search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தோஷம், முற்பிறவியில் செய்த பாவங்களை போக்கும் கோபூஜை
    X

    தோஷம், முற்பிறவியில் செய்த பாவங்களை போக்கும் கோபூஜை

    கோபூஜை செய்வதால், குழந்தை இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு, புத்திரப்பேறு வாய்க்கும். தீய சக்திகள் விலகும். முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும்.
    தமிழர் திருநாளான பொங்கலுக்கு மறுதினம் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கோ-பூஜை செய்து வழிபடுவது நல்லது. வாழ்க்கையில் பெரிய புண்ணியத்தைத் தருவது பசு வணக்கம். பசுவின் உடலில் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், இதர தெய்வங்களும், ரிஷிகளும், அஷ்டவசுக்கள் அடக்கம் என்று வேத நூல்கள் கூறுகின்றன. பசுவை பெற்ற தாய்க்கு இணையாக கருதிதான் நாம் ‘கோமாதா’ என்று அழைக்கிறோம். பசுவின் பால், நெய் கொண்டே யாகங்கள் செய்விக்கப்படுகின்றன. இவ்வாறு யாகங்கள் செய்வதால் மழை பொழியும் என்பது ஐதீகம்.

    கோமாதா பூஜை செய்யும் போது பசுவை முன்புறமாக தரிசிப்பதை விட, பின்புறமாக தரிசிப்பது மிகவும் நன்மை தரும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் பசுவின் பின்புறத்தில்தான் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். பசுவை வழி படும்போது, முன் நெற்றி, வால் பகுதிகளில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலை அணிவிக்க வேண்டும். பசுவின் சாணமும் லட்சுமி அம்சம். எனவேதான் வீட்டு வாசலில் சாணம் கரைத்து தெளிக்கிறார்கள். பசுவுக்கு பூஜை செய்வது என்பது, அகிலத்தைக் காக்கும் அன்னை பராசக்திக்கு பூஜை செய்வதற்கு ஒப்பானதாகும்.

    கோமாதா பூஜையின் போது பசுவிற்கு அகத்திக்கீரை, சர்க்கரைப்பொங்கல், பழவகைகள் போன்றவற்றை ஆகாரமாகத் தர வேண்டும். கோமாதாவின் 108 போற்றியை பக்தியுடன் சொல்லி வழிபட வேண்டும். பின்னர் நெய்தீபத்தால் ஆராதனை செய்து, மூன்று முறை வலம் வந்து விழுந்து வணங்க வேண்டும். கோபூஜையின் போது, பசுவுடன் கன்றையும் சேர்த்தே பூஜிக்க வேண்டும். வீட்டில் பசு இல்லாதவர்கள், தினமும் ஏதாவது ஒரு பசுவிற்கு அருகம்புல், அகத்திக்கீரை, வாழைப்பழம் ஆகியவற்றை தீவனமாக கொடுத்தால் கோ பூஜை செய்த பலன் கிடைக்கும். வெளியில் மேய்ந்து வரும் பசுக்களுக்கு, வீட்டின் வெளிப்புறம் தண்ணீர் தொட்டி வைக்கலாம்.

    பாற்கடலில் பிறந்த ஐந்து பசுக்களும் கோலோகத்தில் இருந்து அருள்புரிவதாக ஐதீகம். பசுவைத்தெய்வமாக வழிபட்டால் கோலோகத்தை அடையும் பாக்கியம் உண்டாகும். வீட்டில் கோபூஜை நடத்த முடியாதவர்கள் அருகில் உள்ள பசுபராமரிப்பு இடங்களிலும், வழிபாட்டிலும் கலந்து கொள்ளலாம். தினமும் பூஜை செய்ய முடியாவிட்டால் வெள்ளிக்கிழமைதோறும் பூஜை செய்ய வேண்டும். ஆலயங்களில் நடைபெறும் கோபூஜைகளில் கலந்து கொள்ளலாம்.

    வீட்டு வாசலை பெருக்கி, பசுவின் சாணத்தை கரைத்து தெளிப்பதற்கு காரணம் இருக்கிறது. பசுநீர், பசு சாணம் போன்றவை கிருமி நாசினியாக செயல்படுகின்றன. இதனால்தான் பசு சாணத்தை கரைத்து தெளிக்கிறோம். புதிதாக வீட்டுமனை வாங்கும் போதும், வீட்டு கிரகப் பிரவேசத்தின் போதும், தீவினைகள், தீய சக்திகளின் பாதுகாப்புக்கு உள்ளாகாமல் இருக்கவே, பசுவின் சாணத்தை தெளிப்பது வழக்கமாக உள்ளது.

    கோபூஜை செய்வதால், செல்வச் செழிப்பு உண்டாகும். குழந்தை இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு, புத்திரப்பேறு வாய்க்கும். தீய சக்திகள் விலகும். கல்வி, செல்வத்துக்குரிய தேவதைகள் பசுவில் இருப்பதால், அவர்களுக்கு செய்யும் பூஜை மூலம் நல்ல கல்வியும், செல்வச் செழிப்பும் வந்து சேரும். முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும். மன சஞ்சலங்கள் நீங்கி மகிழ்ச்சி குடிகொள்ளும். கோபூஜை செய்வதால், பல யாகங்கள் செய்த பலனும், பல புராதன கோவில்களுக்கு சென்று தெய்வத்தை வணங்கிய பலனும் கிடைக்கும்.
    Next Story
    ×