search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெரும் பொருள் செலவில் பரிகாரம் செய்தால் வினை தீருமா?
    X

    பெரும் பொருள் செலவில் பரிகாரம் செய்தால் வினை தீருமா?

    ஒவ்வொருவரின் செயல் வினைக்கும் அதற்கேற்றாற்போல் பலன் கிட்டும் என்பதை குறிப்பதற்கு ‘‘கர்மா’’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
    “கர்மா” அல்லது ‘‘வினைப்பயன்’’ என்ற சொல்லுக்கு ‘‘செயல்’’ என்பது பொதுவான பொருள். ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை ஏற்படும் என்பது உலகப் பொது வழக்கு. அந்த வழக்கு போலவே ஒவ்வொருவரின் செயல் வினைக்கும் அதற்கேற்றாற்போல் பலன் கிட்டும் என்பதை குறிப்பதற்கு ‘‘கர்மா’’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதனை தமிழில் ‘‘வினைப்பயன்’’ என்று கூறுவர்.

    கர்மா என்பது ஒருவருக்கு தலைவிதி அல்ல அது அவரவர் வினைப்பயன். அதாவது செய்த செயலின் எதிர்வினை. நல்ல செயல் செய்தால் அதன் பயன் நன்மை தரும். தீவினை செய்தால் துன்பம் தரும் என்பது வேதவாக்கு. ஒருவரின் அனைத்து செயல்களின் பயன்கள், அவரவர் முற்பிறவிச் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றால் அவரது கர்மவினை தீர்மானிக்கப்படுகிறது.

    கர்மாவை உணரமுடியுமே தவிர பார்க்க முடியாது. கர்மவினை 3 வகைப்படும்.

    1. சஞ்சித கர்மா:


    நமது தாய் தந்தையரிடம் இருந்தும் அவர்களின் முன்னோர்களிடமிருந்தும் நமது ஆத்மா பல்வேறு பிறப்புகளில் செய்த பாவபுண்ணிய சேர்க்கையே சஞ்சித கர்மா.

    2. பிராரப்த கர்மா:

    இந்த பிறவியில் நாம் செய்யும் செயல்களின் பதிவே பிராரப்த கர்மா.

    3. ஆகாம்ய கர்மா:

    மேற்கூறிய இரண்டு கர்மாக்களை கழிக்க நாம் செய்யும் செயல்களின் மூலம் இந்த பிறவியில் நாம் சேர்க்கும் வினை.

    ஒரு ஜனனம் எப்பொழுது நிகழும்:?

    மேற்கூறிய 3 கர்மாக்களின் படி ஒரு ஆத்மா எப்பொழுது தன் வினைப்பதிவு முழுவதையும் அனுபவிக்க கூடிய கிரக நிலவரம் வருகிறதோ அப்பொழுதுதான் அந்த ஆத்மா பிறப்பெடுக்கும். பிறப்பெடுத்த ஆத்மா தன் வினைப்பதிவை அனுபவித்து முடிக்கும் வரை அந்த ஆத்மாவை அதன் உடம்பில் இருந்து வெளியேறாமல் காப்பவர் கர்மகாரகன் சனி.



    ஒரு ஜனனம் பூமியில் ஏற்படும் அந்த கணம் முதல் அதன் மரணம் வரையுள்ள அனைத்து நிகழ்வுகளும் பரம்பொருளால் தீர்மானிக்கப்படுகிறது. அந்த நிகழ்வுகளை நிறைவேற்ற பயணம் செய்யும் ஆத்மா பல சாதக பாதகங்களை சந்திக்கிறது. தன் இலக்கை அடைய பல திட்டங்களை தீட்டுகிறது. அதில் தடை ஏற்படும் பொழுது அதை தகர்க்க பெரும் பொருட்செலவு செய்து தடையை தகர்க்க முயல்கிறார்கள்.

    அந்த முயற்சி (பரிகாரம்) வெற்றி கொடுத்தால் அதை தற்போது அனுபவிக்கும் வினையைவிட பல மடங்காக அதே பிறவியிலோ, மறுபிறவியிலோ பிரபஞ்சம் திருப்பிக் கொடுக்கப் போகின்றது என்று பொருள். இந்த வினையை தடுத்து நிறுத்தும் நிகழ்வும் கூட அதன் வினைப்பதிவுகளில் ஒன்றுதான்.

    பிரபஞ்சத்திற்கு எதிரான இந்த செயலுக்கு நமது ஆசையே காரணம். பிரபஞ்சத்திற்கு எதிரான எந்த செயலும் கர்மவினையை கூட்டும் செயலாகும்.
    ஒருவர் தான் பிறவி எடுத்ததன் நோக்கம் என்ன என்பதை உணர முற்படும் போது முக்திக்கு வழி பிறக்கும். நமது இன்பம் மற்றும் துன்பத்திற்கு பிரபஞ்சமே காரணம். நமக்கு கிடைக்கும் இன்பம் வினையை அதிகரிக்கிறது. துன்பம் வினையை குறைக்கிறது. எனவே வினையை குறைக்க பிரபஞ்சம் நமக்கு துன்பம் தருகிறது.

    எவ்வாறு இன்பம் ஏற்படும் போது மகிழ்கிறோமோ அதேபோல் துன்பம் ஏற்படும் போது ஏற்க மனதை பக்குவப்படுத்த வேண்டும். புரிதல் ஏற்படும் போது எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்துவிடும். நமது வினையை குறைக்கும் முயற்சியை பிரபஞ்சத்திடம் ஒப்படைத்து சரணாகதி அடைய வேண்டும். யார் பிரபஞ்சத்திடம் சரணாகதி அடைகிறாரோ அவரது தடைகற்கள் படிகற்களாக பரம்பொருளால் மாற்றியமைக்கப்பட்டு முக்தி அடைய வழி கிடைக்கும்.

    இதை மேலும் எளிதாக புரியும்படி கூற வேண்டுமானால் ஒரு மனிதன் பரம்பொருளிடம் எனக்கு இது நடந்தால், நான் உனக்கு அது தருகிறேன் என்று எதுவுமே புரியாத ஒரு வேண்டுதலை வைத்துவிட்டு எனக்கு ‘‘நான் வேண்டியது கிடைக்கவில்லை’’ என்று புலம்புவது அதாவது அந்த மனிதனுக்கு தனக்கு வேண்டியதை கூட கேட்டுப் பெறத் தெரியவில்லை. இதை எளிதாக அந்த மனிதன் ‘‘எனக்கு அமைதியையும் சந்தோஷத்தையும் கொடு’’ என்று ஒருமுறை மட்டும் வேண்டியிருந்தால் அவன் வாழ்க்கை வசந்தமாகி இருக்கும்.

    வேண்டுதல் என்பது நிரந்தரமான முடிவான ஒன்றாக இருக்க வேண்டும். தற்காலிகமான தீர்வை தரக்கூடியதாக இருக்கக் கூடாது. இதுதான் ‘‘கர்மவினை’’. அதாவது ‘‘எதிர்வரும் கர்மவினை’’ இதுதான் என்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. எனக்கு இது நிறைவேறினால் நான் நிம்மதியாக இருப்பேன் என்று தவறான கணக்கை போட்டுக் கொண்டு ‘‘பிரபஞ்சத்தையும் பரம்பொருளையும்’’ பழித்து கர்மவினையை கூட்டுகிறார்கள்.



    உண்மையில் ‘‘எந்த ஒன்றில் எல்லாம் அடங்குமோ!! அடக்கமோ!!!’’ அந்த ஒன்றை வேண்டுதலாக வைக்க வேண்டும். அப்படி அந்த வேண்டுதல் நிறைவேறும் பொழுது அவனுக்கு அனைத்தும் வசமாகி விடுகின்றது. எனவே அவனது வேண்டுதல் என்பது ஒரே முறையோடு முடிவடைந்து விடுகின்றது.

    ‘‘மாற்று மருந்தை நம்பி யாரும் விஷம் அருந்துவதில்லை. அதுபோல் பரிகாரத்தை நம்பி யாரும் தவறு செய்யாமல் இருப்பது நல்லது’’ தவறு என்பது நம்மையறியாமல் நம்மை மீறி நடக்கும் செயல். அது ‘‘பாவங்களைத் தருகிறது’’. தவறு என்பது தெரிந்தும் நாமே திட்டமிட்டு செய்வது. அது ‘‘சாபங்களைத்’’ தருகிறது.

    சாஸ்திரங்களில் சொல்லப் பட்ட அனைத்து பரிகார வழிபாட்டு முறைகள் ‘‘தவறுகளால் ஏற்பட்ட பாவங்களை நீக்கிக் கொள்ளவே’’ ரிஷிகளால் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. எனவே ‘‘பாவம், சாபம்’’ இரண்டிற்கும் வேறுபாட்டைக் கருத்தில் கொள்ள வேண்டும். ‘‘பாவம், சாபம்’’ இரண்டிற்கும் வேறுபாட்டை தெரிந்து கொண்டவன் பரிகாரத்தின் பக்கம் திரும்பி கூட பார்ப்பது இல்லை.

    பாவங்களே மனித பிறப்பிற்கு காரணமாக அமைகிறது. பாவங்கள் இல்லையெனில் பிறப்பு இல்லை. பல ஜென்மங்களில் நாம் செய்த பாவ புண்ணியங்களின் ஆடிட்டிங் தீர்ப்புதான் இந்த பிறப்பு. நாம் செய்த பாவங்களை நாம் உணரும் வரை பிரபஞ்சம் நம்மை விடாது, பாடம் புகட்டிக் கொண்டே இருக்கும். ‘‘கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல.’’

    கர்மா என்பது மன ஆற்றலை பெருக்கி கொள்ளும் பயிற்சியாகவும் தொடர்ந்து செய்யப் படும் பிரார்த்தனையாகவும், மந்திர மாகவும், கீர்த்தனையாகவும் இருக்கலாம். எவன் ஒருவன் தன் சொல்லாலும், செயலாலும், சிந்தனையாலும் ‘‘ராம’’ நாமத்துடன் ஒன்றுகிறானோ அவனது 7 தலைமுறை பாவ கணக்கு கழிக்கப்படும். புண்ணிய பலன் கூடும்.

    ‘‘அன்பும் அறமும் உண்மையும் சத்தியமுமே’’ நியாய தர்மங்களை காக்கும் பண்புகள். இவற்றை மாறாமல் கடைபிடித்தால் வாழ்வில் தோன்றும் எந்த சங்கடங்களையும் எளிதில் கடக்கலாம்.

    ‘‘ஆத்ம திருப்தியுடன் செய்யும் செயல்களே ஆத்ம பலத்தை தரும்’’

    அந்த ஆத்ம பலமே எதையும் தாங்கும் சக்தி. ஆதலால் விடாது ராம நாம ஜபம் செய்வோம். பிரபஞ்சத்துடன் ஒன்றி உறுதியுடன் உண்மையாக இருப்போம். அதனால் பெற்றிடுவோம் மன அமைதியும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்.’’


    ஜோதிட கலாநிதி
    ஐ. ஆனந்தி
    9865220406
    Next Story
    ×