search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராகு தோஷத்தை நிவர்த்தி செய்யும் அனுமன் வழிபாடு
    X

    ராகு தோஷத்தை நிவர்த்தி செய்யும் அனுமன் வழிபாடு

    அனுமன் ஜெயந்தி அன்று வடை மாலை சாத்தி அனுமனை வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகும்.
    ஆஞ்சநேயர் சிறு வயதில், கிருஷ்ணரைப் போலவே பல லீலைகளைச் செய்திருக்கிறார். அவற்றுள் ஒன்றுதான், பழம் என்று நினைத்து சூரியனைப் பிடிக்கச் சென்றது. வனத்தில் தன் வயது சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த அனுமனுக்கு, வானத்தில் இருந்த சூரியன் ஒரு பழம் போல் தெரிந்தது. உடனே அந்தப் பழத்தைச் சாப்பிட வேண்டும் என்று தோன்றியது.

    வாயு புத்திரன் அல்லவா? நினைத்த மாத்திரத்தில் தன்னுடைய இலக்கை நோக்கி பாயத் தொடங்கினார். அந்த வானர பாலகனின் வேகம், காற்றை விடவும் வேகமாக இருந்தது. அதைக் கண்டு தேவர்கள் அனைவரும் திகைத்தனர். மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை, அனுமன் சாப்பிட நினைப்பதை நினைத்து அவர்கள் அச்சம் கொண்டனர்.

    ஆனால் அனுமனின் முயற்சியை தேவேந்திரன், தன்னுடைய வஜ்ராயுதம் கொண்டு தடுத்து நிறுத்திவிட்டான்.

    இந்திரன், அனுமனை தடுப்பதற்கு முன்பாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அது என்னவென்றால், அனுமன் சூரியனைப் பிடிக்கச் சென்ற வேளையில், கிரகணத்தை ஏற்படுத்துவதற்காக சூரியனைப் பிடிக்க ராகுவும் சென்று கொண்டிருந்தான். ஆனால் அவன் அனுமனின் வேகத்தைப் பார்த்து வியந்துவிட்டான். அவனால் அனுமனின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

    அந்த பாலகனின் வேகத்தைக் கண்ட ராகு, அனுமனுக்கு ஒரு வரத்தை அருளினான். தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால், உணவுப் பண்டம் தயாரித்து அனுமனை வணங்குபவர்களை, நான் எந்த காலத்திலும் பிடிப்பதில்லை. மேலும் தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகும் என்ற வரத்தை வழங்கினார். உளுந்தால் செய்யப்படும் உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் ராகு பகவான் தெரிவித்தார். அதாவது, தன்னுடைய உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் என்றார். அனுமன் ஜெயந்தி அன்று வடை மாலை சாத்தி அனுமனை வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகும்.
    Next Story
    ×