search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா இன்று தொடங்குகிறது
    X

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா இன்று தொடங்குகிறது

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. உலகின் பல நாடுகளில் காட்சி அளித்த அன்னை மரியா, அவர் தோன்றிய ஊர்களின் பெயரோடு அழைக்கப்படுகிறார். தமிழகத்தில் வேளாங்கண்ணியில் அன்னை மரியா காட்சியளித்ததால் வேளாங்கண்ணி மாதா என்று அழைக்கப்படுகிறார்.

    தன்னை நாடி வருபவர்களின் உடல் மற்றும் உள்ள குறைகளை தீர்ப்பதால் இங்குள்ள அன்னை ஆரோக்கிய மாதாவாக திகழ்கிறார். மாதாவின் பிறந்தநாளான செப்டம்பர் 8-ந் தேதி வேளாங்கண்ணி பேராலய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்டு 29-ந் தேதி கொடியேற்றப்பட்டு, செப்டம்பர் 8-ந்தேதி வரை நடைபெற்று வருகிறது.

    அதேபோல இந்த ஆண்டு திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக இன்று மாலை 6 மணிக்கு கொடி ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. தொடர்ந்து தஞ்சை ஆயர் தேவதாஸ்அம்புரோஸ், கொடியை புனிதம் செய்து கொடியேற்றுகிறார். அதன்பின்னர் பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தொடர்ந்து விழா நாட்களில் தமிழ், மராத்தி, மலையாளம், ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, கொங்கனி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறுகின்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற 7-ந் தேதி நடக்கிறது. பின்னர் 8-ந் தேதி ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாள்விழா கொண்டாடப்படுகிறது.

    வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். மேலும், விழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின் விளக்குகளால் ஜொலிக்கிறது. திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முழு அளவில் நடைபெற்று வருகின்றன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×