search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராகு, கேது தோஷம் போக்கும் பாம்புரேஸ்வரர்
    X

    ராகு, கேது தோஷம் போக்கும் பாம்புரேஸ்வரர்

    திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரர் கோவில் ராகு, கேது தோஷ நிவர்த்தி பரிகார தலமாகும். ஆதிசேஷன் தனது தோஷம் நீங்க வழிபட்டதால் இத்தலம் பாம்பு+புரம்= திருப்பாம்புரம் என்றானது.
    திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரர் கோவில் ராகு, கேது தோஷ நிவர்த்தி பரிகார தலமாகும். ஆதிசேஷன் தனது தோஷம் நீங்க வழிபட்டதால் இத்தலம் பாம்பு+புரம்= திருப்பாம்புரம் என்றானது.

    கருவறையில் பாம்புரேஸ்வரர் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ஆதிசேஷன் (உற்சவர்) ஈசனை தொழுத வண்ணம் கருவறையில் எழுந்தருளியுள்ளார். ராகுவும், கேதுவும் ஈசனை நெஞ்சில் நிறுத்தி ஏக சரீரமாகி அருள் பெற்றதாக புராண வரலாறு.

    ராகுவும், கேதுவும் கோவிலில் ஈசானிய மூலையில் தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளனர். சிவனுக்கும், அம்பாளுக்கும் ராகு காலத்தில் அர்ச்சனை, அபிஷேகம் செய்து வணங்குபவர்களுக்கு பாவங்கள் நீங்குவதாக ஐதீகம். மேலும் நினைத்த காரியம் நிறைவேறும்.



    ராகு, கேது தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்து கொள்ள விரும்புபவர்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் கோவிலுக்கு வந்து ஆதிசேஷன் தீர்த்தத்தில் நீராடி, விளக்கு ஏற்ற வேண்டும். சுவாமி, அம்பாளுக்கு தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.

    ராகு, கேது சன்னிதியில் அமர்ந்து பூவும், குங்குமமும் வைத்து அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை வீட்டுக்கு எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து 48 நாட்கள் பூஜை செய்ய வேண்டும். பிரார்த்தனை நிறைவேறியதும் மஞ்சள் துணியில் வைத்து எடுத்து வந்து அதை கோவில் உண்டியலில் போட வேண்டும்.

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே அமைந்துள்ள திருப்பாம்புரத்துக்கு சென்னையில் இருந்து வருபவர்கள் மயிலாடுதுறை வரை ரெயிலில் வந்து அங்கிருந்து பஸ், காரில் கோவிலுக்கு வரலாம். திருவாரூர் செல்லும் வழியில் கொல்லுமாங்குடி சாலையில் திருநாகேஸ்வரம், திரு நீலக்குடி வழியாக பயணித்தால் திருப்பாம்புரத்தை அடையலாம்.
    Next Story
    ×