search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அருட்குழந்தையால் செவிலித்தாய்க்கு கிடைத்த அனுகூலங்கள்
    X

    அருட்குழந்தையால் செவிலித்தாய்க்கு கிடைத்த அனுகூலங்கள்

    அல்லாஹ்வின் அருள் பெற்ற குழந்தை முஹம்மது (ஸல்) என்பதைப் புரிந்து கொண்டவர்களாக, செவிலித்தாயாக ஹலீமாவும் அவரது கணவரும் இன்முகத்துடன் குழந்தையை தமது கிராமத்திற்கு அழைத்து வந்தனர்.
    அல்லாஹ்வின் அருள் பெற்ற குழந்தை முஹம்மது (ஸல்) என்பதைப் புரிந்து கொண்டவர்களாக, செவிலித்தாயாக ஹலீமாவும் அவரது கணவரும் இன்முகத்துடன் குழந்தையை தமது கிராமத்திற்கு அழைத்து வந்தனர். 

    ஹலீமாவின் கிராமம் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்த பகுதி. அவர்களின் பூமி வறட்சியைக் கண்டிருந்தது. ஹலீமா தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பினார். விளைச்சல் இல்லாத பூமியிலும் ஹலீமாவின் ஆடுகள் மேய்ந்து, அவை வீடு திரும்பும்போது ஆடுகளின் மடி சுரந்து நிரம்பி இருந்தது. அந்தப் பாலை ஹலீமாவும் அவரது குடும்பத்தினரும் குடித்து வாழ்ந்தனர். இறைவனுக்கு நன்றி செலுத்தினர்.

    மடி நிரம்பி வரும் ஆடுகளைக் கண்டு மற்றவர்கள் ஆச்சர்யப்பட்டனர். அவர்கள் தங்கள் இடையர்களிடம், ஹலீமாவின் ஆடுகள் மேயும் பகுதியிலேயே தங்கள் ஆடுகளையும் மேய்க்கச் சொல்லி அனுப்பினார்கள். இருப்பினும் ஹலீமாவின் ஆடுகளைத் தவிர மற்ற எல்லா ஆடுகளின் மடிகளும் காய்ந்தே இருந்தன. ஆடுகளின் வயிறும் ஒட்டிக்காணப்பட்டது.

    இதெல்லாம் குழந்தை முஹம்மது (ஸல்) அவர்கள் வந்த நேரமென்று அறிந்தவர்களாக ஹலீமாவும் அவரது கணவரும் குழந்தையை மிகவும் பக்குவமாக வளர்த்தனர். குழந்தை கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஹலீமாவிடம் பால் குடித்தது. அதுவரை ஹலீமாவின் குடும்பத்தினர் இறைவனின் அனுகூலத்தால் பலவித பலன்களையும் நலன்களையும் பெற்று வந்தனர். அதன் காரணமாகவே அவர்களால் அக்குழந்தையைப் பிரிய மனம் வரவில்லை.
     
    இருப்பினும் தவணை முடிந்துவிட்டதால், தாய் ஆமினாவிடம் குழந்தையைக் கொண்டு வந்து தரும்போது ஹலீமா, ‘மக்காவில் பரவியிருக்கும் ஏதேனும் கொடிய நோய் குழந்தையைப் பாதித்துவிடும்’ என்று தாம் அஞ்சுவதாக முஹம்மது (ஸல்) அவர்களின் தாயார் ஆமீனாவிடம் சொல்லி வலியுறுத்தவே, அவர்களும் ஹலீமாவிடம் இன்னும் சில காலமிருக்க சம்மதம் தெரிவித்தார்.

    குழந்தையின் நலன் கருதி தாத்தா அப்துல் முத்தலிபும், தாயார் ஆமினாவும் குழந்தை முஹம்மது (ஸல்) அவர்களை இன்னும் சில காலம் ஹலீமாவுடன் தங்க அனுமதித்தனர்.

    அனுமதி பெற்ற ஹலீமா மீண்டும் தன் கிராமத்திற்கே குழந்தையை அழைத்து வந்தார். 

    (ஆதாரம்: சீறா இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்)

    - ஜெஸிலா பானு.

    Next Story
    ×