search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெரும் படையை வீழ்த்திய அபாபீல் பறவைக் கூட்டம்
    X

    பெரும் படையை வீழ்த்திய அபாபீல் பறவைக் கூட்டம்

    இறை இல்லத்தை அல்லாஹ்வே காத்துக் கொள்வான் என்று அப்ரஹாவிடம் சொல்லியதோடு அல்லாஹ்விடம் கஅபாவை காக்கும்படி பிரார்த்தித்தார்.
    யமன் நாட்டின் ஒரு நகரத்தின் ஆட்சியாளரான அப்ரஹா, மக்காவில் உள்ள கஅபாவிற்கு மக்கள் குவிவதைப் பொறுக்க முடியாமல், அதனைத் தகர்க்க யானைப் படையைத் திரட்டிக் கொண்டு மக்காவிற்குச் சென்றான். மக்காவின் தலைவர்களில் ஒருவரான அப்துல் முத்தலிப்பை சந்தித்தபோது, அவர் தமது ஒட்டகத்தைத் திரும்பக் கேட்டார் தவிர, கஅபாவை இடித்துவிடாதீர்கள் என்ற கோரிக்கையை வைக்கவில்லை. காரணம் அவர் திடமாக இறைவனை நம்பினார். ‘இறை இல்லத்தை’ அல்லாஹ்வே காத்துக் கொள்வான் என்று அப்ரஹாவிடம் சொல்லியதோடு அல்லாஹ்விடம் கஅபாவை காக்கும்படி பிரார்த்தித்தார்.

    ஒட்டகத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டு மக்கா நகரத்திற்குத் திரும்பிய அப்துல் முத்தலிப் அவர்கள், மக்களிடம் பாதுகாப்பான இடத்திற்குச் சென்றுவிடும்படி உத்தரவிட்டார்.  

    மறுநாள் காலையில் தம் படைகளோடு அப்ரஹா மக்கா நகரத்திற்குள் நுழைந்தான். பயிற்சியளிக்கப்பட்ட யானைகளோடு கஅபாவை நெருங்கினான். மக்களைக் கொலை செய்வதோ, மக்களுக்கு இடையூறு தருவதோ அப்ரஹாவின் நோக்கமாக இல்லை. மாறாக, கஅபாவை அழிக்க வேண்டுமென்ற ஒரே குறிக்கோளோடு வந்தவன் யானைகளுக்கு ஆணையிட்டான்.

    யானைகளை முன்னேறச் சொன்னான். பயிற்சியளிக்கப்பட்ட யானைகள் முன்னேறிச் சென்று, மிக வேகமாக கஅபாவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டன. படை வீரர்களும் யானைப்பாகர்களும் யானைகளை எழுந்து நிற்கும்படி அடித்துத் துன்புறுத்தினர். யானைகள் இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து கஅபாவை முற்றுகையிட மறுத்தன. யானைகள் எழுந்து நின்றாலும் இறை இல்லத்தை எதிர்கொள்ளவில்லை. படுத்திருந்த தலைமை யானை நிற்க மறுத்தது.

    “யானைகளை விட்டொழியுங்கள், படைவீரர்களே நாமே கஅபாவை தகர்ப்போம்” என்ற அப்ரஹாவின் கட்டளையின்படி வீரர்கள் முன்னேறினர். அப்போது திடீரென்று மேகம் சூழ்ந்தது போலிருந்தது. அப்ரஹாவும் படைவீரர்களும் மழையை எண்ணி மேலே பார்த்தனர். ஆனால் அவர்கள் கண்டதை அவர்களால் நம்ப முடியவில்லை, அது மழை மேகமல்ல, கோடிக் கணக்கான கருநிற அபாபீல் பறவைகள்.

    ஒவ்வொரு பறவையின் அலகிலும், இரு கால்களிலும் சுடப்பட்ட பொடிக் கற்கள் இருந்தன.  வானத்திலிருந்து அப்பொடிக் கற்களை, படைகள் மீது பறவைகள் எறிந்தன. மழைபோல் விழுந்த கற்கள் மேனியின் மேல் பட்டவுடன் படைவீரர்கள் சுருண்டு கீழே விழுந்து வைக்கோல்களின் சக்கைபோல்  மடிந்தனர்.

    ஆங்காங்கே மறைந்திருந்த மக்காவாசிகள் குரைஷியினர் இக்காட்சியைக் கண்டு திகைத்தனர். கஅபாவை தாக்க வந்த பெரும்படையோடு ஒப்பிடும் போது பறவைகள் மிகச் சிறிய உயிரினம். ஆயினும், எண்ணிக்கையில் அதிகமாக இருந்ததாலும், அல்லாஹ்வின் அருளாலும் அதனைக் கொண்டு எதிர்த்து, அன்று இறை இல்லம் காப்பாற்றப்பட்டது.

    யமனுக்குத் திரும்பிய பிறகு கொடுங்கோல் ஆட்சியாளரான அப்ரஹாவை அல்லாஹ் அழித்தொழித்தான்.

    ஹிஜ்ராவை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய ஆண்டு முறையை அமல்படுத்தும் வரை, அரேபியர்கள் இந்த நிகழ்ச்சியினை `யானைகளின் ஆண்டு` என்று காலக்கணக்கை வைத்திருந்தனர்.

    திருக்குர்ஆன் 105:1-5

    - ஜெஸிலா பானு
    Next Story
    ×