search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இறையில்லத்தைக் காப்பாற்றிக்‌ கொள்வது இறைவனின்‌ வேலை
    X

    இறையில்லத்தைக் காப்பாற்றிக்‌ கொள்வது இறைவனின்‌ வேலை

    கஅபா என்பது ‘இறை இல்லம்’ அதற்கான உடைமைக்குரியவன் அல்லாஹ். அவன் அதனைக் காத்துக் கொள்வான், எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான்.
    யமன் நாட்டில் ஒரு நகரத்தை ஆட்சி செய்து வந்த அப்ரஹா என்பவன் மக்காவில் அமைந்துள்ள கஅபாவின் மீது பொறாமை கொண்டான். இப்ராஹிம் (அலை) மற்றும் இஸ்மாயீல் (அலை) அவர்கள் சொல்லித் தந்து போயிருந்த அதே வழிமுறையைப் பல தலைமுறைகளுக்குப் பிறகும் மக்கள் தொடர்ந்து கடைப்பிடித்து `ஹஜ்` செய்து வருவதை வெறுத்தான் அப்ரஹா.

    மக்காவில் உள்ள கஅபாவிற்குக் குவியும் மக்களைத் தம் பக்கம் திருப்ப எண்ணித் திட்டம் தீட்டினான். தன் நகரத்தில் மிகுந்த வேலைப்பாடுகள் நிறைந்த அழகிய வடிவமைப்பில் ஒரு பிரமாண்டமான தேவாலயத்தை எழுப்பினான். மக்களைக் கவரும் வகையில் அந்த ஆலயத்தை விலை மதிப்பற்ற கற்களைக் கொண்டு நிறுவினான். கண்கவர் வண்ணங்களைத் தீட்டி அதன் அழகைக் கூட்டினான். மக்களும் அங்குச் செல்ல ஆரம்பித்தனர். அந்த ஆலயத்தைக் கண்டு வியந்தனர். அதனைச் சுற்றிப் பார்த்து வர்ணித்தனர். ஆனாலும், யமனுக்கு ஆலயத்தைப் பார்க்கச் சென்றவர்களும் மக்காவிலுள்ள கஅபாவிற்கே யாத்திரை சென்று `ஹஜ்` செய்தனர்.

    மக்கள் மக்காவிற்குச் சென்று ஹஜ் செய்யக் கூடாதென்பதற்காகவே பிரமாண்ட ஆலயத்தை எழுப்பியிருந்த கெட்ட குணம் கொண்ட அப்ரஹா, மக்கள் `ஹஜ்` செய்வதையும் கஅபாவிற்குத் தொடர்ச்சியாகச் செல்வதையும் தடுத்து நிறுத்த முடியாததை எண்ணி மனம் வெதும்பினான்.

    நேரடியாக மக்காவிற்குப் படையெடுத்துச் சென்று கஅபாவை இடித்துவிட வேண்டுமென்று முடிவெடுத்தான். அதற்கான படைகளைத் திரட்டினான். அவன் படை தயார் நிலையில் இருந்தது. படைவீரர்கள் தேவையான ஆயுதங்களையும் ஒட்டகங்களையும் மக்காவாசிகளிடமிருந்தே வாங்கி, தங்கள் படைக்கு பலம் சேர்த்திருந்தனர். படையில் சேர்க்கப்பட்ட ஒட்டகங்கள் மக்காவைச் சேர்ந்த அப்துல் முத்தலிபிற்குச் சொந்தமானது.

    மக்காவை நோக்கிப் படையுடன் நகர்ந்தான் அப்ரஹா. அந்தப் படையில் மிகப் பெரிய யானையும் இருந்தது. மக்காவிற்கு அருகில் மாபெரும் கூடாரம் அமைத்து, தம் படையினரோடு தங்கியிருந்தான் அப்ரஹா. மக்காவின் முக்கியத் தலைவரோடு தாம் பேச வேண்டுமென்று அழைப்புவிடுத்திருந்தான் அப்ரஹா.

    மக்காவின் தலைவராக விளங்கிய அப்துல் முத்தலிப் இன்னும் இரண்டு தலைவர்களுடன் அப்ரஹாவை சந்தித்தார்கள். அவர்களைப் பார்த்ததும் இனம் புரியாத மரியாதையோடு மிகப் பவ்யமாக நடந்து கொண்டான் அப்ரஹா. தன்னிடமிருப்பதிலிருந்து ஏதேனும் அவர்களுக்கு வேண்டுமா என்று அப்ரஹா கேட்டான்.

    அதற்கு அப்துல் முத்தலிப் “தங்களின் படை வீரர்கள் என்னுடைய இருநூறு ஒட்டங்களை எடுத்துச் சென்றுவிட்டனர். அதனைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்” என்று கேட்டார். அதைக் கேட்டு மிகுந்த ஆச்சர்யத்துடன் அப்ரஹா, “அவ்வளவுதானா? நான் நீங்கள் உங்கள் மக்களின் நலம் விரும்பி என்று உங்களைத் தவறாக நினைத்துவிட்டேன். நான் கஅபாவை அழிக்க வந்துள்ளேன், நீங்கள் அதனைக் காக்க வந்தவராகத் தெரியவில்லை, மாறாக உங்கள் ஒட்டகங்களை அல்லவா கேட்கிறீர்கள்?” என்று ஏளனமாகப் பேசினான்.

    அதற்கு அப்துல் முத்தலிப் அவர்கள் “நான் ஒட்டகங்களின் உரிமையாளர், அதனைக் காக்கும் பொறுப்பு எனக்குள்ளது. அதனால்தான் நான் எனக்குரியதை மட்டும் கேட்கிறேன். கஅபா என்பது ‘இறை இல்லம்’ அதற்கான உடைமைக்குரியவன் அல்லாஹ். அவன் அதனைக் காத்துக் கொள்வான், எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான்” என்று உறுதி்பட யாரும் எதிர்பார்த்திராத பதிலைத் தந்தார்.

    வாயடைத்த அப்ரஹா ஒட்டகங்களை அப்துல் முத்தலிப்புக்குத் திருப்பித் தந்துவிட்டான்.

    - ஜெஸிலா பானு
    Next Story
    ×