search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாக தோஷத்திற்கு சிறந்த பரிகார ஸ்தலம்
    X

    நாக தோஷத்திற்கு சிறந்த பரிகார ஸ்தலம்

    திருப்பாம்புரத்தில் ராகுவும்- கேதுவும் ஏக சரீரம் எனப்படும் ஓருடலாய் இணைந்து வீற்றிருப்பது சிறப்புக்குரியதாக உள்ளது. மற்ற நாக பரிகார தலங்களைக் காட்டிலும், இந்தத் தலம் சிறப்புக்குரியதாக விளங்குகிறது.
    ராகு- கேது போன்ற சர்ப்ப கிரகங்கள் ஜாதகத்தில் சரியான இடத்தில் இல்லாமல் தோஷம் இருந்தால் அவர்கள் மனநிலையில் ஒரு தெளிவில்லாமல் இருப்பார்கள். அதற்கு நாக தோஷ பரிகாரம் செய்ய வேண்டும் என்பது சிலரின் கூற்றாக உள்ளது.

    ராகு - கேது திருநாகேஸ்வரம், பெரும்பள்ளம் போன்ற தலங்களில் தனித்தனியாக இருக்கிறார்கள். காளகஸ்தி போன்ற புகழ்பெற்ற திருக்கோவில்களில், சிவபெருமானே ராகு-கேதுக்களாக வீற்றிருந்து பக்தர்களின் தோஷம் நீக்கி அருள்பாலிக்கிறார்.

    திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்றத் தலமாக விளங்கும் திருப்பாம்புரத்தில், ராகுவும்- கேதுவும் ஏக சரீரம் எனப்படும் ஓருடலாய் இணைந்து வீற்றிருப்பது சிறப்புக்குரியதாக உள்ளது. 

    மேற்கு பார்த்த சன்னிதியில் இருந்து இறைவனை நெஞ்சில் நிறுத்தி வணங்கிய நிலையில் ராகு-கேது உள்ளனர். இருவரும் ஒருவராய் வீற்றிருப்பதால், மற்ற நாக பரிகார தலங்களைக் காட்டிலும், இந்தத் தலம் சிறப்புக்குரியதாக விளங்குகிறது.



    இத்தல இறைவன் பாம்புரேஸ்வரர் என்றும், பாம்புரநாதர் என்றும், சேஷபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். நாகராஜனான ஆதிசேஷன் மட்டுமல்லாது அனந்தன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் எனும் அஷ்ட நாகங்களும் வழிபட்ட சிறப்புக்குரிய தலம் இதுவாகும்.

    திருக்கோவிலின் பின்புறம் தல விருட்சமாக பெரிய வன்னி மரம் உள்ளது. அந்த மரத்தின் அடியில் வன்னி ஈஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த வன்னி மர ஈஸ்வரரை, பிரார்த்தனை செய்து கொண்டு மஞ்சள் துணியில் முடிச்சு போட்டு மரத்தில் கட்டி தொங்க விட்டால், எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. காள சர்ப்ப தோஷம், ராகு- கேது சதுர்த்தி உள்ளவர்கள், இந்த தோஷங்களால் திருமணம் மற்றும் குழந்தை பேறு தடை உள்ளவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது திருப்பாம்புரம் திருத்தலம். குடந்தை- காரைக்கால் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரில் இருந்து 4 கிலோமீட்டர் தூரம் வயல் பாதையில் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம்.  

    Next Story
    ×