search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாத்தின் பாதையில் மின்னல் ஒளிக்கீற்று
    X

    இஸ்லாத்தின் பாதையில் மின்னல் ஒளிக்கீற்று

    முஸ்லிம்களின் வழிக்கு ஒளிகாட்ட மற்றொரு ஒளி கீற்று மின்னத்தொடங்கியது.
    நபித்துவத்தின் ஐந்து ஆண்டுகள் முடிந்த நிலையிலும், இஸ்லாமை ஏற்றதைக் குறித்து வெளிப்படையாக யாருமே சொல்ல முடியவில்லை. காரணம் அக்காலத்தில் ஒருவர் முஸ்லிமாகி விட்டார் என்று தெரியவந்தால் அனைவரும் அவரைப் பிடித்து அடிப்பார்கள், சண்டைக்கு வருவார்கள்.

    ஆறாம் ஆண்டு் தொடக்கத்தில் வலிமைமிக்க ஹம்ஜா (ரலி) இஸ்லாமை ஏற்றார். அவரைப் போன்ற மற்றொருவரும் இஸ்லாமிற்குத் தேவைப்பட்டது. நபி முஹம்மது (ஸல்) இறைவனிடம் “அல்லாஹ்வே! உமர் இப்னு கத்தாப் அல்லது அபூஜஹ்ல் இப்னு ஹிஷாம் ஆகிய இருவரில் உனக்கு விருப்பமானவரைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!” என்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.

    இரவு நேரத்தில் உமர் இப்னு கத்தாப் இறை இல்லமான கஅபாவின் திரைக்குள் நுழைந்த போது அங்கு நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருந்ததைக் கவனித்தார்கள். தொழுகையில் நபி (ஸல்) ‘அல் ஹாஃக்கா’ அத்தியாயத்தின் வசனங்களை ஓதினார்கள். தன்னை அறியாமல் அதனை உமர் இப்னு கத்தாப் ரசிக்க ஆரம்பித்தார்கள். மனத்திற்குள் ‘இவர் கவிஞராக இருப்பாரோ!’ என்று உமர் நினைக்க, “இது, நிச்சயமாக நம்மால் (இறைவனால்) அறிவிக்கப்பட்டபடி மிக்க சங்கை பொருந்திய ஒரு தூதரால் கூறப்பட்டதாகும், ஒரு கவிஞனுடைய சொல்லல்ல.

    எனினும், இதனை வெகு சொற்பமாகவே நம்பிக்கை கொள்கின்றீர்கள்” என்ற திருக்குர்ஆனின் அத்தியாயம் 69-இன் வசனங்களை ஓதக் கேட்டுத் திடுக்கிட்டார்கள். மறுபடியும் மனதினுள் ‘இவர் ஜோசியக்காரராக இருப்பாரோ!’ என்று நினைத்து முடிக்குமுன் “இது ஒரு ஜோசியக்காரனுடைய சொல்லுமல்ல. எனினும், இதனைக் கொண்டு வெகு சொற்பமாகவே நீங்கள் நல்லுபதேசம் அடைகின்றீர்கள்.

    உலகத்தார்களின் இறைவனால் இறக்கப்பட்டுள்ளது” என்று அதே அத்தியாயத்தின் தொடர்ச்சிகளை ஓத செவிமடுத்த உமர் பின் கத்தாப்,  இஸ்லாமை மனதளவில் கடுகளவு ஏற்றுக் கொள்ள  விருப்பங்கொண்டாலும், தனது மூதாதையர்கள் விட்டுச் சென்ற வழிமுறைகளையும் சடங்குகளையும் கடைப்பிடிக்க வேண்டுமென்று தீவிரமாக இருந்தார்கள்.

    அந்த நிலையில், உமர் பின் கத்தாபுக்கு தனது சகோதரியும் அவரது கணவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்ட செய்தி கிடைத்தது. ஆத்திரமடைந்தவர்களாக அவருடைய சகோதரியின் வீட்டிற்கு விரைந்தார்கள். அங்கு அவர்கள் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்ததை உமர் கேட்டுவிட்டார்கள். உமர் வருவதை அறிந்து அந்த ஏட்டை மறைத்து வைத்தார் உமரின் சகோதரி. அனுமதி பெற்று உள்ளே நுழைந்த உமர் “நீங்கள் மதம் மாறிவிட்டீர்களா?” என்று ஆவேசமாகக் கேட்டார்.

    அதற்கு உமரின் சகோதரியின் கணவர் “உமரே, உன்னுடைய மார்க்கத்தில் இல்லாதது, சத்தியமானது வேறொரு மார்க்கத்தில் இருந்தால் உன் கருத்து என்ன?” என்று கேட்டார். கடுஞ்சினம் கொண்டு தனது சகோதரியின் கணவர் என்றும் பாராமல் அவரை அடித்து மிதித்தார் உமர். உமரை விலக்க வந்த தனது சகோதரியையும் கன்னத்தில் அறைந்து காயத்தை ஏற்படுத்தினார்.

    உடனே அவரது சகோதரி “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்” என்று உரக்கக் கூறினார். ஏற்கெனவே கொள்கையில் முஸ்லிம்களுக்கு இருந்த உறுதியையும் அதற்காகச் சோதனைகள் அனைத்தையும் தாங்கிக் கொள்வதையும் பார்த்து ஆச்சரியமடைந்திருந்த உமர்,  தனது சகோதரியின் உறுதியையும் கண்டு திக்குமுக்காடிப் போனார்.

    "நீங்கள் ஓதிக் கொண்டிருந்ததைக் காட்டுங்கள்" என்று உமர் கேட்டார். அவரது சகோதரி “நீ அசுத்தமாக இருக்கிறாய், குளித்து வா தருகிறேன்” என்று கூறி அதைத் தர மறுத்துவிட்டார். பிறகு குளித்து வந்தவுடன் திருமறையைக் கையிலேந்தி “பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம் (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்)” என்று ஓதியவுடன் “ஆஹா! என்ன தூய்மையான பெயர்கள்” என்று கூறி, தொடர்ந்து அத்தியாயம் ‘தாஹா’வை ஓதிப் பார்த்தார்.

    நெகிழ்ந்தார். உண்மையை அறிந்து கொண்டவராக நபி முஹம்மது (ஸல்) அவர்களைத் தேடி வந்து “அஷ்ஹது அல்லாஇலாஹஇல்லல்லாஹ் வ அன்னக்க ரஸுலுல்லாஹ். அதாவது வழிபாட்டிற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அல்லாஹ்வின் தூதர் நீங்கள் என்றும் சாட்சி கூறுகிறேன்” என்று கூறி இஸ்லாமைத் தழுவினார். இதனைப் பார்த்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் “அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெயரிவன்” என்று முழங்கினர்.

    முஸ்லிம்களின் வழிக்கு ஒளிகாட்ட மற்றொரு ஒளி கீற்று மின்னத்தொடங்கியது.

    (அல்குர்ஆன் 69:40-43, ஸஹீஹ் புகாரி 4:63:3862, 3867 )

    - ஜெஸிலா பானு, துபாய்
    Next Story
    ×