search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இறை அழைப்பை ஏற்றுக் கொண்ட ஏந்தல் நபி
    X

    இறை அழைப்பை ஏற்றுக் கொண்ட ஏந்தல் நபி

    அல்லாஹ்வின் அருள்வாக்கை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.
    முதல் ‘வஹி’ அதாவது இறைச்செய்திக்கு பிறகு வேறு எந்த வாக்கும் இறைவனிடமிருந்து வராமல் இருந்தது. அதனால் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கவலையில் மனம் உடைந்துபோனார்கள். தாம் தான் ஏதேனும் தவறு செய்துவிட்டோமோ என்று தன்னைத்தானே நிந்தித்தவராக மலையிலிருந்து கீழே விழுந்துவிடலாமென்று மலை உச்சிக்குச் செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு முன் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தோன்றி, ‘முஹம்மதே, நீங்கள் உண்மையாகவே இறைத்தூதர்தாம்’ என்று கூறினார்கள்.

    இதைக் கேட்டு நபி (ஸல்) அவர்களின் மனம் பதற்றத்தில் இருந்து விடுபட்டது. அல்லாஹ்வின் அருள்வாக்கை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதற்காகவும் இறைவன் ‘வஹி’யை தாமதப்படுத்தி இருக்கலாம்.

    நபி (ஸல்) வழக்கம்போல் ஹிரா குகையில் தங்கியிருந்துவிட்டு, வீட்டுக்குச் செல்லும் வழியில் தன்னை அழைக்கும் சப்தம் மேலிருந்து கேட்கவே, முஹம்மது (ஸல்) தன் பார்வையை வானத்தை நோக்கி உயர்த்தினார்கள். அங்கு ஹிரா குகையில் கண்ட அதே வானவரை வானத்திற்கும் பூமிக்குமிடையே பிரமாண்டமான ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். இப்படி திடீரென பிரமாண்ட ஓர் உருவத்தைப் பார்த்த அதிர்ச்சியில் மூர்ச்சையுற்றுத் தரையில் விழுந்தார்கள். பிறகு மயக்கம் தெளிந்தவுடன் அவர்களுடைய வீட்டிற்கு ஓட்டம் பிடித்தார்கள்.

    வீட்டில் நுழைந்து நடுங்கியவர்களாக, தன் மனைவி கதீஜா (ரலி) அவர்களிடம் “என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள்” என்று நடுக்கத்துடன் சொன்னார்கள். மனைவி கதீஜாவும் நபி (ஸல்) அவர்களுக்குப் போர்வையை எடுத்துப் போர்த்தினார்கள்.

    அப்போது "போர்த்திக் கொண்டிருப்பவரே!! எழுந்து மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள், உம் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள், அசுத்தத்தை வெறுத்து உம் ஆடையைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்" என்ற திருக்குர்ஆனின் வசனங்கள் அந்தத் தருணத்தில் தரப்பட்டது.

    நபி முஹம்மது (ஸல்) அவர்களை, ஓய்வெடுக்கும் காலம் ஓய்ந்துவிட்டது, ஓர் உன்னதமான பணிக்கு ஆயுத்தமாக வேண்டும் என்பதான கட்டளையை நிறைவேற்ற நபிகள் எழுந்தார்கள்.

    அன்றைக்கு எழுந்தவர்தான் - தம்மிடம் அல்லாஹ்வினால் ஒப்படைக்கப்பட்ட மாபெரும் பொறுப்பைச் சுமந்து ஏகத்துவப் போராட்டத்திலும் இறையழைப்பிலும் தம்மைத் தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

    (ஸஹீஹ் புகாரி 7:91:6982, 3:59:3238, திருக்குர் ஆன் 74:1-5)

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×