search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நபி வழி வாழ்ந்து இறையருள் பெறுவோம்
    X

    நபி வழி வாழ்ந்து இறையருள் பெறுவோம்

    “இறைவனின் படைப்புகள் (யாவும்) இறைவனின் குடும்பத்தை சார்ந்தவையாகும். அவனது (அக்) குடும்பத்திற்கு பயனளிப்போரே, அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு மிக விருப்பத்திற்குரியோர் (ஆவர்)”.
    அகன்று விரிந்த இப்பெருவெளியில், இருப்பவை யாவும் ஒரு நாள் காணாமல் போய்விடும். ஆனால் ஆதி தொட்டே இருக்கின்ற ஏக இறைவன் என்றும் நிலையானவன்’ என்பதை குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

    ‘இதன் மீது இருக்கின்ற ஒவ்வொன்றும் அழிந்துவிடக் கூடியது தான். (ஆனால்) வல்லமையும், சங்கையும் உடையவனான உம் முடைய ரப்பின் (இறைவனின்) திருமுகம் (மட்டுமே என்றும்) நிலைத்திருக்கும்’. (55:26-27)

    இறைவன் ஈடு இணையற்றவன், ஒப்பிடமுடியாதவன், தனித்து இயங்குபவன். எல்லாமே அவனைச் சார்ந்து தான் இயங்க முடியும். நாமின்றி அவன் உண்டு, ஆனால் அவனின்றி நாமில்லை. அந்த எல்லையில்லாத இறைவனின் தனித்துவம் குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு பிரகடனப்படுத்துகிறது:

    “(நபியே!) நீர் கூறும் ‘அல்லாஹ்’ ஒருவனே, அவன் (எவருடைய) தேவையுமற்றவன். அவன் (எவரையும்) பெறவும் இல்லை, (எவராலும்) பெறப்படவும் இல்லை, அவன் (ஒப்பு நோக்கமுடியாத) தனித்தவன்” (112:1-4).

    எவருடைய தேவையுமற்ற இறைவன், தேவையுடைய படைப்புகள் யாவும் பெற வேண்டும் என்பதற்காகவும், உடலாலும், மனதாலும், பொருளாலும் தியாகம் செய்து உயர்ந்த லட்சியத்தை மனிதகுலம் அடையவேண்டும் என்பதற்காகவும், கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற நற்காரியங்களை நபிகளாரைக் கொண்டு கடமையாக்கி, நமக்கு நல்வழி காட்டி உள்ளான்.

    அதேநேரத்தில், ‘இறைவன் கடமையாக்கியதை மறந்து, கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்ற மனோபாவத்தில் ஏக இறைவனை நிராகரித்து, உலக சுகத்தை பெறுவதற்காக பாவங்களை பயமின்றி செய்வோருக்கு இழிவு தரும் வேதனை உண்டு’ என்பதை குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

    “நிராகரிப்பவர்கள், நரகத்தின்பால் கொண்டு வரப்படும் நாளில், உங்களுடைய இன்பங்களை உங்களது உலக வாழ்க்கையின் போதே நீங்கள் (செலவு செய்து) போக்கி விட்டீர்கள். அவற்றைக் கொண்டு சுகம் அனுபவித்தீர்கள். நீங்கள் நியாயமின்றி பூமியில் பெருமையடித்தீர்கள். அதன் காரணத்தாலும், பாவங்களை (பயமின்றி) செய்த காரணத்தாலும், இழிவடைந்ததையே நீங்கள் கூலியாக வழங்கப்படுவீர்கள் (என்று கூறப்படும்)”. (46-20)

    எல்லா சுகத்தையும் இங்கே அனுபவித்துவிட வேண்டும் என்று மனிதன் துடிக்கின்றான். அதனை அடைவதற்காக பல்வேறு பாவகாரியங்களில் ஈடுபடுகின்றான். என்னைப் போன்று யாரும் உண்டா? என பெருமை பேசுகின்றான். அதன் முடிவு இழிவு தரும் வேதனையை அவன் விலை கொடுத்து வாங்குகின்றான் என்பதையே இந்த வசனம் நமக்கு நினைவூட்டுகிறது.

    இறைவனைப் பற்றி தெரிந்து கொள்ளாமலும், அவனது பேராற்றலின் அத்தாட்சிகளை புரிந்து கொள்ளாமலும், மனிதன் வீணாக தனது வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கின்றான். உண்மையான அவனது இறைவன் யார்? என்பதை எப்படி அறிந்து கொள்வது என்பதற்காக நபிகளாரை இறைவன் இவ்வாறு கேட்கச் சொல்கின்றான்:

    “வானங்களையும், பூமியையும் படைத்தது யார்? என்று (நபியே) நீர் அவர்களிடம் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று அவர்கள் உறுதியாக கூறுவார்கள். (அதற்கு) நீர் ‘அல்ஹம்து லில்லாஹ்’ (புகழ் எல்லாம் இறைவனுக்கே சொந்தம்) என்று கூறுவீராக. எனினும் அதிகமானோர் (இதனை) அறியமாட்டார்கள்”. (31-25)

    வானம், பூமி படைக்கப்பட்டிருப்பதும், பல்வேறு மொழிகள் பேசப் படுவதும், பல்வேறு நிறத்தையுடைய மனிதர்கள் வாழ்வதும் இறைவனின் அத்தாட்சிகள் என்பதை குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

    “வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், உங்களுடைய மொழிகளும், உங்களுடைய நிறங்களும் மாறுபட்டு இருப்பதும், இறைவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் அறிவுடையோருக்கு உறுதியான அத்தாட்சிகள் பல உள்ளன” (30:22).

    நிறங்களும் மொழிகளும் வேறுபட்டு இருப்பது என்பது வேற்றுமை பாராட்டுவதற்காக அல்ல. ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்வதற்காகவும், நிறத்தாலும், மொழியாலும் வேறுபட்டிருந்தாலும் நாமெல்லாம் ஒரே இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்ற ஏகத்துவத்தை உணர்வதற்காகவுமே என்பதை இவ்வசனம் அறிவுறுத்துகின்றது.

    ஒருவரை ஒருவர் அடித்து நாசப்படுத்துவதற்காக உலகில் நாம் மனிதர்களாக பிறக்கவில்லை. ஒருவர் மற்றவரை வாழ வைப்பதற்காகவே இங்கு நாமெல்லாம் பிறந்துள்ளோம் என்பதை புரிந்து கொண்டு வாழும் போது தான் மனிதன் பரிபூரணமான வாழ்வை நோக்கி பயணித்தவனாகிறான்.

    இறைவனின் படைப்புகளுக்கு பயன் அளிக்கும் வண்ணமே நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து இறைதூதர் நபி (ஸல்) அவர்கள் கூறுவதை பார்ப்போம்:

    “இறைவனின் படைப்புகள் (யாவும்) இறைவனின் குடும்பத்தை சார்ந்தவையாகும். அவனது (அக்) குடும்பத்திற்கு பயனளிப்போரே, அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு மிக விருப்பத்திற்குரியோர் (ஆவர்)”.

    பிறப்பும், இறப்பும் மனித வாழ்வின் இருவேறு முனைகளாகும். பிறப்பு என்பது தொடங்கி வைக்கின்றது. இறப்பு என்பது முடித்து வைக்கின்றது. இரண்டுமே இறைவனின் நாட்டப்படி தான் நடக்கின்றது.

    பிறந்ததினால் தானே இறக்கின்றோம். அதனால் இறப்பே நிச்சயமானது; மிக ஆழமான உண்மையாகவும் உள்ளது. இறைவனோடு நம்மை மீட்டி வைக்கின்ற பணியை இந்த இறப்பு தான் செய்கின்றது. எனவே இறப்பு வருவதற்கு முன் ஏக இறைவனை வணங்கியும் அவனது படைப்புகளோடு இணங்கியும் வாழ பழகிக் கொள்ளவேண்டும். அத்தகைய ஏகத்துவ வாழ்க்கையை தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்கள் வாழ்நாள் எல்லாம் கடைப்பிடித்து வாழ்ந்து காட்டினார்கள். நபிகளாரின் வழிநின்று நாம் அனைவரும் ஏகத்துவ வாழ்வு வாழ்ந்து நலம்பெற இறைவன் பேரருள் புரிவானாக, ஆமின்.

    மு. முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.
    Next Story
    ×