search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாமின் வளர்ச்சியும் குறைஷிகளின் கோபமும்
    X

    இஸ்லாமின் வளர்ச்சியும் குறைஷிகளின் கோபமும்

    நபிகளார் தைரியமாக முஸ்லிம்களான நம்பிக்கையாளர்களுடன் இஸ்லாமிய அழைப்பை வெளிப்படையாகச் செய்யத் தொடங்கினர்.
    “நீர் உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!” என்ற குர்ஆன் வசனம் அருளப்பட்ட போது நபிகளார் தைரியமாக முஸ்லிம்களான நம்பிக்கையாளர்களுடன் இஸ்லாமிய அழைப்பை வெளிப்படையாகச் செய்யத் தொடங்கினர்.

    ஒருவருக்கொருவர் உதவி புரிய வேண்டும், சகோதரத்துவத்தை நிலைநாட்ட வேண்டுமென்று தனது நெருங்கிய உறவினர்களான ஹாஷிம் கிளையினரையும் மற்றவர்களையும் சந்தித்துப் பேசியபோது, நபிகளாரின் தந்தையின் சகோதரரின் மகன் அபூ லஹப் “உனது தந்தையின் சொந்தங்களுக்கு நீ பெரும் தீங்கிழைக்கிறாய்.

    இந்த அழைப்பு மிகவும் இழிவானது. உன்னை மற்றவர்கள் தண்டிக்கும் முன் நாமே தடுத்துவிடுவோம்” என்று கோபத்துடன் பேசினான். ஆனால் நபிகளாரின் மீது பாசம்காட்டி வளர்த்த அபூதாலிப் “நான் உயிருடன் இருக்கும்வரை முஹம்மதை பாதுகாப்பேன், அவருக்கு உதவி செய்வேன். ஆனால் நான் காலகாலமாகப் பின்பற்றி வரும் மார்க்கத்தை விட்டுவிட மாட்டேன்” என்று உறுதியாகச் சொன்னார்.

    அதற்கு நபிகளார் “இரத்த பந்தத்திற்கான கடமைகளை நான் நிறைவேற்றுவேன். ஆனால் உங்களுடைய நன்மைக்கும் தீமைக்கும் நான் பொறுப்பாக முடியாது. அல்லாஹ் மட்டுமே உங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியும். அல்லாஹ்விற்கு மற்றொன்றை இணையாக்கினால் கடும் வேதனையை நீங்கள் எதிர்நோக்குவீர்களென உங்களையெல்லாம் எச்சரிக்கிறேன்” என்று எல்லாத் தருணங்களிலும் எல்லாக் கிளையினரிடமும் சொல்லி வந்தார்கள்.

    நபிகளார் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்லமாட்டார் என்று தெரிந்தவர்கள் இது குறித்து யோசிக்க ஆரம்பித்தனர். ஆனால் அபூ லஹப் “நீ நாசமாகப் போ. இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?” என்று ஆதங்கப்பட்டான். அப்போது ‘அபூ லஹபின் கரங்கள் நாசமாகட்டும். அவனும் நாசமாகட்டும்’ என்று தொடங்கும் இறைவசனம் அருளப்பட்டது.

    இஸ்லாமிய அழைப்பை நிறைவேற்றும்போது கண்டிப்பாக மக்களிடமிருந்து எதிர்ப்பு வரும். பொய்யுரைக்கிறார், சூனியம் செய்கிறார், பைத்தியகாரர் என்ற அவச்சொல்லையெல்லாம் நபிகளார் சந்திக்க நேரிடும் என்பதாலும் அவற்றை முஹம்மது நபி (ஸல்) தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் மற்ற நபிகளின் வரலாறுகளை முன்னுதாரணமாக இறைவசனங்களாக இறைவன் அருளியிருந்தான். அதைப் பற்றியெல்லாம் நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் தெரிந்தே வைத்திருந்தனர். அதனால் யாருடைய சொல்லும் அவர்களைப் பாதிக்கவில்லை. இஸ்லாமிய அழைப்பை தொடர்ந்தார்கள்.

    ஏகத்துவ அழைப்பிற்கு மக்களின் ஆதரவு பெருகியது. இஸ்லாமை ஏற்றவர்களுக்கும் அவர்களது குடும்பத்தில் இஸ்லாமை ஏற்காதவர்களுக்குமிடையே சிக்கல்கள் தோன்றின. நாளுக்கு நாள் இஸ்லாமின் வளர்ச்சி அதிகரித்தது. அதனைக் கண்டு குறைஷிகள் கோபமடைந்தனர்.

    திருக்குர்ஆன் 26:214, 111:1-5, ஸஹீஹ் புகாரி 5:65:4770

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×