search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நன்மையால் தீமையை வெல்வோம்
    X

    நன்மையால் தீமையை வெல்வோம்

    சோதனைகள் பலவிதம். என் சோதனைகள் எவ்விதம் என ஆராய்வோம். சோதனைகளை வெல்வோம். இறையாசீரோடு தவக்காலத்தை பயன்படுத்தி புனித பாதையின் வழி நடப்போம்.
    இன்றைய இறை வார்த்தையின் படி இறைவன், படைப்பில் நன்மையே கண்டார். தன் உயிர் மூச்சினை மனிதனுக்கு பகிர்ந்தளித்தார். மனித பலவீனமோ பாவத்தில் விழச்செய்கிறது. பாவச்சேற்றிலிருந்து நம்மை தூய்மைப்படுத்த, மீண்டும் எழ ஏற்ற காலமிது. பாவத்திலிருந்து விடுதலை பெறுவோம். இறைவனின் அன்பை உணர்வோம். (தொ.நூல் 2:7-9, 3:1-7)

    அலகையை வென்ற இயேசுவின் செயல்பாடுகளை தியானித்து அவரிடம் விளங்கிய இறை தந்தை மட்டில் நம்பிக்கை, திருவுளத்துக்கு பணிவு, லட்சிய பார்வை, தூய ஆவிக்கு மனதை திறந்து நன்மை, தீமையை அறிதல், சோதனைகளை வெல்லும் ஆற்றல் பெறுவோம். புனிதனாக, மனிதனாக வாழ முயல்வோம். (மத் 4:1-11)

    சோதனைகளை மனத்துணிவுடன் ஏற்று, விடாமுயற்சியோடு போராடுவோம். விடுதலை பெற இறையருளை வேண்டி, பாவவழிகளை எதிர்த்து வாழ தவக்காலத்தை நன்கு பயன்படுத்துவோம். நன்மை, தீமை, பாவம், புண்ணியம், வாழ்வு, சாவு, பிறர்நலம், தன்னலம் போன்ற போராட்டங்களை ஒன்று இணைத்து செல்ல இயலாது. சோதனைகளிலிருந்து விடுதலை பெற நாம் பலவற்றை இழக்க தயாராக இருக்க வேண்டும்.



    இயேசு தன்னையே இழந்தார். கையளித்தார். முழுவதும் பலியாக்கினார். முடிவில் விண்ணகப்பேறு என்னும் நிலைவாழ்வை பெற்று தந்தையின் வலப்புறம் வீற்றிருக்கின்றார். அதுபோல் நாமும் நம்மையே இழப்போம். நம்மிடமுள்ளதை பிறரோடு, குறிப்பாக தேவையில் இருப்பவரோடு பகிர்வோம். நற்செயல்களால் தீமைகளை விலக்கி வாழ்வோம். நேர்மறை எண்ணங்களால் மனதினை, சிந்தனையை நிரப்புவோம்.

    சோதனைகள் பலவிதம். என் சோதனைகள் எவ்விதம் என ஆராய்வோம். குறுக்கு வழியில் பணக்காரன் ஆகுதல், பதவி, புகழுக்காக பிறரை அடக்கி ஆள்தல், சிற்றின்ப நாட்டங்களை நாடி செல்லுதல், பொறாமை, பேராசை வழியில் சுயநலத்தோடு வாழ்தல் என பல்வேறு சோதனைகள் நம்மில் எழலாம். என்னில் எழும் சோதனை எது? என சிந்திப்போம். தியானிப்போம். உணர்வோம். சோதனைகளை வெல்வோம். இறையாசீரோடு தவக்காலத்தை பயன்படுத்தி புனித பாதையின் வழி நடப்போம்.

    அருட்சகோதரி. ஜெயராணி, அமலவை சபை, திண்டுக்கல்.
    Next Story
    ×