search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செயல்கள் மூலம் இறைவனை தேடுவோம்
    X

    செயல்கள் மூலம் இறைவனை தேடுவோம்

    சிறிய காரியங்களில் கருத்தூன்றி செயல்படுகின்ற போது, இறைவனுக்கு ஏற்றவர்களாக உருமாற முடியும்.
    பிரான்ஸ் நாட்டில் உள்ள அலேன்சோ என்ற இடத்தில் பிறந்தவர் புனித தெரசாள். இவர் தனது குழந்தை பருவத்திலேயே தான் செய்யும் சின்ன சின்ன தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டார். ஒருமுறை தவறுதலாக வீட்டில் இருந்த பூ பாத்திரத்தை உடைத்தவுடன், பெற்றோரிடம் சென்று மன்னிப்பு கேட்டார். 'தினமும் ஒரு நன்மையாவது செய்து பழகு' என்பதே இவரின் வாழ்க்கை தத்துவமாய் அமைந்திருந்தது. அதற்கு ஏற்ப வாழ்ந்தும் காட்டினார்.

    சின்ன சின்ன செயல்கள் வழி இறைவனை தேடி அடைய இன்றைய நாள் சிந்தனை நம்மை அழைக்கிறது. ஒவ்வொரு மனிதரும் தனக்கு குறிக்கப்பட்ட கடமையை நிறைவு செய்தால் இறைவனோடு வழிநடக்கிறோம் எனப்பொருள். தொடக்க கால கிறிஸ்தவர்கள் மிகப்பெரிய திருத்தலங்களையும், வழிபாட்டு கூடாரங்களையும் உருவாக்க முயற்சி எடுக்கவில்லை. அவர்கள் செய்ததெல்லாம் மிக சாதாரண செயல்களே ஆகும்.

    இதனை திருத்தூதர்பணி 2:42-47 வரையுள்ள இறைவார்த்தையில் பார்க்கிறோம். இதில் அவர்கள் அப்பத்தை பிட்டனர். பகிர்ந்து உண்டனர். இறைவேண்டல் செய்தனர். அனைத்தையும் பொதுவாய் வைத்திருந்தனர். ஒவ்வொருவரும் ஆண்டவர் விடுத்த அழைப்பின்படியும் வாழ்வதற்கு முயற்சி செய்தனர்.

    ஒரு மனிதன் தனது 30-வது வயதில் உலகம் திருந்த வேண்டும் என கடவுளிடம் வேண்டினான். எதுவுமே நடக்கவில்லை. தனது 40-வது வயதில் நாடு திருந்த வேண்டும் என கடவுளிடம் வேண்டினான். அதுவும் நடக்கவில்லை. இவ்வாறு 50-வது வயதில் மாவட்டம், 60-வது வயதில் ஊர், 70-வது வயதில் குடும்பம் போன்றவை திருந்த வேண்டும் என வேண்டினார். எதுவுமே நடக்கவில்லை.

    தனது 80-வது வயதில் புரிந்து கொண்டாராம், 'நாம் இவற்றையெல்லாம் செய்திருக்கலாம்' என்று. நமக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த மனித வாழ்வில், சமூகத்திற்கும், பிறருக்கும் பயன்படுகிற விதத்தில் வாழ முயற்சி எடுப்போம். குடும்பத்தில் இணைந்து உரையாடுவோம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் சேர்ந்து உணவருந்துவோம். கலந்துரையாடல் செய்யும்போது நமது பொறுப்புகளும், கடமைகளும் தெரிய வரும்.

    சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு கொடுக்கப்பட்டிருக்கிற இந்த தவக்காலத்தில் நமது செயல்பாடுகளை பட்டியலிடுவோம். காலை படுக்கையில் இருந்து எழுந்தது முதல் தூங்க செல்கின்ற நேரம் வரைக்கும் நாம் செய்கின்ற செயல்கள் என்னென்ன? என திட்டமிடுவோம். சாப்பிடுதல், வீட்டை தூய்மை படுத்துதல், ஜெபம் செய்தல், உணவு தயார் செய்தல், பாத்திரங்கள் கழுவுதல், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புதல், அலுவலகத்தில் வேலை செய்தல் போன்ற எல்லா காரியங்களையும் சரியான மனநிலையோடு அணுகுவோம். இந்த சிறிய காரியங்களில் கருத்தூன்றி செயல்படுகின்ற போது, இறைவனுக்கு ஏற்றவர்களாக உருமாற முடியும்.

    -அருட்பணி. குருசு கார்மல்,

    இணை பங்குத்தந்தை, தூய சவேரியார் பேராலயம், கோட்டார், நாகர்கோவில்.
    Next Story
    ×