search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வேலையில் உயர் பதவி கிடைக்க பரிக்கல் நரசிம்மர் வழிபாடு
    X

    வேலையில் உயர் பதவி கிடைக்க பரிக்கல் நரசிம்மர் வழிபாடு

    எவரெவர் தங்களுக்குச் சிறந்த வேலையும், வேலையில் உயர்ந்த பதவியும் அடைய விரும்புகிறார்களோ அவர்களுக்கு ஸ்ரீபரிக்கல் நரசிம்மர் நிச்சயம் பேரருள் புரிகின்றார்.
    மகாலட்சுமியின் அன்பான அரவணைப்பால் பகவான் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி தன் கோபத்தைத் தணித்து சாந்த மூர்த்தியான இடம் இதுவாகும். இங்கு மகாலட்சுமி அவளுடைய வலது கரத்தால் சுவாமியை தழுவியும், பகவான் தன்னுடைய இடது கரத்தால் தாயாரை அரவணைத்தும் சேவை சாதிக்கிறார்.
    வசந்தராஜன் விருத்தாசலத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். அவன் ஒரு நரசிம்மர் திருக்கோவிலைக் கட்ட விரும்பினான். வசந்தராஜனுக்கு பரகாசுரன் என்ற அரக்கன் பல தொல்லைகளைக் கொண்டு வந்தான். அவன் அரக்கன் இரண்யகசிபுவின் உறவினன்.

    இந்த தொல்லைகளிலிருந்து விடுபட வசந்தராஜன் கடும் தவம் புரிந்தான். அவனுடைய குருவின் ஆணைப்படி இந்த இடத்தில் தவம் புரிந்தான். நரசிம்ம மூர்த்தி அவனுடைய தவத்தை மெச்சி அந்த அசுரனைக் கொன்றார். அந்த அசுரனைக் கொன்ற நரசிம்ம மூர்த்தியின் உக்ரரூபத்தைக் கண்டு அஞ்சி வசந்தராஜன் ஸ்ரீலட்சுமித் தாயாரிடம் பகவானை சாந்தப்படுத்தும்படி வேண்டினான். ஸ்ரீலட்சுமி தாயாரின் அரவணைப்பால் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சாந்தமாகி தன்னுடைய கொடூரமான முக பாவத்தை மாற்றிக் கொண்டு ஸ்ரீகனகவல்லித் தாயாரை தன்னுடைய மடியில் வீற்றிருக்கும்படி செய்தார். அதோடு வசந்தராஜனுக்கு ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சாந்த மூர்த்தியாகக் காட்சியளித்தார். தேவர்களும், முனிவர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

    இதனால் வசந்தராஜன் ஸ்ரீநரசிம்ம சுவாமியிடம் இங்கேயே தங்கும்படி வேண்டினான். அந்த அசுரனின் பெயரால் இந்த இடம் “பரிக்கல்புரம்” என்றாகிப் பிறகு நாளடைவில் பரிக்கல் எனப்பட்டது.

    இந்த திருக்கோவில் முதலில் சிவப்பு செங்கற்களாலும், சுண்ணாம்பு மற்றும் மரத்தாலும் கட்டப்பட்டிருந்தது. முஸ்லிம்களின் படையெடுப்பால் இக்கோவில் மிகவும் சிதைந்து போய், சிதிலமடைந்து அழிந்து போய் விட்டது.

    கர்நாடக அரசன் நரசிம்மன் என்பவன் இத்திருக்கோவிலை மறுபடியும் கறுப்பு பளிங்கு கற்களால் கட்டினான். இப்பொழுதும் மாத்வ மதத்தைச் சேர்ந்த கர்நாடக மாநிலத்தவர்கள் பரிக்கல் நரசிம்ம சுவாமியை தங்களுடைய குல தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள்.

    எவரெவர் தங்களுக்குச் சிறந்த வேலையும், வேலையில் உயர்ந்த பதவியும் அடைய விரும்புகிறார்களோ அவர்களுக்கு ஸ்ரீபரிக்கல் நரசிம்மர் நிச்சயம் பேரருள் புரிகின்றார். தங்களுடைய விருப்பம் நிறைவேறியபின் பக்தர்கள் இந்த நரசிம்ம சுவாமிக்கு தைலம், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்கிறார்கள். பஞ்சாமிர்தம், எலுமிச்சம்பழம், சந்தனம் மேலும் வஸ்திரம் முதலியவற்றை நரசிம்மருக்கு சமர்ப்பணம் செய்கின்றார்கள்.

    சில நேரங்களில் தங்களுடைய முடியையும் காணிக்கையாகக் கொடுக்கின்றார்கள். அவர்கள் பெரிய விளக்கு, மாவிளக்கு (அதாவது அரிசி மாவு, நெய் முதலியவற்றை கலந்தது) ஏற்றி பெருமாளுக்குப் பூஜை செய்வார்கள். மேலும் சில பக்தர்கள் காதுகுத்தல், அங்கபிரதட்சணம் (அதாவது ஈரத்துணியுடன் பிரகாரத்தில் உருண்டு பிரண்டு அங்கபிரதட்சணம்) செய்வார்கள்.

    ஸ்ரீபரிக்கல் நரசிம்ம சுவாமிக்கு எப்பொழுதெல்லாம் அபிஷேகம் செய்யப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் ஸ்ரீஆஞ்சநேய சுவாமிக்கும், கனகவல்லித் தாயாருக்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது. இத்திருக்கோவிலுக்கு உள்ளே ஒரு கிணறு உள்ளது. அதற்கு அருகில் “நாககோபம்” கருடன், கோமுகி, தீர்த்தமும் உள்ளது. இத்திருக்கோவிலின் தல விருட்சம் மகிழமரம்.
    Next Story
    ×