search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கேட்ட வரம் அருளும் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள்
    X

    கேட்ட வரம் அருளும் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள்

    வரலாற்று சிறப்பு மற்றும் கலை நயம் வாய்ந்த சவுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் பல்வேறு தோஷங்களுக்கு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
    திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் வரலாற்று சிறப்பு மற்றும் கலை நயம் வாய்ந்த சவுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. விஜயநகர பேரரசர்களான அச்சுததேவராயர், ராமதேவராயர் ஆகியோரால் திருக்கோவில் முழுவதும் கற்களால் கட்டப்பட்டது. மேலும் மழைநீர் சேகரிப்புக்கு முன் உதாரணமாகவும் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு நோக்கி நின்ற நிலையில் சவுந்தரராஜ பெருமாள், சவுந்திர வள்ளித்தாயார் மற்றும் ஆண்டாள் சமேதமாக எழுந்தருளும் மூலசன்னிதானம், சிற்ப வேலைபாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. சவுந்திர வள்ளித் தாயாருக்கு தனி சன்னதியும், ஆண்டாளுக்கென தனி சன்னதியும் அமைய பெற்றுள்ளது. பரிவார மூர்த்திகளாக விஷ்வக்சேனர், நம்மாழ்வார், இரட்டை விநாயகர், கல்விக்கடவுளான சரஸ்வதி, ஞானம் அளித்த ஹயக்ரீவர் ஆகியோரும் எழுந்தருளியுள்ளனர்.

    தீராத நோய்களை தீர்க்கும் வாய்மை பெற்ற தன்வந்திரி பெருமாளும், மன திடத்தையும், வெற்றியையும் அருளும் லட்சுமி நரசிம்மரும், குழந்தை இல்லாதோருக்கு தானே குழந்தையாக வரும் வேணுகோபாலன், மன தைரியத்தை வழங்கும் வீரபக்த ஆஞ்சநேயர், வராக் கடன்களையும், பொருளாதார பிரச்சினைகளையும் தீர்க்க வல்ல சொர்ண ஆகர்ஷண பைரவரும் தனித்தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளனர்.

    மேலும் வியாபாரத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்தும் வல்லமை வாய்ந்த சக்கரத்தாழ்வார் பிரகாரத்திற்கு வெளியே தென்பகுதியில் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த கோவிலில் பல்வேறு வைபவங்கள் நடைபெற்று வந்தாலும், ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடித்திருவிழா தோராட்டம் பிரசித்தி பெற்றதாகும். இதுபோன்று மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியில் நடைபெறும் சொர்ண ஆகர்ஷண பைரவர் சிறப்பு பூஜையும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.
    Next Story
    ×