search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெருமானாருக்கு நேர்ந்த தொடர் இன்னல்கள்
    X

    பெருமானாருக்கு நேர்ந்த தொடர் இன்னல்கள்

    மக்காவில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் நிறைவேற்றப்படும் என்று நம்பியிருந்தவர்களுக்கு நபிகளாரின் பிரார்த்தனை அச்சத்தையும் கவலையையும் தந்ததே தவிர அவர்கள் நபிகளாருக்குத் தந்து கொண்டிருந்த இன்னல்கள் தீரவில்லை.
    மக்காவில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் நிறைவேற்றப்படும் என்று நம்பியிருந்தவர்களுக்கு நபிகளாரின் பிரார்த்தனை அச்சத்தையும் கவலையையும் தந்ததே தவிர அவர்கள் நபிகளாருக்குத் தந்து கொண்டிருந்த இன்னல்கள் தீரவில்லை.

    இஸ்லாமிய அழைப்புப் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்த நபி முஹம்மது (ஸல்) அவர்களை, பலவகையில் குறைஷியினர் எதிர்த்தும், நபிகளாரின் அழைப்புப் பணியை நிறுத்த முடியவில்லை. நண்பரானாலும் எதிரியானாலும் நபிகளாரின் மீது அவர்கள் நன்மதிப்பே வைத்திருந்ததனர்.

    அபூதாலிபும் குறைஷியர்கள் பின்பற்றும் மார்க்கத்தில் இருந்ததால், அவரது சகோதரரின் மகனான நபி முஹம்மத்தை, அபூதாலிபின் பாதுகாப்பிலிருந்து விடுவிக்கும்படி குறைஷிகள் அபூதாலிபுக்கு நெருக்கடி தந்தும் பயமுறுத்தியும் அபூதாலிப் பணியவில்லை. நபிகளாரின் தந்தையின் சகோதரரும் குறைஷிகளின் தலைவர்களில் ஒருவனுமான அபூ லஹப் மற்றும் அவனது மனைவி உம்மு ஜமீல், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நபி முஹம்மது (ஸல்) அவர்களைச் சொல்லாலும் செயலாலும் காயப்படுத்தினர்.

    நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் கதீஜா (ரலி) அவர்களுக்கும் நான்கு மகள்களும் இரு மகன்களும் இருந்தனர். மகள்கள் ருகையா, உம்மு குல்ஸும், ஸைனப் மற்றும் ஃபாத்திமா. மகன்கள் அப்துல்லாஹ் மற்றும் காசிம். இதில் மகள்களான ருகையா மற்றும் உம்மு குல்ஸும் அவர்களை அபூ லஹபின் மகன்களான உத்பா மற்றும் உதைபாவுக்கு மணமுடித்துத் தந்திருந்தார்கள். நபிகளார் அழைப்பு பணியை நிறுத்தவில்லையென்றால் மகள்களை விவாகரத்துச் செய்து வீட்டுக்கு அனுப்பிவிடுவதாக அச்சுறுத்தினான் அபூ லஹப். நபிகளார் அடிபணியாததால் அபூ லஹப் தனது மகன்களை நிர்ப்பந்தித்து விவாகரத்துச் செய்ய வைத்துவிட்டான்.

    நபி (ஸல்) அவர்களின் மகன்கள் இருவரும் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். நபிகளாரின் மகன் அப்துல்லாஹ் மரணமடைந்த போது “முஹம்மது சந்ததியற்றவராகி விட்டார்” என்று அபூலஹப் தனது மகிழ்ச்சியைக் கொண்டாடினான். அந்த அளவுக்குக் கொடூரமானவன் அபூ லஹப். அபூ லஹப்பின் மனைவியும் நபிகளாரைக் கண்டாலே தூற்றுவாள், நபிகளார் செல்லும் வழியில் முட்களைப் பரப்புவாள், புகைந்து கொண்டிருக்கும் அவள் மனம் நபிகளாரைப் பற்றிப் பொய்யுரைத்துக் கொண்டிருக்கும். திருக்குர்ஆனில் இவளை ‘விறகைச் சுமப்பவள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அபூ லஹப் மற்றும் அவரது மனைவி கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் புகுவார்கள் என்றும் திருக்குர்ஆனில் வந்துள்ளது.

    அபூ லஹப்பை போல் அபூ ஜஹ்லும் மிகக் கொடூரமானவன். நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருந்தபோது அபூ ஜஹ்லும் அவனுடைய தோழர்களும் அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் கர்ப்பப்பையை வரவழைத்து அதனை முஹம்மத் (ஸல்) 'ஸஜ்தா' செய்யும்போது அதாவது மண்டியிட்டுச் சிரம் தாழ்த்தி இறைவனை வழி்படும்போது நபிகளாரின் முதுகின் மீது போட்டுவிட்டு இறைமறுப்பாளர்கள் ஒருவரின் மீது ஒருவர் விழுந்து சிரித்தனர்.

    நபி (ஸல்) அவர்களோ தலையை உயர்த்த முடியாதவர்களாக ஸஜ்தாவிலேயே இருந்தார்கள். அப்போது நபிகளாரின் மகள் ஃபாத்திமா (ரலி) அங்கு சென்று, நபி(ஸல்) அவர்களின் முதுகின் மீது போடப்பட்டிருந்ததை எடுத்து அப்புறப்படுத்தினார்கள்.

    நபிகளார் தலையை உயர்த்தி 'இறைவா! குறைஷிகளை நீ கவனித்துக் கொள்வாயாக' என்று மூன்று முறை கூறினார்கள். மக்காவில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் நிறைவேற்றப்படும் என்று நம்பியிருந்தவர்களுக்கு நபிகளாரின் பிரார்த்தனை அச்சத்தையும் கவலையையும் தந்ததே தவிர அவர்கள் நபிகளாருக்குத் தந்து கொண்டிருந்த இன்னல்கள் தீரவில்லை. இருப்பினும் நபிகளாரின் இஸ்லாமிய அழைப்பு பணியும் ஓயவில்லை.

    தஃப்ஸீர் இப்னு கஸீர், திருக்குர்ஆன் 111:1-5, ஸஹீஹ் புகாரி 1:4:240

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×