search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசுவின் ஆசீர்வாதம் தரும் பாதுகாப்பு
    X

    இயேசுவின் ஆசீர்வாதம் தரும் பாதுகாப்பு

    ‘கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார். கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்’. (சங்.29:11)
    பிரியமானவர்களே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்.

    இம்மட்டும் உங்களை வழிநடத்தி வந்த அருமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இனியும் தம்முடைய பெலத்தினாலே உங்களை நிரப்பி கிருபையாக வழிநடத்துவாராக.

    ‘என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு’. (பிலிப்.4:13)

    கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தச் செய்தியை விசுவாசத்தோடு வாசியுங்கள். கர்த்தருடைய வார்த்தையை நம்புங்கள். அப்போது அப்போஸ்தலர் பவுலைப் போல நீங்களும், ‘என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்யக்கூடும்’ என்று கூறுவீர்கள்.

    நாம் ஆண்டவரை நம்புகிற பிள்ளைகளாக இருந்தும், இந்த உலகத்தில் நாம் வாழ்கிறபடியால் பலவிதமான நெருக்கடிகளை சந்திப்பது உண்மைதான். ஆனால் அந்த நெருக்கடிகளுக்கு நடுவே நம்மை கர்த்தர் பெலப்படுத்துகிறார் என்பது மாறாத உண்மையல்லவா.

    அதே வேளையில் அவர் எப்போது, எப்படி நம்மைப் பெலப்படுத்துகிறார் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

    ஆத்துமாவைப் பெலப்படுத்துகிறார்

    ‘நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர், என் ஆத்மாவிலே பெலன் தந்து என்னை தைரியப்படுத்தினீர்’. (சங்.138:3)

    தேவன் நம்மைப் பெலப்படுத்துகிறார் என்பதை நீங்கள் அறிந்திருந்தாலும் எப்போது பெலப் படுத்துகிறார் என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். பலவிதமான ஆபத்துகள் நிறைந்த உலகத்தில் வாழ்கிறோம். அப்படிப்பட்ட நேரங்களில் நம்முடைய ஆத்மா சோர்ந்து போவது இயல்பாகும்.

    ‘ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது’. (நீதி.24:10)

    ஆம், உங்களுக்குள் சோர்வின் ஆவி தாக்கினவுடனே உங்கள் ஆத்மாவிலே கலக்கமும், வேதனையும் உண்டாகும். அப்போது நம்முடைய ஆத்மாவிலே இருக்கிற பெலன் குறுகிப்போய் விடும்.

    கிறிஸ்தவ வாழ்க்கையில் நம்முடைய ஆத்மா மிக மிக முக்கியமானது. அதை தான் தாவீது, ‘நான் கூப்பிட்ட நாளில் எனக்கு மறு உத்தரவு அருளினீர் என் ஆத்மாவிலே பெலன் தந்து என்னைத் தைரியப்படுத்துனீர்’ என்று கூறுகிறார். எந்தவிதமான போராட்டங்கள் உங்களைச் சூழ்ந்து கொண்டாலும் உங்கள் ஆத்மாவைப் பெலப்படுத்துகிறவர் உங்களோடு இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    பிரச்சினைகளுக்கு மத்தியில் மனிதனை கூப்பிடுவதை விட தேவனை நோக்கி கூப்பிட்டுப் பாருங் கள். உங்கள் ஆத்மா பெலனடையும். அதனால் உங்களை அறியாத ஒரு தைரியம் உங்களில் உண்டாகும், உங்களுக்கு எதிராக உருவாக்கப்படும் சவால் களை தைரியமாய் சந்திப்பீர்கள். ஏனென்றால் ஆத்மாவைப் பெலப்படுத்துகிறவர் உங்களோடு இருக்கிறார் என்பதை ஒருபோதும் மறந்து போகாதீர்கள்.

    தரிசனத்தின் மூலம் பெலப்படுத்துவார்

    ‘ராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே, நான் உன்னுடனே கூட இருக்கிறேன், உனக்குத் தீங்கு செய்யும்படி ஒருவனும் உன்மேல் கை போடுவதில்லை, இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்’. (அப்.18:9,10)

    அப்போஸ்தலனாகிய பவுலை பெலப்படுத்துவதற்கு ராத்திரியிலே ஆண்டவர் தரிசனமாகி தைரியப்படுத்தினதாக மேற்கண்ட வசனம் கூறுகிறது.

    அந்நாட்களில் மட்டுமல்ல இந்நாட்களிலும் ஆண்டவர் அவ்வப்போது தரிசனங்கள் மூலமாகவும், சொப்பனங்கள் மூலமாகவும் தம்முடைய பிள்ளைகளாகிய நம்மைப் பெலப்படுத்துகிறார்.

    திறந்த கண்களினால் காண்பது தரிசனம், உறங்கும்போது நாம் காண்பது சொப்பனம். ஆகவே, தேவனுடைய சித்தத்தை விசுவாசத்தோடு தொடர்ந்து செய்யப் பிரயாசப்படுங்கள். அவ்வப்போது அவர் தரிசனங்கள் மூலம் நம்மோடு பேசுவார்.

    தூதர்கள் மூலம் பெலப்படுத்துவார்

    ‘என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக் கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த ராத்திரியிலே என்னிடத்தில் வந்துநின்று: பவுலே பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும். இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான்’. (அப்.27:23,24)

    நம்முடைய அருமை ஆண்டவர் நம்முடைய பெலவீனத்தில் நமக்கு உதவி செய்யவும், பெலவீனரை பெலவான்களாய் மாற்றவும் சித்தமுள்ளவராகவே இருக்கிறார். ஆனால் சாத்தானின் எண்ணம் எப்போதும் நம்மை பெலவீனப்படுத்துவதே ஆகும்.

    ஆனால் நம் ஆண்டவரோ ஏற்ற நேரத்தில் நம்மைப் பெலப்படுத்தி தம்முடைய சித்தத்தை நம்மில் நிறைவேற்ற அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார். அநேக நேரங்களில் தேவனுடைய சித்தத்தை நாம் நிறைவேற்றும்போது தடைகள், போராட்டங்கள் வரலாம். அவ்வாறு வரும்போது நமக்குள்ளே பல சந்தேகங்களும், குழப்பங்களும் உடனே வந்து விடும்.

    ‘கர்த்தருடைய சித்தத்தின்படி தானே செய் கிறேன். ஆனாலும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் வருகிறதே ஏன்?’ என்ற கேள்விகள் உங்களுக்குள்ளே எழும்பி கலக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

    ஆனாலும், தேவனுக்காக வைராக்கியமாக நீங்கள் நிற்கும்போது கர்த்தர் ஏதாகிலும் ஒரு விதத்தில் உங்களைப் பெலப்படுத்துவதற்கு அவர் வல்லவராயிருக்கிறார். ஏனெனில் அவர் தான் நம்மை அழைத்தார், தெரிந்து கொண்டார். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு தகப்பன் தன் பிள்ளையைத் தோளில் சுமப்பதுபோல உங்களைச் சுமந்து பெலப்படுத்துவார்.

    ‘கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார். கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்’. (சங்.29:11)

    சகோ.ஜி.பி.எஸ். ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54
    Next Story
    ×