search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா 4-ந் தேதி தொடங்குகிறது
    X

    ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா 4-ந் தேதி தொடங்குகிறது

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா தொடங்குகிறது என்று சந்தனக்கூடு விழாவுக்கான ஆணையர் ராமராஜன் தெரிவித்தார்.
    ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்கா சந்தனக்கூடு திருவிழா, ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு விழாவாக நடந்து வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக உள்ள சந்தனக் கூடு திருவிழாவிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவிற்கு புதிய நிர்வாக கமிட்டி தேர்வு செய்யப்படுவதில் தொய்வு ஏற்பட்டது. இதை தொடர்ந்து தர்கா ஹக்தார்கள் சுல்தான் செய்யது இபுராகிம், அகமது இபுராகிம் ஆகியோர் சந்தனக்கூடு திருவிழா நடத்துவதற்கு தனி ஆணையரை நியமித்து தருமாறு ராமநாதபுரம் சார்பு நீதி மன்றத்தில் மனு செய்தனர்.

    மனுவை விசாரித்த நீதி பதி திருவிழாக்கால ஆணையராக வக்கீல் ராமராஜன் என்பவரையும் உதவியாக வக்கீல் ரமேஷ் கண்ணன் என்பவரையும் நியமித்தார்.

    ஏர்வாடி பாதுஷா நாய கம் தர்கா சந்தனக்கூடு விழாவுக்கான ஆணையர் ராமராஜன் கூறியதாவது:-

    நடப்பாண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா வருகிற 4-ந்தேதி மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்டு தொடங்குகிறது. 13-ந்தேதி அடிமரம் ஏற்றப்பட்டு, 14ந்தேதி கொடியேற்றம், 26-ந்தேதி சந்தனக்கூடு, 27-ந்தேதி சந்தனம் பூசுதல், செப்., 3-ந்தேதி கொடியிறக்கத்துடன், பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழாநிறைவடைகிறது. விழா தொடர்பான கருத்துக்கள் ஹக்தார்களிடம் கேட்டு முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சந்தனக்கூடு திருவிழாவுக்கான ஏற்பாடுகளை ஆணையர் ராமராஜன் உத்தரவின் பேரில் தர்கா மேலாளர் செய்யது சிராஜ்தீன் செய்து வருகிறார்.

    நிர்வாக கமிட்டி முன்னாள் தலைவர் அம்சத் ஹூசைன், முன்னாள் செயலாளர்கள் துல்கருணை பாட்சா, செய்யது பாரூக் ஆலிம் அரூஸி, உதவி தலைவர் செய்யது சிராஜ் தீன், ஹக்தார்கள் சோட்டை செய்யது அபுபக்கர் பாதுஷா, கலில்ரக்மான், அஜ்முல் ரக்மான் உள்பட தர்கா ஹக்தார்கள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×