search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குற்ற உணர்வும், பாவ உணர்வும்
    X

    குற்ற உணர்வும், பாவ உணர்வும்

    ஏசு கிறிஸ்து அவரவர் பாவத்தை பரிசுத்த ஆவியினால் கண்டித்து உணர்த்தி நாம் பாவத்தை விட்டு விலகி ஓடுவதற்கான கிருபையையும் ஆற்றலையும் அருளுகின்றார்.
    “அவர் வந்து பாவத்தை குறித்து கண்டித்து உணர்த்துவார் - யோவான் 16:8”

    மதுபான பழக்கம் உடையவர்கள் சில நேரங்களில் போதையின் விளைவாக தேவையில்லாத பிரச்சினைகளை விலைக்கு வாங்குவார்கள் மறுநாள் இவ்வளவு மோசமாக நடந்துகொண்டோமே என்று மிகவும் குற்ற உணர்வு அடைவார்கள். ஆனால் அந்த குற்ற உணர்வு இனி மதுபானம் அருந்துவதில்லை என்ற தீர்மானத்தை எடுக்க தூண்டாது. மறுபடியும் மதுபானத்தை நாடவே தூண்டுதல் தரும்.

    விபசார பாவங்களை செய்கின்றவர்கள் பின்னர் இப்படி தவறாக நடந்துகொண்டோமே என்று குற்ற உணர்வடைவார்கள்.

    ஆனால் அந்த குற்ற உணர்வு இனி இவ்விதம் பாவம் செய்வதில்லை என்று முடிவு செய்ய தூண்டாது. மறுபடியும் அதுபோன்ற பாவத்தை செய்வதற்கே தூண்டுதல் கொடுக்கும். எனவேதான் ஒருபுறம் இதுபோன்ற தவறுகள் மனிதனை குற்ற உணர்வினால் பாரம் மடையச்செய்துவிட்டு மறுபடியும் அந்த பாவச்சேற்றிலேயே சிக்க வைத்துவிடுகிறது.

    குற்றம் செய்தலும், குற்ற உணர்வும் தொடர்கதையாவதால்தான், சிலர் குற்றங்களுக்கு அடிமைகளாகி விடுகின்றனர். ஆம். குற்ற உணர்வு என்பது வேறு, பாவ உணர்வு என்பது வேறு. குற்ற உணர்வு மீண்டும் ஒரு குற்றம் செய்வதற்கான தூண்டுகோல். பாவ உணர்வு என்பது இனி இவ்விதம் நான் வாழக்கூடாது என்ற முடிவுக்குநேராக கொண்டு செல்லும் ஆவிக்குரிய தூண்டு விசை.



    ஒரு மருத்துவர் நோயாளி ஒருவரின் வியாதியின் நிலையைக் கண்டறிந்து சொல்லும்போது, அந்த வியாதியாளன் ஒரு உடனடி சிகிச்சையை விரும்புகிறான். அதுபோல பரிசுத்த ஆவியானவர் பாவ உணர்வு அடையச் செய்யும்போது அந்த பாவத்திலிருந்து வெளியே போகும் ஆசையும், அந்த பாவத்தைக்குறித்த ஒரு வெறுப்புணர்வும் தோன்றும். அது கர்த்தருடைய கிருபையை நாடுவதற்கான நல்ல தூண்டுதலைத் தரும்.

    குற்ற உணர்வு என்பது பாவத்தினால் பழுதுபட்ட மனசாட்சியின் ஓசை. மனசாட்சியின் ஓசை பாரத்தை உருவாக்கும்,ஆயினும் மனமோ அந்த ஓசையை அடக்க மறுபடியும், பாவத்தை நோக்கி ஓடும். இந்த நிர்ப்பந்தமான நிலையில் இருந்து நமக்கு விடுதலை தருகின்றவரே கர்த்தராகிய ஏசு கிறிஸ்து.

    அவர் பாவத்தை பரிசுத்த ஆவியினால் கண்டித்து உணர்த்தி நாம் பாவத்தை விட்டு விலகி ஓடுவதற்கான கிருபையையும் ஆற்றலையும் அருளுகின்றார். எனவே அவருடைய சத்தத்தை கேட்கும்போது இருதயத்தை கடினப்படவிடாமல் மனந்திருந்தி நல்ல நிலை அடைய தேவகிருபையை தேடவேண்டும். “ இறைவனைப் பயத்துடன் வழிபடுகிறவனாக அல்ல அன்புடன் அவர் வழியில் நடக்கிறவனாக இரு. அதுவே பக்தி.”

    -- சாம்சன் பால்
    Next Story
    ×