search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருஷ்டி கழிப்பது ஏன்?
    X

    திருஷ்டி கழிப்பது ஏன்?

    குழந்தைகள் நோயுற்று இருக்கும்போது, அவர்களுக்கு திருஷ்டி சுற்றிப் போட்டால், குழந்தையின் உடல் நலம் தேறிவிடுவதை பலமுறை நீங்கள் பார்த்திருக்கலாம்.
    கேள்வி: திருஷ்டி கழிப்பது என்றால் என்ன? அதன் பின்னர் இருக்கும் விஞ்ஞானம் என்ன? லிங்கபைரவி கோவிலில் நடைபெறும் அந்த செயல்முறையில் வேப்பிலை ஏன் பயன்படுத்தப்படுகிறது?

    சத்குரு: ஒருவருடைய ஆராவை (Aura - உடலை சுற்றி இருக்கும் ஒளி உடல்) பார்த்தே அவருடைய உடல்நலம், மனநலம் மற்றும் கர்மா கட்டமைப்பு ஆகியவை, இறந்த காலத்தில் எப்படி இருந்தது, நிகழ்காலத்தில் எப்படி இருக்கிறது என்று கூறமுடியும். ஆகவே, ஒளிஉடல் என்பது ஒருவருடைய தன்மையின் சூட்சுமமான வெளிப்பாடு.

    அத்தகைய ஒளி உடலை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் நல்லது. ஒளி உடலை எப்படி சுத்தப்படுத்துவது? உங்கள் உடல் மற்றும் மனத்தின் வெளிப்பாடுதான் ஒளி உடல். எனவே, உங்கள் உடல் மற்றும் மனத்தை சுத்தப்படுத்தினால் ஒளி உடலும் சுத்தமாகிறது. உடலையும், மனதையும் சுத்தப்படுத்துவதற்கு யோகப் பயிற்சிகள் தவிர, உணவு முறைகள் என்று பல முறைகள் இருக்கின்றன.

    யோகப் பயிற்சிகள் தொடர்ந்து செய்து வரும்போது எப்போதோ, நேற்றோ அல்லது பத்து வருடங்களுக்கு முன்போ உங்களுக்குள் சேர்ந்த கறைகளும்கூட நீங்கி ஒளி உடல் மேலும் தூய்மையாகும்.

    சுத்தப்படுத்திக் கொள்ள வேறுமுறைகள் என்று பார்க்கும்போது நீங்கள் சாதாரணமாக தலைமேல் நீர்விட்டுக் குளிக்கும்போதே கூட, உங்கள் மேல் உடல் மட்டும் சுத்தமாவதில்லை. கூடவே உங்கள் ஒளி உடலும் சுத்தமாகிறது. உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் கடுங்கோபத்தில் இருக்கும்போது, பலவிதமான எதிர்வினைகளும் உங்களுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, போய் தலைக்குக் குளித்துவிட்டு வந்தால், உங்களுக்குள் இருந்த அத்தனை குப்பைகளும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாக உணர்வீர்கள்.

    நீர்க் குளியலில் மட்டும் இப்படி நடப்பதில்லை. இந்த உடல் நீர், மண், வாயு, நெருப்பு போன்ற பஞ்சபூதங்களால் ஆனது. எனவே அந்த பஞ்சபூதங்களான ஒவ்வொன்றுக்கும் நம்மை உட்படுத்திக் கொள்ளும்போது ஒவ்வொரு முறையும் நம் ஒளி உடல் சுத்தமாகிறது.



    தென்றல் காற்று வீசிக் கொண்டிருக்கும்போது, மெல்லிய ஆடைகளை அணிந்து கொண்டு காற்று வாங்கினால், கொஞ்ச நேரம் கழித்து ஓய்வாகவும், மிகவும் சுத்தமாகவும் லேசாகவும் உணர்வீர்கள். அதுதான் காற்றுக் குளியல். அதேபோல் மண் குளியலும் செய்துகொள்ள முடியும். ஈஷா புத்துணர்வு மையத்துக்குச் சென்றால் அங்கு உங்களுக்கு களிமண் குளியல் கொடுப்பார்கள். அதேபோல உங்களுக்கு நெருப்புக் குளியலும் கொடுக்கமுடியும்.

    லிங்கபைரவி தேவி இருக்கும் இடத்தில் கொடுக்கப்படுவது நெருப்புக் குளியல். தீக்குளியல் என்றால் தீயை உங்கள் உடல் முழுவதும் ஊற்ற முடியாது. எனவே, அங்கு நெருப்பின் மூலம் உங்கள் ஒளியுடலைத் தொடுகிறார்கள். உங்கள் ஒளியுடலில் குறிப்பிட்ட சில உருவ அமைப்புகள் இருக்கின்றன. அந்த அமைப்புகளின் தடத்திலேயே இந்தத் தீயைக் கொண்டு செல்கிறார்கள். அப்படிச் செய்ததும் திடீரென்று உங்களுக்கு ஒரு தெளிவும் புத்துணர்வும் கிடைப்பதை உணர்வீர்கள்.

    இந்தியக் கலாச்சாரத்தில், வீடுகளில் இருக்கும் பாட்டிமார்கள், உங்களுக்கு திருஷ்டி கழிப்பார்கள். அதைச் சரியாக செய்தால், அது மிக அற்புதமாக வேலை செய்யும். வெறுமனே செய்தாலும் அது ஓரளவுக்கு வேலை செய்யும். குழந்தைகள் நோயுற்று இருக்கும்போது, அவர்களுக்கு திருஷ்டி சுற்றிப் போட்டால், குழந்தையின் உடல் நலம் தேறிவிடுவதை பலமுறை நீங்கள் பார்த்திருக்கலாம். ஏனென்றால், திருஷ்டி கழிப்பது என்பது ஒரு தீக்குளியல். அது உங்கள் அமைப்புகளில் பல நன்மைகளை நிகழ்த்துகிறது.

    லிங்கபைரவி தேவி இருக்கும் இடத்தில் செய்யப்படும் இந்தச் செயல்முறையின்போது வேப்பிலையும் பயன்படுத்துகிறார்கள். ஏனெனில், வேப்பிலைக்கு சுத்தப்படுத்தும் தன்மை அதிகமாக இருக்கிறது. காலையில் வேப்பிலை அரைத்து சிறிய உருண்டை செய்து தொடர்ந்து சாப்பிட்டால், உங்கள் வயிறு சுத்தமாக இருக்கும். சில வகையான தொற்று நோய்கள் ஏற்படும்போது, வேப்பிலையில் படுக்கைசெய்து அதில் படுக்க வைப்பார்கள். ஏனென்றால், அது மிகச் சிறந்த கிருமி நாசினியாகவும், நல்ல சக்தியூட்டியாகவும் இருக்கிறது. வேப்பிலைக்கு மிகச் சிறந்த மருத்துவ குணங்களும், மேன்மையான பிராண அதிர்வுகளை வெளிப்படுத்தும் தன்மையும் உண்டு.

    க்லேஷ நாஷன க்ரியா என்ற பெயரில் செய்யப்படும் இந்தச் செயல்முறையில் உங்கள் ஒளி உடலில் இருக்கும் அசுத்தங்கள் நீங்கி விடுவதால், உடல்நலம், மனதில் சமநிலை, நல்வாழ்வு போன்ற பலன்கள் ஏற்படுகின்றன.
    Next Story
    ×