search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எத்தனையோ இன்னல்களைத் தாங்கிய உத்தம நபிகள்
    X

    எத்தனையோ இன்னல்களைத் தாங்கிய உத்தம நபிகள்

    நபி முஹம்மது (ஸல்) அவர்கள் அடிபட்டும், காயப்பட்டும், குத்தலான பேச்சுக்கு ஆளாகியும் நபித்துவத்தின் ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றன.
    “உமக்குக் கட்டளையிடப்பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக; இணைவைத்து வணங்குபவர்களைப் புறக்கணித்துவிடுவீராக!” என்ற திருக்குர்ஆனின் வசனத்திற்கேற்ப நபி முஹம்மது (ஸல்) வெளிப்படையாக அக்கிரமக்காரர்களின் கண்களுக்கு முன்பாகவே தொழுது வந்தார்கள். வெளிப்படையாகவும் இரகசியமாகவும் மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்து வந்தார்கள். இதனால் நபிகளாரை சமயம் பார்த்து ஒழித்துக் கட்டவேண்டுமென்று சில குறைஷிகள் முடிவு செய்தனர்.

    குறைஷிகள் 'ஹஜருல் அஸ்வத்'திற்கு (அதாவது கஅபத்துல்லாவில் இருக்கும் சொர்க்கத்து கருங்கல்) அருகில் குழுமியிருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்து அவர்கள் எப்போதும் செய்வதுபோல் 'ஹஜருல் அஸ்வத்'தைத் தொட்டுவிட்டு, தவாஃபை தொடங்கினார்கள். தவாஃப் என்றால் இறையில்லமான கஅபாவைச் சுற்றி வருதல்.

    அப்படிச் செய்யும்போது குழுமியிருந்தவர்கள் ஒரே பாய்ச்சலாக நபி (ஸல்) அவர்கள் மீது பாய்ந்து, நபிகளாரின் போர்வையையே அவர்களின் கழுத்தில் போட்டு அவர்களின் மூச்சு திணறும்படி கடுமையாக நெறித்தனர். அப்போது அபூபக்கர் (ரலி) வந்து குறைஷிகளைத் தடுத்து விலக்கிவிட்டு “தனது இறைவன் அல்லாஹ் ஒருவன்தான் என்று கூறியதற்காகவா ஒருவரைக் கொலை செய்கிறீர்கள்?” என்று கண்ணீர் மல்கக் கேட்டார்கள். குறைஷிகள் அபூபக்கரையும் விடவில்லை, அவரையும் தாக்கிய பிறகே அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இப்படியே நபி முஹம்மது (ஸல்) அவர்கள் அடிபட்டும், காயப்பட்டும், குத்தலான பேச்சுக்கு ஆளாகியும் நபித்துவத்தின் ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றன. ஆறாவது ஆண்டில் ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலைக்கருகில் அமர்ந்திருந்தபோது  நபி (ஸல்) அவர்களை அபூ ஜஹ்ல் கடும் வார்த்தைகளால் காரணமில்லாமல் தூற்றினான். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு எவ்வித பதிலும் கூறாமல் வாய்மூடி மௌனமாகவே இருந்தார்கள்.

    வம்பிழுத்தும் பதில் பேசாத நபிகளாரை, அபூஜஹ்ல் ஒரு கல்லால் நபிகளாரின் மண்டையில் அடித்துக் காயப்படுத்திவிட்டு ஒன்றுமே தெரியாததுபோல் கஅபாவிற்கு அருகில் மற்ற குறைஷிகளோடு போய் அமர்ந்து கொண்டான். நபி (ஸல்) அவர்களின் தலையிலிருந்து இரத்தம் கசிந்தது. இக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பணிப் பெண், வேட்டையிலிருந்து வில்லுடன் வந்து கொண்டிருந்த ஹம்ஜாவிடம் இச்சம்பவத்தைக் கூறினார். ஹம்ஜா (ரலி) குறைஷிகளில் மிகவும் வலிமைமிக்க வாலிபராக இருந்தார். தனது குடும்பத்தைச் சேர்ந்த பாசத்திற்குரிய ஒருவர் இழிவாக்கப்படுவதைப் பொறுக்கமுடியால் சினம்கொண்டு எழுந்தார்.

    கஅபாவிற்கு அருகில் அபூஜஹ்லைக் கண்டு “ஏ! கோழையே! எனது சகோதரனின் மகனையா திட்டிக் காயப்படுத்தினாய்! நானும் அவரது மார்க்கத்தில்தான் இருக்கிறேன்” என்று கூறி தனது வில்லால் அவனது தலையில் அடித்துப் பெரும் காயத்தை ஏற்படுத்தினார். அதுவரை இஸ்லாமை ஏற்காத ஹம்ஜா (ரலி) தமது நேசத்திற்குரிய நபி முஹம்மது (ஸல்) காயப்பட்டதைப் பொறுக்கமுடியாமல் இஸ்லாமை ஏற்றதாகச் சொன்னவர் அதன் பிறகு அல்லாஹ்வின் அருளால் இஸ்லாமைப் புரிந்து கொண்டு, வலிமை வாய்ந்த மார்க்கத்தை அவர் உறுதியாக பற்றிக் கொண்டார்.

    (திருக்குர்ஆன் 15:94, ஸஹீஹ் புகாரி 4:62:3678, சீறா இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்)

    - ஜெஸிலா பானு.

    Next Story
    ×