search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மனிதம் காக்கும் அமானிதம்
    X

    மனிதம் காக்கும் அமானிதம்

    நமது வாழ்க்கையே ஓர்அமானிதம் தான் என்றால் அது மிகையல்ல. இதுகுறித்து திருக்குர்ஆன் (23:8) இவ்வாறு கூறுகிறது:
    ‘அமானத்’ என்ற அரபுச்சொல்லிற்கு ‘அமானிதம்’ என்று பொருள். இன்று மனிதர்களிடையே காணப்படும் பெரும் பிரச்சினையே இந்த அமானிதப்பண்பு தான். ஒருவர் நம்மை நம்பிக்கொடுத்ததை திரும்ப அப்படியே ஒப்படைப்பது ‘அமானிதம்’ என்று சொல்லப்படும்.

    நபிகள் நாயகம் சொன்னார்கள்: ‘எவரிடம் அமானிதப்பண்பு இல்லையோ அவரிடம் ஈமான் எனும் இறை விசுவாசப்பண்பும் இல்லை’.

    இஸ்லாமை இதயப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் ‘ஈமான்’ எனும் இறை விசுவாசம் மிக மிக அவசியமான ஒன்று. அதை இழந்து ஒருவரால் எப்படி நிம்மதியாக இருக்கமுடியும்?. அப்படித்தான் அந்த அமானிதத்தையும் நம்மால் நிச்சயம் இழந்து நிற்க முடியாது என்பதை உளப்பூர்வமாக உணர்த்தவே ஒப்பிட்டுக்கூறியுள்ளார்கள் நபிகளார்.

    அமானிதம் என்பது ஒருவரின் பொருளை பாதுகாப்பதில் மட்டும் இல்லை. ஒருவரது சொல், செயல், பாவனை, பழக்க வழக்கம் என அனைத்திலும் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்றுதான் அமானிதம் என்பது.

    ‘ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள்; நீங்கள் அறிந்து கொண்டே, உங்களிடமுள்ள அமானிதங்களிலும் மோசடி செய்யாதீர்கள்’ என்கிறது திருக்குர்ஆன் (8:27).

    அமானிதத்திற்கு எதிர்ச்சொல் ‘மோசடி’ என்பதை இந்த வசனம் தெள்ளத்தெளிவாய் தெரிவிக்கிறது. அமானிதம் என்பது எவ்வகையிலும் தவறவிடாமல், தவறிவிடாமல் கட்டாயம் கடைப்பிடித்து நிறைவேற்ற வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது.

    நபி வரலாற்றில் ஒரு செய்தி: ஒருமுறை நபித்தோழர் ஒருவர் ‘நாயகமே! மறுமைநாள் எப்போது ஏற்படும்?’ என்று கேட்டார்.

    ‘அமானிதம் வீணடிக்கப்பட்டால் அப்போது மறுமைநாளை எதிர் பார்’.

    ‘வீணடித்தல் என்றால் அது எவ்வாறு?’ மறுபடியும் வினவினார்.

    ‘அமானிதத்தை வீணடிப்பதே அது’ என விளக்கம் அளித்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

    இன்றைய நமது வியாபாரங்கள் எப்படி உள்ளன?. கலப்படம், ஏமாற்றல், பதுக்கல், விலையேற்றம், மோசடி என எண்ணற்ற வணிகக்குற்றங்களை பல இடங்களில் காணமுடிகிறது. அவற்றை நாம் தான் அல்லாஹ்வை அஞ்சி அடியோடு களைய முற்படவேண்டும். ஏனெனில் வணிகமும் ஓர் அமானிதம் தான் என்பதை ஏனோ நம்மில் பலர் மறந்துவிடுகின்றனர்.

    நபிகளார் வணிகர்களுக்கு இவ்வாறு நல்வழி காட்டியுள்ளார்கள்:

    ‘உண்மையுரைத்து, அமானிதத்துடன் நடந்துகொள்ளும் நல்லதொரு வியாபாரி மறுமையில் நபிமார்கள், நல்லோர்கள், தியாகிகள் இவர்களுடன் சேர்ந்திருப்பார்கள்’.

    திருக்குர்ஆன் வசனம் (4:58) இப்படி எச்சரிக்கிறது:

    ‘நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும், உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்’.

    நபியவர்களுக்கு மக்கா நகரில் வாழ முடியாத நிலை ஏற்பட்ட போது, மதீனா நகருக்குச்செல்ல திட்டமிட்டார்கள். இரவோடு இரவாக நபிகளார் புறப்படத் தயாரானபோது, தம்மிடம் யூதர்கள் கொடுத்துவைத்திருந்த பொருட்கள் எவை?, அவை யாருக்குரியது? என்ற விவரங்களை தன்னுடன் இருந்த ஹசரத் அலி (ரலி) அவர்களிடம் தெளிவுபடுத்திச்சொல்லி விட்டுத்தான் சென்றார்கள்.

    இன்றைக்கு நமது நிலை எப்படியிருக்கிறது..? நீதி, நேர்மை, நியாயம் என்பதெல்லாம் பிறகுபார்த்துக் கொள்ளலாம் என்று தைரியம் கொள்வது, இறையச்சமின்மையின் வெளிப்பாடுதானே தவிர வேறு ஒன்றுமில்லை. ‘தக்வா’ எனும் ‘இறை அச்சம்’, இறை பயம் இல்லாதவரை எந்தவொரு செயல்பாடுகளும் நமக்கு மதிப்பற்ற,பொறுப்பற்ற ஒன்றுதான்.

    அமானிதத்தைப் பேணுவது என்பது அடுத்தவர்கள் கொடுத்து வைத்த பொருட்களில் மட்டும் இல்லை; நமது அன்றாட சொற்களிலும்கூட உண்டு.

    ‘உங்களிடம் ஒருவர் பேசிவிட்டுச் செல்கிறபோது இருவருக்கும் இடையிலான அந்தப்பேச்சும் ஓர் அமானிதமே’ என்றார்கள் அண்ணல் நபியவர்கள்.

    இந்த நபிமொழி நமக்கொரு பேருண்மையைச் சொல்கிறது. அதாவது, இருவருக்கு இடையிலான பேச்சுக்கள் அவரவர் அனுமதியின்றி மூன்றாம் நபரிடம் நகரும் போதுதான் பெரும் பிரச்சினைகள் வெடித்துக் கிளம்புகின்றன.

    அதுபோல, கணவன்-மனைவி இருவருக்கும் இடையிலான ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அது இறைவனிடம் மிகுந்த கோபத்திற்குரியது என்று அண்ணலார் சொல்லியது கவனிக்கத்தக்கது. எனவே, எப்போதும் நாம் நமது பேச்சுவார்த்தைகளில் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும்.

    நயவஞ்சகனின் முதல் மூன்று தீய அடையாளங்களில் ஒன்று, ‘நம்பிக்கை வைக்கப்பட்டால் அதில் மோசடி செய்வான்’ என்பதாகும். இன்றைக்கு நம்மிடையே இத்தகைய நயவஞ்சக முகமூடியர்கள் தானே உலவி வருகின்றனர். எனவே நாம் எங்கேயும் எப்போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

    சொல்லப்போனால், நமது வாழ்க்கையே ஓர்அமானிதம் தான் என்றால் அது மிகையல்ல. இதுகுறித்து திருக்குர்ஆன் (23:8) இவ்வாறு கூறுகிறது:

    ‘ஓரிறை நம்பிக்கையாளர்கள் திட்டமாக வெற்றியடைந்து விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தம் அமானிதங்களையும், தம் வாக்குறுதிகளையும் பேணுகிறவர்கள்.

    இன்றைக்கு வெற்றியைத் தேடித்தானே மனிதன் ஓடோடிக் கொண்டிருக்கின்றான்; அவன் தேடும் அந்த அற்புத வெற்றி வேறெங்கும் வெளியுலகில் இல்லை. எல்லாம் அவனுக்குள்ளேயே தான் இருக் கிறது.

    அதுவும் அன்றாடம் அவன் அனுசரிக்க வேண்டிய அமானித பண்பாட்டு விழுமியங்களுக்குள் தான் மறைந்திருக்கிறது.

    வாருங்கள்... அமானிதங்களைப் பேணுவோம்!

    மாமனிதங்களைப் போற்றுவோம்!

    மவுலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு.
    Next Story
    ×