search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாத்தை தழுவிக் கொண்ட முதலாமவர்கள்
    X

    இஸ்லாத்தை தழுவிக் கொண்ட முதலாமவர்கள்

    நபிகள் முஹம்மது (ஸல்) அவர்களைப் போல் அபூபக்ர் (ரலி) அவர்களும் பலரின் நேசத்திற்குரியவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் திகழ்ந்தார்கள்.
    முஹம்மது நபி (ஸல்) அவர்களின் இஸ்லாமிய அழைப்புப் பணி மிகவும் இரகசியமாகவே தொடங்கப்பட்டது. அதற்குக் காரணம் அரேபிய தீபகற்பத்தின் தலைமையான மக்காவை கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களின் நம்பிக்கைகளையும், வழிமுறைகளையும், கொள்கைகளையும் முற்றிலும் தகர்க்க முனைந்தால் அதன் எதிர்வினை அபாயகரமாக இருக்குமென்று தொடக்கத்தில் நபிகளார் தமது வீட்டிலிருந்தே அழைப்புப்பணியை ஆரம்பித்தார்கள்.

    அழைப்புப் பணியின் முதல் நாளில் இஸ்லாமை ஏற்றவர்களில் நபிகளாரின் நெருங்கிய நண்பர் அபூபக்ர் (ரலி) அவர்களின் சொல்லுக்கு மரியாதை இருந்தது. நபிகள் முஹம்மது (ஸல்) அவர்களைப் போல் அபூபக்ர் (ரலி) அவர்களும் பலரின் நேசத்திற்குரியவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் திகழ்ந்தார்கள். அதனால் அவர்களுக்கு நெருக்கமானவர்களான உஸ்மான் இப்னு அஃப்பான், ஸுபைர் இப்னு அவ்வாம், ஸஅது இப்னு அபீவக்காஸ், அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகியோரும், குறைஷி குலத்திலிருந்து பலரும், மற்ற குலத்திலிருந்து சிலரும் இஸ்லாமை முதன்முதலாக ஏற்றுக் கொண்டனர்.

    நபிகள் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நெருக்கமானவர்களிலிருந்து இஸ்லாமிய அழைப்புப் பணியை இரகசியமாகத் தொடங்க, அந்த நெருக்கமானவர்களின் நெருக்கமானவர்களும் குடும்பத்தார்களுமென்று கிட்டதட்ட 120 நபர்களுக்கு மேல் இஸ்லாமை ஏற்றனர். அவர்களை திருக்குர்ஆனில் ‘அஸ்ஸாபிகூனல் அவ்வலூன்’ அதாவது முந்தியவர்கள் முதலாமவர்கள் என்று போற்றப்பட்டுள்ளது.

    அந்த முதன்மையானவர்கள் அல்லாஹ்வை வணங்கும்போது திருப்தியடைந்ததால், அல்லாஹ்வும் அவர்களின் செயலால் திருப்தி அடைகிறான் என்றும் அவர்களுக்குச் சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான் என்றும் திருக்குர்ஆனில் வந்துள்ளது.

    இஸ்லாமை ஏற்றவர்கள் இரகசியமாகத் தொழுது வந்தார்கள்.  அந்தக் காலகட்டத்தில் தொழுகை கட்டாயமாக்கப்படவில்லை. இருப்பினும் அவர்கள் இத்தனை வேளை தொழுகை என்றில்லாமல் தங்களால் இயலும்போதெல்லாம் தொழுதார்கள். இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரினார்கள். அவர்களுக்காக அல்லாஹ் அனுப்பிய இறை வசனங்கள் மூலம் வந்த உபதேசங்களை முஸ்லிமானவர்கள் ஏற்றுக் கொண்டு பின்பற்றினர். அவ்வசனங்களால் அவர்களின் ஆத்மா வலுப்பெற்று மனங்கள் தூய்மையடைந்து, அதுவரை நடைமுறையில் இல்லாத ஒரு புதிய நாகரீகத்திற்கு அவர்களைத் தயார்படுத்தியது.

    இந்த இரகசிய இஸ்லாமிய அழைப்பு பற்றியும், இறை வசனங்களின் வருகை குறித்தும் குறைஷிகள் அறிந்தே இருந்தனர். ஆனால் அது அவர்களின் சிலை வணக்கங்களுக்குப் பங்கம் விளைவிக்காததால் இஸ்லாமிற்குத் திரும்பியவர்களை அவர்கள் விட்டு வைத்தனர். நபி முஹம்மது (ஸல்) அவர்களின் இஸ்லாமிய அழைப்பை சிலையை வணங்கும் மக்காவாசிகள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.


    (சீறா இப்னு ஹிஷாம், திருக்குர்ஆன் 9:100)

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×