search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வழக்குகளில் வெற்றியை தரும் சரபசூலினி
    X

    வழக்குகளில் வெற்றியை தரும் சரபசூலினி

    பிளாஞ்சேரி கைலாசநாதர் தலத்தில் உள்ள இறைவன் மற்றும் இறைவியை வழிபட்டால் பித்ருதோஷம், திருமண தோஷம், புத்திர தோஷம் நீங்கும், பதவி உயர்வு, வழக்குகளில் வெற்றி கிட்டும்.
    கும்பகோணத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் பிளாஞ்சேரியில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இறைவனாக கைலாசநாதரும், இறைவியாக காமாட்சி அம்மனும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்த தலத்தில் தனி சன்னதியில் அஷ்ட பைரவர்களுடன் சரபசூலினி வீற்றிருக்கிறார்.

    ஊழிக்காலத்தில் பிரளயம் ஏற்பட்டு ஜீவராசிகள் அழிந்து விடும் என்று உணர்ந்த பிரம்மதேவர் சப்தரிஷிகளையும் அழைத்து ஜீவராசிகளை காக்கும் பொருட்டு, சிவபெரு மானை நோக்கி தவம் மேற்கொள்ளும் படி கூறினார். பிரம்மதேவரின் ஆணையை ஏற்று சப்தரிஷிகளும் தவம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.

    ஆத்ரேய மகரிஷியின் மகனான பிராச மகரிஷியும, ஜீவராசிகளை காக்கும் பொருட்டு சப்த ரிஷிகளோடு இணைந்து தவம் மேற்கொள்ள பிரம்மதேவரிடம் அனுமதி வேண்டினார். பிரம்மதேவரோ, நீ சப்த ரிஷிகளோடு இணைந்து தவம் மேற்கொள்ள இயலாது. உனது கர்மவினைகள் இன்னும் தீரவில்லை. ஆகையால் நீ முயற்சிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். இதனால் சினம் கொண்ட பிராச மகிரிஷி, இந்த ஆலயத்தில் உள்ள காமாட்சி அம்மன், கைலாசநாதரை வழிபட்டு தவம் மேற்கொண்டார்.

    பிராச மகரிஷியின் தவத்தால் மகிழ்ந்த கைலாசநாதர் அசரீரியாக, உனது கர்மவினைகள் அகல நீ சூலினி துர்க்கையை பிரதிஷ்டை செய்து, 1,008 பவுர்ணமி நன்னாளில் ஜெயமங்களா மகா யாகத்தை நடத்தினால் சூலினியின் அருளால் உனது கர்ம வினைகள்நீங்கி உன் தவப்பயனால் உலகம் அழிவில் இருந்து காக்கப்படும் என்றார். இந்த தலம் நீ வழிபாடு செய்ததால் இன்று முதல் பிராசவனஞ்சேரி என்றும் அழைக்கப்படும் என கூறினார்.



    ஆதலால் இந்த தலத்தில் உள்ள இறைவன் மற்றும் இறைவியை வழிபட்டால் பித்ருதோஷம், திருமண தோஷம், புத்திர தோஷம் நீங்கும், பதவி உயர்வு, வழக்குகளில் வெற்றி கிட்டும். இந்த கோவிலில் மட்டுமே பிராச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு 18 திருக்கரங்களோடு சிம்ம வாகனத்தில் அஷ்ட பைரவர்ளையும் காவலாக கொண்டு தனிப்பெரும் சக்தியாக சரபசூலினி அருளாசி புரிகிறார்.

    இங்கு மாதந்தோறும் பவுர்ணமி நாளில் மாலை 5 மணிக்கு ஸ்ரீஜெயமங்களா யாகம் நடைபெறுகிறது. இந்த யாகத்தில் கலந்து கொண்டால் பில்லி,சூனியம், ஏவல், எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடலாம். இழந்த பதவிகள் கிட்டும். உயர் பதவிகள் பெறலாம். அரசியலில் வெற்றி பெறலாம் என இங்கு வரும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    இந்த கோவிலில் தனி சன்னதியில் மங்கள சனீஸ்வரன் வீற்றிருப்பது இக்கோவிலுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. அதேபோல் இந்த கோவிலில் அஷ்ட பைரவர்கள் தனி சன்னதியில் வீற்றிருக்கின்றனர். 9 வெள்ளிக்கிழமைகள் அஷ்ட பைரவர்கள் மற்றும் சரப சூலினிக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். 8 தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவர்களை வழிபட்டால் சகல ஐஸ்வரியங்களும் கிட்டும்.

    Next Story
    ×