search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பித்ரு தோஷங்களை போக்கும் ராமேஸ்வரம்
    X

    பித்ரு தோஷங்களை போக்கும் ராமேஸ்வரம்

    பித்ரு தோஷம் விலக, குழந்தை பாக்கியம், திருமணம் அமைய, தரித்திரம் விலக, கொடிய நோய்கள் அகல ராமேஸ்வர ஸ்தல தீர்த்த நீராடலும், தரிசனமும், இங்கு உள்ள பாதாள பைரவரை வழிபட்டு பலன் பெறலாம்.
    புரட்டாசி பவுர்ணமிக்கு அடுத்த நாளில் வரும் பிரதமை திதியில் தொடங்கி, புரட்டாசி அமாவாசை வரை வரும் பதினைந்து நாட்களும் ‘மகாளய பட்சம்’ எனப்படும். ‘மகாளயம்’ என்பதற்கு ‘பெரிய கூட்டம்’ எனப்பொருள். ‘பட்சம்’ எனில் பதினைந்து நாட்கள். அதாவது, மறைந்த நம் முன்னோர்கள் அனைவரும் பித்ரு லோகத்திலிருந்து வந்திருந்து, அவரவர் சந்ததிகளின் இல்லத்தில் கூடும் பெரும் புண்ணிய காலமே மகாளய பட்சம் ஆகும். இந்த பதினைந்து நாட்களும் முன்னோர் வழிபாட்டினைச் செய்வது சிறப்பு.

    இந்நாட்களில் அன்னதானம் செய்வது பெரும் புண்ணிய பலன்களை நம் பித்ருக்களுக்கும், அவர்கள் வாயிலாக நம் தலைமுறைக்கும் கிடைக்கச் செய்யும். மகாளய பட்ச காலத்தில் முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தீர்த்தத் தலங்களுக்குச் சென்று தர்ப்பணம் செய்ய வேண்டும். இப்படிப்பட்ட தீர்த்த திருத்தலங்கள் ராமேஸ்வரம், திருச்சிராப்பள்ளி, பவானி, திருவையாறு, கன்னியாகுமரி என பல இருந்தும், அவற்றில் முதன்மையானது ராமேஸ்வரம் திருத்தலம்.

    ராவணனிடம் குணம்தான் கெட்டுப் போய் கீழானதாக இருந்தது. ஆனால் அவனது பலமும், பக்தியும் அனைவரை விடவும் உயர்வானதாகவே அமைந்திருந்தது. அந்த அதீத பக்தி அவனிடம் இருந்த காரணத்தினால்தான், ராவணனை வதம் செய்த ராமபிரானுக்கு மூன்று விதமான தோஷங்கள் ஏற்பட்டன. அவையே பிரம்மஹத்தி தோஷம், வீரஹத்தி தோஷம், சாயாஹத்தி தோஷம் என்பன.

    ‘அணையலை சூழ்கட லன்றடைத் துவழி செய்தவன்
    பணையிலங் கும்முடி பத்திறுத் தபழி போக்கிய
    இணையிலி யென்றுமி ருந்தகோ யிலிரா மேச்சுரம்

    துணையிலி தூமலர்ப் பாதமேத் தத்துயர் நீங்குமே’ என்கிறார் சம்பந்தர். அதாவது ராமபிரானின் தோஷத்தை நீக்கிய ஈசன் அருளுமிடம் ராமேஸ்வரம் என்கிறார் சம்பந்தர். ராவணனைக் கொன்ற ராமருக்கு, ‘பிரம்மஹத்தி தோஷம்’ பிடித்துக்கொண்டது. மேலும் ராவணன் மிகச் சிறந்த மாவீரராக அறியப்பட்டவன். கார்த்தவீர்யார்ஜூனன், வாலி ஆகிய இருவரையும் தவிர, தன்னுடன் போரிட்ட அனைவரையும் வெற்றி கொண்டவன்.

    ஒரு சிறந்த வீரனைக் கொன்றதால் ராமருக்கு, ‘வீரஹத்தி தோஷம்’ உண்டானது. மூன்றாவதாக, ராவணன் சிறந்த சிவபக்தன். வீணை வாசிப்பதில் வல்லமை படைத்தவன். அதுவும் சாம கானம் பாடுவதற்கு அவனுக்கு நிகராக எவருமில்லை. இதனை ‘சாயை’ என்பார்கள். சாயை என்பது ஒளியை குறிக்கும். ஒளி போன்ற பெருமை வாய்ந்த குணங்களை குறிப்பிடும் ‘சாயை’ பெற்ற ராவணனைக் கொன்றதால், ‘சாயாஹத்தி தோஷம்’ ராமரை பற்றிக்கொண்டது.

    சாயாஹத்தி தோஷம் நீங்க பட்டீஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் ராமபிரான். அதே போல் வீரஹத்தி தோஷம் விலக, வேதாரண்யம் (திருமறைக்காடு) என்ற திருத்தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்தார். விச்ரவஸ் என்ற மகரிஷியின் பிள்ளையான ராவணனை சம்ஹாரம் செய்ததால், ராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிய இடம்தான் ராமேஸ்வரம்.



    தன்னுடைய பிரம்மஹத்தி தோஷம் விலகுவதற்காக, ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்று ராமர் முடிவு செய்தார். அதற்காக ஒரு சிவலிங்கத்தை, காசியில் இருந்து கொண்டு வரும்படி அனுமனிடம் கூறினார். தன் இறைவனின் கட்டளையை சிரமேற்கொண்டு நிறைவேற்ற எண்ணிய ஆஞ்சநேயர் காசியை நோக்கிப் பறந்தார். ஆனால் அவர் வருவதற்கு சற்று தாமதமானது.

    குறிப்பிட்ட காலம் கடப்பதற்கு முன் சிவலிங்க பூஜை செய்ய எண்ணினார் ராமபிரான். அவரது எண்ணத்தைப் புரிந்து கொண்ட சீதாதேவி, கடற்கரை மணலிலேயே ஒரு அற்புதமான சிவலிங்கத்தை செய்து முடித்தார். அந்த லிங்கத்தை அங்கு பிரதிஷ்டை செய்த ராமபிரான், அதற்குப் பூஜை செய்து வழிபட்டார். இந்த லிங்கமே ராமேஸ்வரம் திருத்தலத்தில் ‘ராமலிங்கம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. காலம் தாழ்ந்து அனுமன் கொண்டு வந்த லிங்கம், ‘விஸ்வ லிங்கம்’ என்ற பெயரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    இங்கு உள்ள விசாலாட்சி அம்மன் சன்னிதி அருகில், ராமர் தன் வில்லால் உருவாக்கிய ‘கோடி தீர்த்தம்’ அமைந்துள்ளது. சிவலிங்க பிரதிஷ்டையின் போது ராமர், இந்த தீர்த்த நீரையே பயன்படுத்தியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. வட இந்தியாவில் இருந்து வரும் பக்தர்கள் கங்கை நீரை கொண்டு, இங்குள்ள ராமலிங்கத்தையும், கோடி தீர்த்தத்தையும் எடுத்துச் சென்று காசியில் உள்ள காசி விஸ்வநாதரையும் பூஜிப்பது வழக்கமாக நடைபெற்று வரும் நிகழ்வாகும். கோடி தீர்த்தம் அருகில் பாதாள பைரவர் அருள்பாலிக் கிறார்.

    ராமபிரான், இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டபோது, அவரைப்பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது. ராமரை விட்டு நீங்கிய பிரம்மஹத்தியால் பிறருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, ஈசன் பைரவ மூர்த்தியை அனுப்பினார். பைரவர், பிரம்மஹத்தியை தனது காலால் அழுத்தி பாதாளத்தில் தள்ளினார். எனவே அவர் பாதாள பைரவர் என அழைக்கப்படுகிறார். இந்த பைரவரை வழிபட்டால் கொடிய தோஷங்களும், வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அஷ்டமி, அமாவாசை, மகாளய பட்ச புண்ணிய நாட்களில் பாதாள பைரவருக்கு 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் மேலும் சிறப்பு தருவதாக அமையும்.

    ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம், சம்பந்தர், அப்பரால் பாடல் பெற்ற தலமாகும். இத்தல மூலவர் சன்னிதியில் உள்ள படிக லிங்கத்திற்கு தினமும் ஆறு கால பூஜை நடக்கிறது. ‘படிக லிங்க தரிசனம் கோடி பாப விமோசனம்’. இந்த படிக லிங்கம் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். எத்தகைய கொடிய தோஷமாக இருந்தாலும், ராமேஸ்வரம் கடலில் நீராடி எழுந்து, ஈசனை வழிபட்டால் உடனே விலகும் என்பது நம்பிக்கை. இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடி அந்த கடல் மண்ணில் சிவலிங்கம் பிடித்து பூஜித்து வழிபட்டால் முற்பிறவி, இப்பிறவி தோஷங்கள் விலகும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது.

    பித்ரு தோஷம் விலக, குழந்தை பாக்கியம், திருமணம் அமைய, தரித்திரம் விலக, கொடிய நோய்கள் அகல இத்தல தீர்த்த நீராடலும், தரிசனமும், இங்கு உள்ள பாதாள பைரவரை வழிபட்டு பலன் பெறலாம். காசி யாத்திரை செய்பவர்கள் முதலில் இத்தல வழிபாடு செய்து, காசியில் விஸ்வநாதரையும், காசி காலபைரவரையும் வழிபட்டு, அங்கு கங்கையில் தீர்த்தம் எடுத்து வந்து, மீண்டும் ராமேஸ்வரம் வந்து ராமநாத சுவாமிக்கு அந்த கங்கா அபிஷேகம் கொண்டு வழிபாடு செய்த பிறகே, காசி யாத்திரை முழுமை அடையும். பின்பு ராமேஸ்வரம் வழிபாடு செய்து கன்னியாகுமரி முக்கடலில் நீராடி ஈசனை நினைத்து அனுதினமும் தவம் இயற்றும் குமரி பகவதியை வழிபட சகல மேன்மைகளை அடையலாம் என்கிறார்கள்.

    மதுரையில் இருந்து 152 கிலோமீட்டர் தூரத்தில் ராமேஸ்வரம் அமைந்து உள்ளது.
    Next Story
    ×