search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தோஷம் போக்கும் விநாயகர் தலங்கள்
    X

    தோஷம் போக்கும் விநாயகர் தலங்கள்

    தோஷம் மற்றும் அனைத்து பிரச்சனைகளையும் போக்கும் விநாயகர் தலங்கள் என்னவென்று கீழே பார்க்கலாம்.
    சென்னை- வேலூர் நெடுஞ்சாலையில் 110 கி.மீ. தொலைவில் வாலாஜா பேட்டையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் நவக்கிரக கோட்டை எனும் புகழ் பெற்ற விநாயகர் தலம் உள்ளது.

    மகாமண்டபத்தில் விநாயகரின் 32 திருவுருவங்களை கொண்ட இத்தலத்தில் பிரதான மூர்த்தியாக ஸ்ரீநவசித்தி விநாயகர் விளங்குகிறார். மூலவருடன் இரண்டு விநா யகர்கள் சுயம்புவாக உள்ளனர். நடுவில் சிவலிங்க வடிவில் உள்ள மூர்த்தத்தின் நடுப்பாகத்தில் நாகம் படமெடுத்த நிலையிலும் திகழ்கிறது. சிந்தையில் தெளிவும், மனக்குழப்ப நிவர்த்தியும், ராகு கேது தோஷ நிவர்த்தியும் கிட்டும் தலமாக திகழ்கிறது.

    பாபநாசம் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலின் வடபுறம் உள்ள விநாயகரின் தலைக்குமேல் ஐந்து தலைநாகம் குடைபிடித்துள்ளது. மேலும் அவரின் இடுப்பு மற்றும் பத்து கரங்களிலும் பாம்புகள் காட்சியளிக்கின்றன. இந்த விநாயகர் பக்தர்களுக்கு ஏற்படும் ராகு-கேது தோஷங்களை போக்குபவராக வழிபடப்படுகிறார்.

    சிவனுக்கும், அம்பிகைக்கும் நடுவில் இருக்கும் விநாயகரை சோமகணபதி என்று அழைக்கிறார்கள். அந்த கணபதியை தரிசித்த அடுத்த நொடியே நாம் செய்த பாவங்கள் அனைத்தும் மறையும் என்பது ஐதீகம். சோமகணபதியை காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள தேனம்பாக்கம் சிவாலயத்தில் தரிசிக்கலாம்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் பழங்காமூரில் உள்ள வரசித்தி விநாயகர் ஆலயத்தில் நீண்டகாலமாக உள்ள புற்று ஒன்று விநாயகரின் வடிவமாகவே மாறி உள்ளது. இந்த விநாயகர் பக்தர்களின் பாவங்களைப் போக்குகிறார்.

    செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் பவழத்தால் செய்யப்பட்ட விநாயகரை செவ்வாய்க்கிழமை தோறும் தவறாமல் வணங்க வேண்டும். பவழத்தால் விநாயகர் செய்ய வசதியில்லாதவர்ள் செம்மண் அல்லது குங்குமத்தில் விநாயகர் செய்தும் வழிபடலாம்.

    பில்லி சூனியம் போன்ற கொடுமையான தீய சக்திகள் விலகுவதற்கு அரசும், வேம்பும் பின்னியபடி உள்ள மரத்தடியில் இருக்கும் விநாயகரை வழிபட வேண்டும்.

    திருநெல்வேலியில் இருந்து ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் காரையாரில் உள்ள அருவிக்கரை விநாயகருக்கு சித்தி விநாயகர் என்று பெயர். இடதுபுறம் கங்கையும், வலதுபுறம் பார்வதிதேவியும் உள்ளனர். இவ்விநாயகரை வணங்கினால் பிரம்மஹத்தி தோஷம் நீங்குமாம்.

    மதுரை மீனாட்சி திருக்கோவில் வளாகத்தில் திறந்த வெளியில் வன்னிமரத்தடியில் விநாயகர் அமர்ந்து அருள்பாலிக்கிறார். இவரை சுற்றி வன்னி, வேம்பு, மந்தாரை, அத்தி, நெல்லி, அரசு, வில்வம், பவளமல்லி, நாவல் ஆகிய ஒன்பது தல விருட்சங்கள் உள்ளன. அவற்றை ஒரே வேளையில் ஒன்றாக தரிசிப்பதால் நவக்கிரக தோஷம் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பர்.

    ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்த இடையன்குளம் கிராமத்தில் உள்ள பிள்ளையார் எதிரே உள்ள மூஞ்சூருக்கு வெந்நீர் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

    Next Story
    ×