search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கஅபாவில் குவியும் மக்களைத் தன் பக்கம் திருப்ப எண்ணித் திட்டம் தீட்டிய அப்ரஹா
    X

    கஅபாவில் குவியும் மக்களைத் தன் பக்கம் திருப்ப எண்ணித் திட்டம் தீட்டிய அப்ரஹா

    அப்ரஹா மக்காவில் உள்ள கஅபாவிற்குக் குவியும் மக்களைத் தன் பக்கம் திருப்ப எண்ணித் திட்டம் தீட்டினான்.
    'அரப்’ என்ற சொல்லுக்குப் பாலைவனம், புற்பூண்டு முளைக்காத வறட்சியான இடம் எனப் பொருள் வருகிறது. அந்தக் காலத்திலேயே அரேபிய தீபகற்பத்தில் இருந்தவர்களை ‘அரப்’ ‘அரபி’ என்றே அழைக்கப்பட்டார்கள்.

    இன்றைய சவூதி அரேபியாவான அந்த இடத்தின் மேற்கே செங்கடலும், கிழக்கே அரேபிய வளைகுடாவும், வடக்கே சிரியா என்னும் ஷாம் தேசம், வட-கிழக்கில் ஈராக், தெற்கே அரபிக் கடல் இந்தியப் பெருங்கடல் வரையிலும் பரந்துள்ளது.

    புவியியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததான இந்த அமைப்பின் காரணமாகவே அரேபிய தீபகற்பத்தை வெளிநாட்டவர்கள் ஆதிக்கம் செலுத்த முடியாதபடி இருந்தனர். அப்படியே ரோம்- பாரசீகம் வல்லரசுகள் அரேபிய தீபகற்பத்தில் ஆதிக்கம் செலுத்த முடியாதபடியே அப்பகுதியின் புவியியல் அமைப்பு அமைந்திருந்தாலும், அரேபியர்களுக்குள்ளே ஏற்பட்ட உள்நாட்டு குழப்பங்களையும், சண்டைகளையும் பயன்படுத்தி ரோமானியர்களும் பாரசீகர்களும் அங்கு சில பகுதிகளைக் கைப்பற்றினர்.

    ஆப்பிரிக்கா, ஐரோப்பியா, ஆசியா என்று எல்லாக் கண்டங்களும் கடல் வழியாக அரேபிய தீபகற்பத்துடன் இணைவதால் அப்பகுதி பண்பாடு, கலை மற்றும் வியாபாரப் பரிமாற்றங்களின் மையமாக இருந்து வந்தது.

    அவர்கள் ஒற்றுமையின்றிப் பலவாறாகப் பிரிந்து வாழ்ந்தனர். அல்லாஹ்வை நினைக்காமல், நன்றி செலுத்தாமல் பாவங்கள் புரிந்தனர். மிகப் பெரிய வெள்ளப்பிரளயம் ஏற்பட்டு நகரங்கள் சேதம் அடைந்ததால் மக்கள் பல இடங்களுக்குச் சென்று குடியேறினர்.

    ஈஸா (அலை) அவர்களின் காலத்திற்குப் பிறகும், அவர்கள் போதித்துச் சென்ற ஏகத்துவத்தைப் பின்பற்றி ஓரிறைக் கொள்கையில் இருந்தவர்களின் மீது யமன் நாட்டை ஆட்சி செய்த யூதக் கொடுங்கோல் மன்னனின் ஆணையின் பேரில் தாக்குதல் நடந்தது. அவர்களை அக்கொள்கையைக் கைவிடும்படி யூதர்கள் வற்புறுத்தினர். இறைவன் ஒருவனே என்று துதித்துக் கொண்டிருந்த கிறிஸ்தவர்களை யூதர்கள் அகழிகளைத் தோண்டி, அதில் நெருப்புக் குண்டத்தை வளர்த்து, அதனுள் அவர்களை உயிருடன் போட்டு எரித்தனர்.

    இதைக் கேள்விப்பட்ட மற்ற நாட்டில் இருக்கும் கிறிஸ்தவர்கள் ரோமானிய அரசர்களின் ஆதரவுடன் யமன் நாட்டை முற்றுகையிட்டனர். ஆப்பிரிக்க நாடான ஹபஷாவின் பொறுப்பில் இருந்த அர்யாத் என்பவர் மிகச் சாமர்த்தியமாக யமன் நாட்டைக் கைப்பற்றினார். அர்யாத்தின் தளபதிகளில் ஒருவனான அப்ரஹா மிகத் தந்திரமாக அர்யாத்தையே கொலை செய்துவிட்டுப் பொறுப்பில் அமர்ந்தான்.

    யமனின் ஒரு நகரத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அப்ரஹா, மக்காவில் கஅபாவிற்கு மக்கள் குவிவதும், இப்ராஹிம் (அலை) மற்றும் இஸ்மாயீல் (அலை) அவர்கள் சொல்லித் தந்து போயிருந்த அதே வழிமுறையைப் பல தலைமுறைகளுக்குப் பிறகும் தொடர்ந்து கடைப்பிடித்து `ஹஜ்` செய்தும் வந்தவர்களை வெறுத்தான். மக்காவில் உள்ள கஅபாவிற்குக் குவியும் மக்களைத் தன் பக்கம் திருப்ப எண்ணித் திட்டம் தீட்டினான்.

    நயவஞ்சகம் செய்பவர்களுக்கும், பொறாமை கொள்பவர்களுக்கும் வெற்றி கிடைப்பதில்லை.

    திருக்குர்ஆன் 25:18, 85:4-7

    - ஜெஸிலா பானு.

    Next Story
    ×