search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சனி - செவ்வாய் சேர்க்கையும் பரிகாரமும்
    X

    சனி - செவ்வாய் சேர்க்கையும் பரிகாரமும்

    சனிக்கும் செவ்வாய்க்கும் பூஜைகள், வழிபாடுகள் செய்தால் இந்த கிரகங்களின் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
    இரண்டு பேருக்கு ஒருவரை ஒருவரை பிடிக்கவில்லையென்றாலே எப்போதும், முட்டலும் மோதலுமாகத்தான் இருக்கும். நவக்கிரகங்களுக்கும் இது பொருந்தும். நவகிரகங்களில் செவ்வாய் மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களின் செயல்பாடு மிகவும் முக்கியமானது. ஒருவர் பெயர் புகழுடன் அதிகாரம் செலுத்தும் நிலையில் இருக்கிறார் என்றால் அதற்கு செவ்வாய் கிரகம் பலமே காரணமாக இருக்கிறது.

    போலீஸ் - ராணுவம் மற்றும் பெரும் இயந்திரங்கள் கொண்ட தொழிற்சாலைகளுக்கு அதிபதியாக இருக்க, செவ்வாய் கிரகத்தின் தயவு தேவை. எண்ணற்ற சொத்துக்களுக்கு உரிமையாளராக இருப்பவர்களுக்கு செவ்வாய் அதிக பலத்துடன் இருப்பார். தைரியமாக ஒருவர் எந்த செயலையும் செய்கிறார் என்றால் அதற்கு காரணமானவர் செவ்வாய். ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பலவீனமாக இருந்தால் அந்த நபர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சொத்துக்கள் சேராது. சேர்ந்தாலும் தங்காது.

    ஒருவருக்கு அதிகமாக கோபம் வருகிறது என்றால் அதற்கும் காரணம் செவ்வாய் கிரகம்தான். பூமிக்கு அதிபதியான செவ்வாய், நிலஅதிர்வு-பூகம்பம் போன்றவற்றுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது. சமீபத்தில் நிகழ்ந்த ஜப்பான் பூகம்பம் உட்பட உலகில் நிகழ்ந்த பூகம்பம்-நிலஅதிர்வுகளுக்கு செவ்வாயின் கோச்சார நிலை காரணமாக இருந்தது என்பதை ஜோதிட ஆர்வலர்கள் அறிவார்கள்.

    செவ்வாய், சூரியனில் இருந்து நான்காவது கிரகம். இது சூரியனை சுற்றிவர 687 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. செவ்வாய்க்கு உரிய நிறம் சிகப்பு. அதனால் சிகப்பு நிறமுடைய பவழம் அணிவது நல்லது. செவ்வாய் கிரகத்திற்கு அடுத்தப்படியாக மிகமிக முக்கியமான கிரகம் சனி. ஈஸ்வரனையும் விடாததால் சனிஸ்வரர் என்று சிறப்பு பெயரை பெற்றவர் சனி பகவான்.

    பல தலைமுறைக்கும் சொத்துகளை வாரி வாரி வழங்கும் கிரகம் சனி. முப்பது ஆண்டுகள் வாழ்ந்தவனும் இல்லை முப்பது ஆண்டுகள் தாழ்ந்தவனும் இல்லை என்று சனியின் சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்டே சொன்னார்கள். ஒரு ராசியில் இருக்கும் சனிகிரகம் மீண்டும் அதே ராசிக்கு வந்து சேர முப்பது ஆண்டுகள் ஆகும். சனிகிரகத்தை ஜோதிட சாஸ்திரம் “மந்தன்” என்று அழைக்கிறது. அதாவது ஒருவர் திறமைசாலியாக இருந்தாலும் அவருடைய செயல்கள் மந்தமாக இருந்தால் சனியின் ஆதிக்கத்தை கொண்டவர் என்று அறியலாம்.

    சுறுசுறுப்பு குறைந்த தன்மையை சனி கிரகம் தருகிறது. உடல் ஊனமுற்றவர்கள் குறிப்பாக நடப்பதற்கு சிரமப்படுகிறவர்களின் ஜாதகத்தில் சனி பலவீனம் கொண்டதாக இருக்கும் என்பதை அறியலாம். சனி பகவான் தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டார். அவரை பொறுத்தவரையில் ஏழையும் ஒன்றுதான் பெரும் பணக்காரனும் ஒன்றுதான்.

    சனியின் கொடுமையான பாதிப்பு இருக்கும் காலத்தில் ஒருவன் ஆடம்பரமான எதையும் விரும்பக் கூடாது. அந்த நபர் உடுத்தும் ஆடை கூட மிக சாதாரணமானதாக இருக்க வேண்டும். இத்தகைய தன்மைகளை சனிகிரகம் கொண்டிருந்தாலும் சனி கிரகத்தை போல ஒரு அற்புதமான வாழ்க்கையை தரும் கிரகம் இருக்க முடியாது.

    சனி கிரகத்தின் துணை ஒருவனுக்கு இருக்குமானால் அந்த நபரை எவராலும் வெல்ல முடியாது. இப்படியாக செவ்வாய் மற்றும் சனியின் செயல்பாடுகள் தனி நபர்களின் அபரிதமான வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக இருக்கிறது. ஜோதிட ரீதியாக செவ்வாய் கிரகமானது சனியை பகை கிரகமாக நினைக்கவில்லை. ஆனால் சனி கிரகம் செவ்வாயை பகை கிரகமாக நினைக்கிறது. இதனால் ஒரு ஜாதகத்தில் செவ்வாயும்-சனியும் ஒரே வீட்டில் ஒன்றாக இணைந்திருக்கும் போது மோதிக் கொள்கிறார்கள்.

    இதனை கிரக யுத்தம் என்று சொல்வார்கள். செவ்வாய்-சனி ஒரே ராசி வீட்டில் இணைந்திருக்கும் போது அதனுடன் வேறு கிரகங்கள் சேர்ந்திருந்தால் ஒரளவு பாதிப்பு குறையும். அப்படி இல்லாமல் செவ்வாய்-சனி மட்டும் ஒன்றாக இணைந்திருந்தால் அவை எந்த இடத்தில் அமைந்திருக்கிறதோ அந்த பாவத்தை பலவீனப்படுத்தி விடும்.

    செவ்வாயும் சனியும் தற்போது விருச்சிக ராசியில் ஒன்று சேர்ந்துள்ளன. வழக்கமாக ஒன்றரை மாதத்தில் ஒரு ராசியை கடந்துவிடும் செவ்வாய் தன் வீட்டில் விருச்சிகத்தில் வக்கிர கதிக்கு உள்ளாவதால் சில மாதங்கள் தங்குகிறார். சனி பாதுகாப்புத்துறைக்குரிய போர்க்கிரகம். செவ்வாய் போரில் வீரர்களை வழிநடத்தும் சேனாதிபதி கிரகம். தீவிரமான செயல்திறனும் மெதுவான செயல் வேகமும் கொண்ட சனி சேனாதிபதியான செவ்வாயின் பார்வையில் அல்லது சேர்க்கையில் போரிடும்போது தீவிரமாக செயல்படும்.

    பொதுவாக சனி செவ்வாய் சேர்ந்து இருப்பது, இயற்கை பேரழிவுகளை கொண்டுவரும். பூகம்பம், நில நடுக்கம், விமான விபத்துகள், நாடுகளுக்கு இடையேயான போர்கள், தீவிரவாத தாக்குதல்கள், பெரும் தீ விபத்துகள் போன்றவவை ஏற்படும். கடல் உயிரினங்கள், வன உயிரினங்கள் போன்றவை பெரும் உயிரிழப்புகளை சந்திக்கும்.

    செவ்வாய் சனி சேர்க்கை கடந்த 27.02.2016--ல் தொடங்கியது. இந்த இரு கிரகங்களும் 09.09.2016வரை இணைந்து, விருச்சிக ராசியில் இருக்கும். இந்த காலகட்டத்தில் உலகத்தின் பல இடங்களில் பெருத்த மழை, வெள்ளம், நிலநடுக்கம், பூகம்பம் வாகன விபத்துகள் தீ விபத்துகள் சண்டை சச்சரவுகள் ஏற்படும் என்று உலகம் முழுவதும் உள்ள ஜோதிடர்கள் எச்சரித்துள்ளனர்.

    முக்கியமாக, 27.02.2016 முதல் 09.09.2016 வரை உலகத்திற்கு நன்மை தரக் கூடிய காலகட்டம் இல்லை. இத்துடன் நில நடுக்கம், நெருப்பு, வாகன விபத்துகளும் கலவரங்களும் சண்டை சச்சரவுகளும் உண்டாகும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். எனவே அடுத்த 3 மாதத்துக்கு சனி, செவ்வாய் சேர்ந்து இருப்பதால் ஏற்படும் பாதிப்புகளில் சிக்காமல் நாம் கவனமுடன் இருக்க வேண்டும்.

    சம்மந்தமற்ற வகையில் தனி மனிதர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். இது தவிர்க்க இயலாதது. நான் நேர்மையானவன் எந்த வம்புக்கும் சென்றதில்லை எனக் கூறி இந்த கிரக சூழ்நிலைகளின் பாதிப்பிலிருந்து முழுமையாக யாராலும் தப்பிக்க இயலாது. எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் இந்த கால கட்டத்தை கடந்தாக வேண்டிய சூழல் இப்போது சாமான்ய மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

    நான் படித்தவன், பணக்காரன் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்வேன் என யாரும் சவால் விட இயலாது. காரணம் இந்த கிரக சூழலில் கடும் பாதிப்புகளை சனியின் அம்சமான சாமான்யர்களும் அடைய வேண்டும் என்பது விதியாகும்.

    சனி பகை வீட்டில் வக்ரமாவது சிறப்புதான். என்றாலும் உடனிருக்கும் செவ்வாயால் நிம்மதி இழப்பு ஏற்படும். இந்நிலை வரும் புரட்டாசி மாதம் தொடங்கும் வரை நீடிக்கும். எனவே மிகுந்த பொறுமையும் தெய்வ பக்தியும் கொண்டு இந்த காலகட்டத்தை கடந்திட வேண்டும். குறிப்பாக சனிக்கும் செவ்வாய்க்கும் பூஜைகள், வழிபாடுகள் செய்தால் இந்த கிரகங்களின் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

    Next Story
    ×