாம் உண்மை என்று நாங்கள் நம்ப முடியும்?” என்றனர்.

    அதற்கும் நபி (ஸல்) அவர்கள் முன் கூறிய அதே பதிலையே கூறினார்கள்.

    கோபமடைந்த குறைஷிகள் “நீங்கள் எச்சரிப்பதை இப்போதே நிறைவேற்றச் சொல்லுங்கள். எங்கள் மீது வேதனையை இறக்கச் சொல்லுங்கள்” என்று வெடித்தனர். அதற்கும் பொறுமையாக நபி முஹம்மத் (ஸல்) “அல்லாஹ் நாடினால் அதைச் செய்வான்” என்று பதிலளித்தார்கள்.

    வெறுப்படைந்த குறைஷிகள் அடுத்து நபிகளாரைக் கொலை செய்வது என்று முடிவெடுத்தனர். அபூஜுஹ்ல் ஒரு பெரிய கல்லை நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் இறை வணக்கம் செய்யும்போது, சிரம் தாழ்த்தும்போது தலையில் போடத் தயாராக இருந்தான். நபிகளாரை நெருங்கி கல்லைத் தூக்கியவன் எதையோ பார்த்து பயந்தவனாக ஓட்டம்பிடித்தான். மற்ற குறைஷிகள் அது பற்றிக் கேட்டபோது “ஒரு மிகப்பெரிய ஒட்டகம் பயங்கரமான கோரைப் பற்களைக் காட்டி என்னைக் கடிக்க வந்தது” என்றான். கொலை முயற்சியிலும் தோற்ற குறைஷிகள், ஒருவேளை நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் மார்க்கம் உண்மையாக இருக்குமோ என்று சந்தேகத்தில் ஆழ்ந்திருந்தனரே தவிர இஸ்லாமை ஏற்கவில்லை.

    முஹம்மது (ஸல்) அவர்களின் வழியிலேயே சென்று மடக்க மற்றொன்றையும் கேட்டனர் “நீங்கள் வணங்குவதை நாங்களும் வணங்குகிறோம், நாங்கள் வணங்குவதை நீங்களும் வணங்குங்கள். நாம் அனைவரும் இவ்விஷயத்தில் கூட்டாக ஒற்றுமையாக இருப்போம், என்ன சொல்கிறீர்? ” என்றனர்.

    அதற்கு நபிகள் “அறிவிலிகளே! நான் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்க வேண்டுமென்று என்னை நீங்கள் ஏவுகிறீர்களா?” என்ற இறைவசனத்தை ஓதினார்கள். அத்தியாயம் காஃபிரூனையும் முழுமையாக ஓதினார்கள் “நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்க மாட்டீர்கள். நீங்கள் வணங்குபவைகளை நானும் வணங்க மாட்டேன். உங்களுடைய செயலுக்குரிய கூலி உங்களுக்கும், என்னுடைய செயலுக்குரிய கூலி எனக்கும் கிடைக்கும்” என்றார்கள்.

    எல்லா முயற்சிகளிலும் தோற்ற குறைஷிகள், அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தனர்.

    (திருக்குர்ஆன் 42:14, 39:64, 109:1-6, அர்ரஹீக் அல்மக்தூம்)

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×