search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மன அமைதிக்கானத் தேடல்
    X

    மன அமைதிக்கானத் தேடல்

    உண்மையான உள்ளார்ந்த அமைதி கிடைக்க இத்தவக் காலத்தில் ஜெப, தப, பிறரன்பு சேவையில் ஈடுபாடு கொண்டு வாழ்வோம்.
    “ஆன்ம அமைதி இல்லையெனில் உலகில் அமைதி இல்லை. நவீன உலகில் மனிதனின் மனதில் ஏற்படும் போராட்டங்களே உலகப் போர்களாக வெடிக்கின்றன. மனித மனதில் முதலில் தோன்றிய பிறகே உலகில் புலப்படும் வண்ணம் எதுவும் தோன்றுகிறது“ என்று ஆயர் புளூட்டன் சீன் கூறுகிறார்.

    மனித சமுதாயத்திலும், இயற்கையிலும் ஏற்படும் பல மாற்றங்களுக்கு மனித குலமே காரணமாக உள்ளது. தற்காலத்தில் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் சுற்றுச்சூழல் மாசுபாடுகளைப்பற்றிக் கவலைப்படுகின்றோம். இச்சீர்கேடுகள் மனிதர்களின் பொறுப்பற்றத் தன்மையால் ஏற்பட்டுள்ளது.

    ஆயர் புளூட்டன் சீன் கூறுவதுபோல மனித மனதில் அமைதி இல்லையென்றால் வெளியுலக அமைதி என்பது சாத்தியமில்லாத ஒன்றாக மாறிவிடுகின்றது. கொதிக்கும் புவியின் உட்பகுதி எரிமலையாக குமுறி வெடிப்பதைப் போன்று, அமைதி இல்லா மனித உள்ளங்கள், உலகில் சண்டைச் சச்சரவுகளாக, போர்களாக வெடிக்கின்றன. இன்றைய மனித இனம் தன் நவீன கண்டுபிடிப்புகளாலேயே நாளும் அலைக்கழிக்கப்படுகின்றது. அணுகுண்டுகள் இவ்வுலகையே சுடுகாடாக்கும் வல்லமை படைத்தவைகளாக உள்ளன. இன்றைய மனிதனின் மனப்பாங்கு கவலை அளிப்பதாகவே உள்ளது.

    தற்காலத்தில் உலக அமைதி என்பதைவிட மனித மனதிற்குள் அமைதி என்பது தேவைப்படும் ஒன்றாக உள்ளது. வாழ்க்கையில் ஏற்படும் கவலைகள், விரக்தி, ஏக்கங்கள் இவையே முக்கியமானதாகத் தென்படுகின்றது. மெய்யியல் அறிஞர்கள் ஒரு காலத்தில் மனிதர்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசிய காலம் மாறி இன்று மனிதனே ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது வேடிக்கையான ஒன்றாகும்.

    இவைகளையெல்லாம் பார்க்கும்போது இன்று மனிதன் தன்னுள் நடைபெறும் போராட்டங்களிலிருந்து உடனடியாக மீட்கப்பட வேண்டிய ஒரு கட்டாயத்தில் உள்ளான் என்பது புலனாகிறது. மனிதன் வெளி வாழ்க்கையிலேயே அதிக கவனம் செலுத்துவதால் உண்மையான அமைதியை அளிக்கக்கூடிய தன் உள்ளத்தைக் கவனிக்க நேரமில்லாத ஒரு நிலையில் உள்ளான். தன்னைப் படைத்தக்கடவுளையே மறந்து தனக்குள் முடங்கிக் கிடக்கும் நிலையில் மனித இனம் உள்ளது. தன் மனதிற்குள்ளேயே சிறைபிடிக்கப்பட்ட நிலையில் இன்றைய மனிதன் உள்ளான்.

    இந்நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்றால் முதலில் தான் அடைக்கப்பட்ட நிலையை மனிதர்கள் உணரவேண்டும். ஒரு நோயைத் தீர்க்க வேண்டும் என்றால் முதலில் அந்நோயின் தன்மையைப்பற்றி மருத்துவர் அறிந்திருக்க வேண்டும். அதுபோன்று உள்மன போராட்டங்களை போக்க வேண்டும் என்றால் அப்போராட்டத்தை பற்றிய தெளிவு தேவைப்படுகின்றது. உளவியல் மற்றும் மனநல மருத்துவம் போன்றதுறைகள் இன்று வளர்வதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. இத்துறைகள் மனிதனின் உள்ளத்தை மனிதனுக்கு விளக்கி, வாழ்வின் இக்கட்டான நேரங்களில் அவற்றை சமாளிக்கத் தேவையான உதவிகளை வழங்குகின்றன.

    மனித உள்ளத்தில் புதைந்து கிடக்கும் இருளான சக்திகளுக்கும், மனிதனின் வெளித்தோற்றத்திற்கும் இடையே ஏற்படும் மோதல்களே அவனது குழப்பமான, மகிழ்ச்சியற்ற நிலைக்குக் காரணமாக அமைகின்றன. இன்றைய நவீன கால மனிதன், மன அமைதியும், உண்மையான மகிழ்ச்சியும் மிகவும் தேவைப்படும் நிலையில் உள்ளான். உண்மையான உள்ளார்ந்த அமைதி கிடைக்க இத்தவக் காலத்தில் ஜெப, தப, பிறரன்பு சேவையில் ஈடுபாடு கொண்டு வாழ்வோம்.

    அருட்தந்தைஎம்.ஸ்தனிஸ்லாஸ்

    முத்துப்பிள்ளைமண்டபம், கும்பகோணம்.
    Next Story
    ×