search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சனி தோஷத்தை விரட்டும் எளிய வழிபாடு
    X

    சனி தோஷத்தை விரட்டும் எளிய வழிபாடு

    சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைத்து, சனி தோஷம் நீங்குவதற்காக கடைப்பிடிக்கப்படும் விரதம் சனி விரதமாகும்.
    சூரிய பகவானுக்கும் சாயா தேவிக்கும் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையன்று சனி பகவான் பிறந்தார். இவர் மந்தகதி உடையவர். சனீஸ்வரர் ஒரு ராசியைக் கடக்க இரண்டரை வருடங்கள் ஆகின்றன.

    ஆகவே ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு முப்பது ஆண்டுகளுக்கு ஒரு தடவை சனி தோஷங்கள் சுழற்சியாக ஏற்படுகின்றன. அதனால் 30 வருடங்களுக்கு மேல் கஷ்டமாக வாழ்ந்தவர்களும் இல்லை சிறப்பாக வாழ்ந்தவர்களும் இல்லை என்ற முதுமொழி பிறந்தது.

    வாழ்க்கையில் முதலில் வரும் ஏழரைச் சனி காலத்தை மங்கு சனி என்றும், இரண்டாவதாக வருவதை பொங்கு சனி என்றும், மூன்றாவதாக வருவதை மரணச் சனி என்றும் அழைப்பர். இக்காலங்களில் பெயருக்கு ஏற்றாற்போல் மற்றைய கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் கிடைக்கும்.

    சனிதோஷ காலங்களில் புத்திர பாக்கியக் குறைவு, மரண பயம், அதிக பிரயாணம், அதிக செலவு, பண நஷ்டம், உடல் நலக்குறைவு, வீண் சச்சரவு ஆகியவை உண்டாகும்.

    இத்தோஷத்தினால் பிடிக்கப் பெற்றவர்கள் தோஷ நிவர்த்தி செய்வதால் சனீஸ்வரன் மகிழ்வுற்று தாக்கங்கள் குறைவடைந்து நன்மைகள் ஏற்படும். இவற்றுள் ஏழரைச் சனிகாலம் மிகவும் கஷ்டமான காலமாக ஜோதிடம் கணித்துள்ளது.

    அரிச்சந்திர மகாராஜன் அரசிழந்து சுடலையில் காவல்காரன் ஆனதும், பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செய்ததும், இராமபிரான் வனவாசம் செய்ததும், சீதை இராவணனால் கவரப்பட்டு சிறையிலிருந்ததும் சனீஸ்வரனின் தோஷத்தாலே என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

    “சனீஸ்வரனைப் போல் கொடுப்பாரும் இல்லை,
    கெடுப்பாரும் இல்லை”
    என்பது சோதிடப் பழமொழி.

    அதனால் மக்களுக்குச் சனிபகவானிடம் சற்று பயம் உண்டு. இந்த ராசிகளில் சனீஸ்வரன் சஞ்சரிக்கும் போது பல கஷ்டங்களையும் நஷ்டங்களையும் தந்து துன்பப்படுத்திய சனீஸ்வரன் இந்த ராசிகளைக் கடந்து அடுத்த ராசிக்கு செல்லும் போது நஷ்டங்களை ஈடுசெய்யும் வகையில் கொடுத்து விட்டுச் செல்வார் என்பது ஐதீகம்.

    சனி தோஷம் உள்ளவர்கள் புரட்டாசி மாதத்து சனிக்கிழமைகளில் காலையில் நல்லெண்ணை வைத்து குளித்து விட்டு ஆலயம் சென்று கறுப்புத் துணியில் எள்ளை சிறு பொட்டலமாகக் கட்டி நல்லெண்ணை விட்டு விளக்கேற்றி அர்ச்சனைகள் செய்ய வேண்டும். அதோடு சனீஸ்வர தோத்திரம் பாடி சனீஸ்வரனை வழிபட வேண்டும். அதன் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் பிராத்தித்து கோளறுபதிகம், தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்கவேண்டும்.

    வீடு சென்று உணவருந்தி விரதம் முடிக்க வேண்டும்.

    உணவருந்தும் முன் காகங்களுக்கு உணவு வைக்க வேண்டும். மற்ற விரதங்களின் போது எண்ணெய் வைத்து குளிக்கும் வழக்கம் இல்லை. ஆனால் சனிக்கிழமை - சனீஸ்வரனுடைய விரதத்திற்கு மட்டும் எண்ணெய் வைத்து நீராடும் முறை கடைப்பிடிக்கப்படுகின்றது.

    அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் சனீஸ்வரன் நீதி தவறாதவர். இவரது தினமான சனிக்கிழமைகளில் விரதமிருந்து வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் துன்பமில்லாத வாழ்வும் கிடைக்கும்.

    ஒவ்வொரு சனிக் கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்டாசிச்சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம். சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்வது கூடுதல் நன்மையைத்தரும்.

    புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர். எனவே தான் சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவவிஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானிற்கு எள்நெய் எரித்து வழிபடுவதோடு, சிவ விஷ்ணுக்களையும் வழிபடுவது கட்டாயமாகின்றது.

    சனீஸ்வரன் சிறந்த சிவபக்தன். இந்தியாவில் திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வரனார் கோவில் மிகவும் பிரசித்தமானது. இங்கே நள மகாராஜன் சிவபெருமானை வழிபட்டு சனீஸ்வரனால் பீடித்த துன்பத்தில் இருந்து விடுபட்டான் என்றும் கூறுவர். சனீஸ்வரன் தானியம் எள்ளு, வர்ணம் கறுப்பு, வாகனம் காகம்.

    எனவேதான் சனீஸ்வர தோஷத்தால் பீடிக்கப்பட்டவர்கள் ஏழு சனிக்கிழமை காலை தொடர்ந்து எள்நெய் தேய்த்து, நீராடி, சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயம் சென்று சனீஸ்வரனிற்கு எள்ளு, கறுத்தப்பட்டு தானமாகக் கொடுத்து எள்ளுப் பொட்டலம் கறுத்தத் துணியில் கட்டி அதனை ஒரு மண் சட்டியில் இட்டு, நிறைய எள்நெய் விட்டு தீபமாக சனீஸ்வரனுக்கு முன் வைத்து வழிபடவேண்டும்.

    சனிக்கிழமை விரதம் எளிமையானது. புனிதமானது. பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம்.
    Next Story
    ×