search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாமிய புத்தாண்டு
    X

    இஸ்லாமிய புத்தாண்டு

    முஹரம் 10-ம் நாள் ‘ஆஷுரா தினமாக’ கடைப்பிடிக்கப்படுகிறது. முஹரம் 9, 10 நாட்களிலோ அல்லது 10, 11 நாட்களிலோ நோன்பு நோற்பது விரும்பத்தக்கது (’முஸ்தஹப்) ஆகும்.
    நபிகளார் மதீனா வரும் செய்தியை அறிந்து மகிழ்ந்த மக்கள் வீதிகளையும், தங்கள் வீடுகளையும் அலங்கரித்தனர். நபிகளாரை வரவேற்க மதீனாவில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    அதுபோன்ற ஒரு நாளை வரலாற்றில் மதீனா கண்டதில்லை. நபிகளார் வந்ததும், தங்கள் இல்லத்திலேயே தங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

    நபிகளார் சிந்தித்து ஒரு முடிவு எடுத்தார்கள்.

    அங்கு திரளாக திரண்டிருந்தவர்களை நோக்கி, “யாருடைய வீட்டில் வசிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் முடிவு என் வசத்தில் இல்லை. அது இறைவனின் விருப்பத்தைச் சார்ந்தது. நான் அமர்ந்திருக்கும் ஒட்டகத்தை அதன் போக்கில் விடுகிறேன். அது எங்கு போய் நிற்குமோ, அதையே நான் தங்குவதற்கு இறைவன் நிர்ணயித்துள்ள இடமாகக் கருதி அங்கே தங்குவேன்” என்றார்கள்.

    இதன் பின்னர் ஒட்டகத்தின் மூக்கணாங்கயிற்றைக் கையில் இருந்து லேசாக நழுவ விட்டு அதன் போக்கில் செல்ல விட்டார்கள்.

    ஒட்டகம் நகர்ந்தது; ‘ஒட்டகம் நம் வீட்டின் முன்னே நிற்காதா?’ என்று ஒவ்வொரு வீட்டின் சொந்தக்காரர்களும் ஏங்கினார்கள். அது தங்கள் வீட்டைக் கடந்து செல்வதைக் கண்டதும் ஏமாற்றம் அடைந்தனர். அது யார் வீட்டின் முன்பு நிற்கப் போகிறதோ, அத்தகைய பேறு பெற்றவர் யார் என்பதை அறியும் ஆவலில் ஒட்டகத்தின் பின்னே ஓடினார்கள்.

    இறுதியில் அபூ அய்யூப் (ரலி) அவர்கள் வீட்டு முன்பு ஒட்டகம் நின்றது. நபிகளார் ஒட்டகத்தில் இருந்து இறங்கவில்லை. தான் பற்றி இருந்த கயிற்றை சற்று தரையில் விட்டார்கள். சிறிது தூரம் சென்ற ஒட்டகம் மீண்டும் அதே இடத்திற்கு வந்து படுத்துக் கொண்டது.

    இதைக் கண்டதும் அபூ அய்யூப் அளப்பரிய ஆனந்தம் அடைந்தார். அவர் நபிகளாரின் தாய் வழிப்பாட்டனார் வழியில் உறவினர் ஆவார். இங்கு ஏழு மாதங்கள் வரை நபிகளார் தங்கி இருந்தார்கள்.

    மதீனா நகரில் ‘மஸ்ஜிதுந் நபவி’ என்ற புனிதப் பள்ளி எழுப்பப்பட்டு, நபிகளாரின் குடும்பம் தங்குவதற்கு அதையொட்டி வீடுகள் அமைக்கும் வரை அபூ அய்யூப் இல்லமே நபிகளாரின் தங்கும் இடமாகத் திகழ்ந்தது.

    மதீனா நகரத்தின் முந்தைய பெயர் ‘யத்ரிப்’ என்பதாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கு சென்று குடியேறியதன் நினைவாக மக்கள் தங்கள் ஊரின் பெயரை ‘மதீனத்துந் நபி’ (நபிகளாரின் பட்டணம்) என்று அழைக்கலானார்கள். அதுவே சுருங்கி ‘மதீனா’ ஆனது.

    நபிகளாரின் காலத்தில் ஹிஜ்ரி போன்ற எந்தவிதமான வருடக்கணக்கும் வழக்கத்தில் இல்லை. முஹரம் தொடங்கி துல்ஹஜ் வரையிலான 12 அரபு மாதப் பெயர்கள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன.

    “(போர் செய்வது விலக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹரம் ஆகிய) புனித மாதத்திற்குப் புனித மாதமே ஈடாகும்” (திருக்குர்ஆன்-2:194) என்றும்,

    “நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் -அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்தே, மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு மாதங்கள் ஆகும். அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை. இதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள்” (திருக்குர்ஆன்-9:36) என்றும் மாதங்கள் பற்றிய குறிப்பு குர்ஆனில் காணப்படுகிறது.

    நபிகளார் மறைந்து ஆறு ஆண்டுகள் கழிந்த நிலையில் உமர் (ரலி) அவர்கள் கலீபாவாக (ஜனாதிபதி) இருந்த நேரம். ஒருநாள் கூபா நகரின் கவர்னர் அபூ மூசா அஷ்ஹரி (ரலி) அவர்களிடம் இருந்து கலீபாவுக்கு ஒரு கடிதம் வந்தது.

    அதில், “ஆண்டுக் கணக்கு என்று எதுவும் நம்மிடம் இல்லை. இதனால் அவ்வப்போது நடைபெறும் நிகழ்ச்சிகள் எந்த ஆண்டு நிகழ்ந்தது என்பதை அறிய முடியவில்லை. எனவே இதற்கு தாங்கள் விரைந்து நல்ல முடிவு எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

    இதன் அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கான ஆண்டை முடிவு செய்ய கலீபா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    நபிகளாரின் பிறந்த தினம், நபித்துவம் பெற்ற தினம், ‘ஹிஜ்ரத்’ தினம், அவர்கள் மரணித்த தினம் ஆகியவைகளில் ஏதேனும் ஒன்றை ஆண்டுக் கணக்காகக் கொள்ளலாம் என்று கருத்துகள் மொழியப்பட்டன.

    இறுதியில் அலி (ரலி) அவர்களின் யோசனை வழி மொழியப்பட்டு ‘ஹிஜ்ரத்’ தினத்தை ஆண்டுக் கணக்காகக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

    நபிகளாரும், தோழர்களும் தங்களைக் தற்காத்துக் கொள்வதற்காக கி.பி. 622-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி மக்காவில் இருந்து மதீனா நோக்கி பயணம் செய்தார்கள். இதுவே இஸ்லாமிய ஆண்டின் (ஹிஜ்ரி ஆண்டு) தொடக்கமாக முடிவானது. முஹரம் மாதத்தின் முதல் நாளே இஸ்லாமியர்களின் புத்தாண்டானது.

    உலகம் முழுவதும் கிரிகோரியன் காலண்டர் முறை பின்பற்றப்படுகிறது. இது சூரியன் சுழற்சியை மையமாக வைத்து ஆண்டுக்கு 365 நாட்கள் என்று கணக்கிடப்படுகிறது. இதன்படி ஜனவரி முதல் டிசம்பர் வரை 12 மாதங்கள் ஆகும்.

    சந்திரனின் சுழற்சியைக் கொண்டு இஸ்லாமியர்களின் ஆண்டுக் கணக்கு கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டுக்கும் முஹரம், ஸபர், ரபியுல் அவ்வல், ரபியுல் ஆகிர், ஜமாத்துல் அவ்வல், ஜமாத்துல் ஆகிர், ரஜப், ஷஅபான், ரமலான், ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ் என்று 12 மாதங்கள் உண்டு.

    ஒவ்வொரு மாதத்திற்கும் முப்பது நாட்கள் அல்லது இருபத்தொன்பது நாட்கள் இருக்கும். இது சந்திரனின் நிலையைப் பொறுத்து அமையும்.

    முஹரம் 10-ம் நாள் ‘ஆஷுரா தினமாக’ கடைப்பிடிக்கப்படுகிறது. முஹரம் 9, 10 நாட்களிலோ அல்லது 10, 11 நாட்களிலோ நோன்பு நோற்பது விரும்பத்தக்கது (’முஸ்தஹப்) ஆகும்.

    முஹரம் மாதத்தில்தான் உலகம் படைக்கப்பட்டது; ஆதி நபி ஆதம் அவருடைய மனைவி ஹவ்வா படைக்கப்பட்டதும் முஹரம் பத்தாம் நாளில்தான்.

    முஹரம் மாதத்தில் பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. கர்பலா களத்தில் நபிகளார் பேரர் ஹுசைன் (ரலி) உயிரை அர்ப்பணம் செய்ததும் இதே நாளில்தான்.
    Next Story
    ×