search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.
    X
    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாக திகழும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. கிறிஸ்தவ ஆலயத்துக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய பசிலிக்கா என்ற பெருமைமிகு பிரம்மாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவல் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணி பேராலயமும் ஒன்று. இந்த ஆலயத்தின் எதிரில் வங்க கடல் அமைந்திருப்பது ஆலயத்துக்கு மேலும் அழகூட்டுகிறது.

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள் செப்டம்பர் 8-ந் தேதி ஆகும். இதையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் அன்னையின் பிறந்தநாள் விழா 11 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பேராலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மாதா உருவம் பொறித்த வண்ண கொடி பேராலய முகப்பிலிருந்து மாலை 6 மணிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தேவாலய வளாகம், கடற்கரை, ஆரிய நாட்டு தெரு வழியாக மீண்டும் பேராலயம் அருகில் உள்ள கொடி கம்பத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    பின்னர் பேராலயத்தின் வடக்கு புறத்தில் அமைக்கப்பட்டிருந்த 90 அடி உயர கொடிக்கம்பத்தில் தஞ்சை ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் புனிதம் செய்து, 6.30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. அப்போது பேராலயத்தில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார மின் விளக்குகள் அனைத்தும் ஒளிர செய்யப்பட்டது. அப்போது பக்தர்கள் வண்ணபலூன்களை பறக்க விட்டு ஆரவாரம் செய்தனர்.



    முன்னதாக பேராலயத்தில் தமிழ் திருப்பலியும், அன்னையின் திருச்சொரூப ஆசீரும், நோயாளிகளை மந்திரிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற் றது. தொடர்ந்து விண்மீன் ஆலயம், பேராலய கீழ்க்கோவில், மேல்கோவில் ஆகியவற்றில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மராத்தி, கொங்கனி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இரவு 8 மணிக்கு மாதா திருத்தேர் பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தினமும் இரவு 8 மணிக்கு பேராலய முகப்பிலிருந்து தேர்ப்பவனி நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர் பவனி வருகிற 7-ந் தேதி(வியாழக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. மறுநாள் 8-ந் தேதி அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. கொடியேற்று விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×