search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆறுதல் சொல்லி அரவணைத்த அன்னை கதீஜா(ரலி)
    X

    ஆறுதல் சொல்லி அரவணைத்த அன்னை கதீஜா(ரலி)

    முதல் இறைச்செய்திக்குப் பிறகு சிறிது காலம் எந்த வேத அறிவிப்பும் வராமல் நின்று போயிருந்தது.
    நூர் மலையின் ஹிரா குகையில் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் இப்பிரபஞ்சத்தை ஆளும் மறைபொருளைக் குறித்த தேடலில் இருந்தபோது, அங்கு வானவர் ஜிப்ரீல் (அலை) தோன்றி, நபி முஹம்மது (ஸல்) அவர்களை ஓதச் சொன்னார்கள்.

    கனவாக மட்டுமே வந்து கொண்டிருந்த இறைச்செய்தி, முதன் முறையாக வானவர் ஜிப்ரீல் மூலம் அருளப்பட்டபோது, தமக்கு ஓதத் தெரிந்ததை தம்மாலேயே நம்ப முடியாமல், அந்த வசனங்களுடன் நடுங்கியவர்களாகவே வீடு வந்து சேர்ந்தார்கள் நபி முஹம்மது (ஸல்).

    தமது துணைவியார் கதீஜா (ரலி) அவர்களிடம் நடந்தவற்றை இதயம் படபடக்கச் சொல்லி 'தமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ?' எனப் பயப்படுவதாக நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபிகளாரை சமாதானப்படுத்தும்விதமாக கதீஜா (ரலி) “பயப்படாதீர்கள். நீங்கள் உறவினர்களுடன் இணங்கி நடப்பவர், வறியவர்களுக்காக உழைப்பவர், சிரமப்படுவோரின் சுமைகளைச் சுமந்து அவர்களுக்கு உதவியும் புரிகிறவர், விருந்தினர்களை உபசரிப்பவர், அப்படிப்பட்ட உங்களை அல்லாஹ் ஒருபோதும் இழிவுபடுத்தமாட்டான்” என்று ஆறுதல் சொன்னார்கள்.

    பிறகு தம் தந்தையின் உடன் பிறந்தவரான நவ்ஃபல் என்பவரின் மகன் 'வராக' என்பவரிடம், நபி முஹம்மது (ஸல்) அவர்களை அழைத்துச் சென்றார்கள். வராக கிறிஸ்துவராக இருந்தார். அவர் இன்ஜீல் வேதத்தை ஹீப்ரு மொழியில் எழுதியவர். கண் பார்வையற்ற வயோதிகர்.

    அவரிடம் நபி (ஸல்) பார்த்த செய்திகளை எடுத்துரைத்தார்கள். பொறுமையாக எல்லாவற்றையும் கேட்ட வரகா, “அந்த வானவர்தான் மூஸாவிடம் இறைவன் அனுப்பிய நாமூஸ்” என்று விஷயத்தைப் புரிந்து கொண்டார். சிறிது யோசித்த பிறகு “உங்கள் சமூகத்தார் உங்கள் நாட்டிலிருந்து உங்களை வெளியேற்றும் காலத்தில் நான் உயிருடன் திடமான ஆரோக்கியத்துடன் இருந்தால் நான் உங்களுடன் நிற்பேன்” என்றார்கள். அதைக் கேட்ட முஹம்மது (ஸல்) “என்ன, மக்கள் என்னை வெளியேற்றுவார்களா?” என்று அதிர்ந்தார்கள்.

    அதற்கு வரகா, “ஆமாம். நீங்கள் கொண்டு வந்திருக்கும் சத்தியத்தைப் போன்று எவர் கொண்டு வந்திருந்தாலும், அவரை மக்கள் பகைத்துக் கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். நீங்கள் வெளியேற்றப்படும் அந்நாளில் நான் உயிருடன் இருந்தால் நிச்சயமாக உங்களுக்குப் பலமாக உதவுவேன்” என்று உறுதியளித்தார்கள்.

    ஆனால் வரகா நீண்ட நாட்கள் வாழவில்லை.

    முதல் இறைச்செய்திக்குப் பிறகு சிறிது காலம் எந்த வேத அறிவிப்பும் வராமல் நின்று போயிருந்தது. அதனால் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள்.

    (ஆதாரம் - ஸஹீஹ் புகாரி 1:1:3, 7:91:6982)

    - ஜெஸிலா பானு.

    Next Story
    ×