search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எல்லோருக்காகவும் பிரார்த்தனை செய்வோம்
    X

    எல்லோருக்காகவும் பிரார்த்தனை செய்வோம்

    நாம் ஒருவருக்கொருவர் மட்டுமின்றி, எல்லோருக்காகவும், எப்போதும் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய கற்றுக்கொள்வோம்”(1தெலோனி5:17)
    நகர்ப்புற நெருக்கடியில் வாழ்ந்த மனிதர் ஒருவர், அமைதியின்றி துன்பப்பட்டு கொண்டிருந்தார். குழப்பம் அதிகரித்துக்கொண்டே சென்றது. என்னசெய்வது, யாரிடம் முறையிடுவது எனத்தெரியாது குழம்பிக் கொண்டே இருந்தார். அவரின் பெற்றோர், காட்டில் ஒரு தவமுனிவர் வாழ்கிறார். அவரிடம் சென்று உரையாடினால் உனக்கு தெளிவு கிடைக்கும், என்றார். இம்மனிதரும் முனிவரை சந்தித்து, அவரிடம் சொன்னார். சாமி எனக்காக இறைவனிடம் மன்றாடுங்கள், என்றார்.

    முனிவர் வேண்டினார். “இறைவா இந்த உலகத்திலுள்ள எல்லாரையும் பாதுகாத்து வழிநடத்து” என்றார். உடனே இம்மனிதர் நான் எனக்காக மட்டும் தானே வேண்டச் சொன்னேன். நீங்கள் உலகத்தில் உள்ள எல்லாருக்காகவும் வேண்டுகிறீர்களே, ஏன்? என்றார். உடனே முனிவர் அம்மனிதரை அழைத்து தன் தோட்டத்திலுள்ள ஒரு செடியை சுட்டிக்காட்டி, அதனுடைய இலைக்கு மட்டும் தண்ணீர் ஊற்றி வா, என்றார். அம்மனிதர் சொன்னார் 'மரத்தை சுற்றி தண்ணீர் ஊற்றினால் தானே தண்டு வழியாக இலைக்கு வரும்' என்று. உடனே முனிவர் “ஜெபமும் அப்படித்தான்” உலகிற்காக வேண்டினால்தான், அது உனக்கும் கிடைக்கும்.

    மனந்தளராது இறைவனிடம் எப்போதும் மன்றாடுங்கள் என்பதே இன்றைய நாளின் தவக்கால சிந்தனையாகும். உலகத்தை அசைக்கும் ஆற்றல் இறைவனுடைய கைக்கு உண்டு. இறைவனின் கையை அசைக்கும் ஆற்றல் ஜெபத்திற்கு உண்டு. மனிதர்களாகிய நாம் படைக்கப்பட்டதே இறைவனைப் போற்றி புகழவே ஆகும். உடல் தளர்ந்தாலும், உள்ளம் தளராது ஜெபிக்க வேண்டும். இதுவே ஜெபத்தின் இன்றியமையாத பண்பாகும். இதனை இயேசுவின் வாழ்வில் தெளிவாக கண்டுகொள்ள முடியும். பகல்முழுவதும் மக்களோடு உடனிருந்து தன்னை முழுதாய் மக்களோடு இணைத்து கொண்டாலும், அதிகாலை நேரம், இரவு நேரம் என கண்டுணர்ந்து ஜெபிப்பதில் அதிக சிரத்தை எடுத்தார். அதன்வழியே உண்மையை கண்டுகொண்டார். நல்லதை விதைத்தார்.

    இனிமையான அனுபவமான இத்தவக்காலத்தில் இறைவனோடு ஜெபத்தில் நிலைத்திருப்பதற்கான வழிமுறைகளை கண்டுபிடிப்போம். ஆலயத்தில், பொது இடங்களில் மட்டுமல்லாது, நமது இல்லத்திலும் ஜெபிப்பதற்கான சூழலை உருவாக்குவோம். துன்பமான நேரங்களில், நெருக்கடியான நேரங்களில் மட்டுமல்லாது எல்லா நேரத்திலும் இறைவனை நோக்கி ஜெபிப்போம். இதற்கும் இறைமகன் இயேசுவே உதாரணம்.

    முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில் சிலுவையில் தொங்கும்போது “தந்தையே, கூடுமானால் இத்துன்ப கிண்ணம் என்னை விட்டு அகன்று போகட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அன்று, உமது விருப்பப்படியே நிகழட்டும்” என்றார். இதுவே நமது மாதிரியாக இருக்கட்டும். இறைவனை நோக்கி வேண்டி எல்லா நலன்களையும் நிரம்ப பெறுவோம்.

    நாம் ஒருவருக்கொருவர் மட்டுமின்றி, எல்லோருக்காகவும், எப்போதும் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய கற்றுக்கொள்வோம்”(1தெலோனி5:17)

    அருட்பணி. குருசு கார்மல்,

    இணை பங்குத்தந்தை, தூய சவேரியார் பேராலயம், கோட்டார், நாகர்கோவில்.
    Next Story
    ×