search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தோஷம், பாவம் போக்கும் காவிரி புஷ்கரம்
    X

    தோஷம், பாவம் போக்கும் காவிரி புஷ்கரம்

    காவிரி ஆற்றில் நீராடுவதால் பிதுர்தோஷம், பிரம்மஹத்தி தோஷம், நதி தோஷம் ஆகியன நீங்கி, வறுமை, பஞ்சம் அகன்று, செழுமை அடைந்து உலகம் சுபிட்சம் பெறும்.
    “ஆயிரம் ஆனாலும், மாயூரம் ஆகாது” என்பது பழமொழி. ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் தினமும் நீராடினால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அந்த புண்ணியம் மயிலாடுதுறை துலாகட்ட காவிரி ஆற்றில் புனித நீராடினால் கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.

    காவிரி மகாத்மியம் என்ற நூலில், நதிகளில் உயர்ந்தது காவிரியே என்று கூறப்பட்டுள்ளது. முன்பு ஒரு காலத்தல் கன்ம மகரிஷி என்ற மாமுனிவரை ஒரு நாள் கருத்த நிறத்தில் உள்ள 3 பெண்கள் சந்தித்தனர். அப்போது அவர்களிடம் நீங்கள் யார்? என்று முனிவர் கேட்டார்.

    அதற்கு அவர்கள் நாங்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள். மனிதர்கள் தாங்கள் செய்த பாவங்களை எங்களிடம் கொட்டித்தீர்த்ததால் நாங்கள் கருமை நிறம் அடைந்துவிட்டோம். எங்களது பாவத்தை போக்க வழிவகை செய்யவேண்டும் என்று முனிவரிடம் கேட்டனர். அதற்கு முனிவர் அவர்களிடம், தென்னிந்திய பகுதியான மயிலாடுதுறையில் உள்ள துலாகட்டத்தில் காவிரி ஆற்றில் துலா மாதம் என்று அழைக்கப்படும் ஐப்பசி மாதத்தில் புனித நீராடி மயூரநாதரையும், பரிமள ரெங்கநாதரையும் தரிசனம் செய்தால் உங்கள் பாவங்கள் போகும் என்று கூறினார். அதன்படி 3 பேரும் மயிலாடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடி பாவங்களை போக்கி கொண்டனர்.

    ஒரு சமயம் நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவான், பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரிந்தார். அப்போது பிரம்மா, குருபகவான் முன்பு தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு குருபகவான், உங்களிடம் உள்ள 3½ கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியாகிய புஷ்கரத்தை எனக்கு தாருங்கள் என்று கேட்டார். அதற்கு பிரம்மாவும் ஒப்புக்கொண்டார்.


    மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் புஷ்கர விழா நடைபெறும் துலாகட்ட பகுதியை படத்தில் காணலாம்.

    அப்போது புஷ்கரம் பிரம்மாவிடம், நான் உங்களிடமே இருப்பேன். என்னை உங்களிடம் இருந்து பிரித்துவிடாதீர்கள் என்று வேண்டிக்கொண்டது. இதனால் தர்மசங்கடம் அடைந்த பிரம்மா கொடுத்த வாக்கை பின்வாங்காமல் குருபகவானுக்கும், புஷ்கரத்திற்கும் இடையே ஒரு சமாதான நடவடிக்கையை மேற்கொண்டார். அதன்படி இருவரும் செயல்பட உறுதி அளித்தனர். அதாவது புஷ்கரம், குருபகவான் சஞ்சரிக்கும் மேஷ ராசி முதல் மீன ராசி வரை உள்ள 12 ராசிகளிலும், அந்தந்த ராசிக்கு உரிய புண்ணிய நதிகளில் வாசம் செய்து மக்களுக்கு நன்மைகளை செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது.

    அதன்படி துலாம் ராசிக்கு அதிபதியான காவிரியில் புஷ்கரம் தங்கி இருப்பதுடன், அதே காலக்கட்டத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் ஆகியோரும் ஒருசேர இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவும் செய்வார்கள். எனவே, மேற்கண்ட நாட்களில் பக்தர்கள் இந்த புனித நதியில் நீராடினால் அனைத்து வகை பாவங்களும் நீங்கி வளமையும், செழிப்பும் பெற்று நல்வாழ்வு வாழ்வார்கள் என்பது தான் புஷ்கரத்தின் மகிமையாகும்.

    காவிரி புஷ்கரம் என்பது குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு மாறும் குருபெயர்ச்சி காலமாகும். வருகிற செப்டம்பர் மாதம் 12-ந் தேதி இந்த குருபெயர்ச்சி நடைபெற உள்ளது. குறிப்பாக துலாம் ராசிக்கு உரிய காவிரியில் மயிலாடுதுறையில் உள்ள துலா கட்டத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 12-ந் தேதி முதல் 12 நாட்கள் காவிரி புஷ்கரம் புண்ணிய காலம் ஆகும். இதனை ஆதிபுஷ்கரம் என்றும் அழைப்பார்கள்.

    இந்த புஷ்கர விழா கடந்த 12.9.1840-ம் ஆண்டு நடைபெற்றது. தற்போது 177 ஆண்டுகளுக்குப்பிறகு புஷ்கர விழா நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு குருபெயர்ச்சி முன்பு உள்ள 12 நாட்கள் அந்தி புஷ்கரம் என்று அழைப்பார்கள். மேற்படி நாட்களில் காவிரி ஆற்றில் நீராடுவதால் பிதுர்தோஷம், பிரம்மஹத்தி தோஷம், நதி தோஷம் ஆகியன நீங்கி, வறுமை, பஞ்சம் அகன்று, செழுமை அடைந்து உலகம் சுபிட்சம் பெறும்.
    Next Story
    ×