search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இறை வார்த்தை, ஆற்றல் மிக்கது
    X

    இறை வார்த்தை, ஆற்றல் மிக்கது

    மறுபடியும் பிறக்கிற, கடவுளுக்குள் வளருகிற வாழ்வு மட்டுமல்ல, தூய்மையான வாழ்வைக் காத்துக் கொள்ளவும் கடவுளுடைய வார்த்தைகள் துணை புரிகின்றன.
    இந்த உலகத்தை படைத்தது இறைவனுடைய வார்த்தைகளே. படைப்பைக் குறித்து வேதத்தில் படிக்கிறபோது ‘‘கடவுள், ‘ஒளி தோன்றுக!’ என்றார்; ஒளி தோன்றிற்று’’ என்கிறது தொடக்க நூல் 1:3.

    ஒன்றுமில்லாமையில் இருந்தும் ஒழுங்கின்மையில் இருந்தும் நிறைவைக் கொண்டு வரக்கூடிய ஆற்றல் கடவுளுடைய வார்த்தைகளுக்கு உண்டு. அண்ட சராசரங்கள் அனைத்தின் மீதும் கடவுளுடைய வார்த்தைகளுக்கு அதிகாரம் உண்டு.

    புதிதாய் பிறத்தல்

    மனிதன் இவ்வுலகில் தன் விருப்பம் போல வாழ்ந்து இதை பாவம் நிறைந்த உலகாக மாற்றி விட்டான். மனிதன் தூய வாழ்வு வாழ அவன் மறுபடியும் பிறக்க வேண்டியுள்ளது. அது, தாயின் வயிற்றில் இரண்டாம் முறையாக நுழைந்து பிறப்பதல்ல. வார்த்தையால் பிறப்பது.

    ‘நீங்கள் அழியக்கூடிய வித்தினால் அல்ல; மாறாக, உயிருள்ளதும், நிலைத்திருப்பதுமான, அழியாவித்தாகிய கடவுளின் வார்த்தையால் புதுப்பிறப்பு அடைந்துள்ளீர்கள்’ (1 பேதுரு 1:23) என்கிறது இறைவார்த்தை.

    கடவுளுக்கு விருப்பமான வாழ்வு வாழ, கடவுளின் சித்தத்தை நிறைவேற்றுகிற வாழ்வு வாழ, மனிதன் மறுபடியும் பிறக்க வேண்டியுள்ளது. கடவுளுடைய வார்த்தைக்கு இந்த ஆற்றல் இருக்கிறது.

    யோவான் எழுதிய நற்செய்தியில் மூன்றாம் அதிகாரத்தில் நிக்கோதேமு எனும் பரிசேய உயர் அதிகாரி ஆண்டவரை சந்திக்க இரவில் வருகிறான். மறுபடியும் பிறக்கும் அனுபவம் பற்றி ஆண்டவர் அவனுக்குக் கற்றுத் தருகிறார். யோவான் இவரைப் பற்றி குறிப்பிடும் இடங்களில் எல்லாம் ‘இரவில் ஆண்டவரிடம் வந்த நிக்கோதேமு’ என்றே குறிப்பிடுகிறார்.

    அவன் பரிசேயனாக இருந்தும் இருளுக்குள் தான் வாழ்ந்திருந்தான். மெய்யான ஒளியாகிய ஆண்டவரிடம் வந்து மறுபடியும் பிறக்கிற வாழ்வின் அனுபவத்தை கற்றுக் கொண்டான்.

    கடவுளுடைய வார்த்தை மனிதனை மறுபடியும் பிறக்கிற வாழ்வுக்கு ஆற்றல் அளிக்கிறது.

    கடவுளில் வளர்தல்

    மறுபடியும் பிறப்பது மட்டுமல்ல, அந்த வாழ்வை தூய வாழ்வாக வாழவும், கடவுளுக்குள் வளருகிற வாழ்வாக வாழவும், துணைபுரிவது கடவுளுடைய வார்த்தைகளே.

    ‘புதிதாய்ப் பிறந்த குழந்தைகள்போல, வஞ்சகமற்ற வார்த்தையாகிய பாலை அருந்த ஆர்வமுள்ளவர்களாயிருங்கள். இதை அருந்துவதால் நீங்கள் மீட்பில் வளருவீர்கள்’ என்கிறது 1 பேதுரு 2:2,3 வசனங்கள்.

    ஒரு நல்ல விதை செழிப்பான செடியாக வளருவதற்கு தடையாக அமைந்து விடுகின்ற முட்செடிகள், களைகள் போல மனித வாழ்விலும் துர்குணம், கபடம், வஞ்சகம், பொறாமை, புறங்கூறுதல் போன்ற வி‌ஷயங்கள் இருக்கின்றன. இவற்றை ஒழித்துவிட்டு தூய வாழ்வில் வளர கடவுளுடைய வார்த்தைகள் நமக்கு ஆற்றல் அளிக்கின்றன.  

    படுக்கைக்குச் செல்லும் முன் செபிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தான் சிறுவன் ஒருவன். ஒரு நாள் அருகில் இருந்த தன் தாயிடம், ‘அம்மா, இன்று நான் தனியே செபிக்க வேண்டும், நீங்கள் சென்று விடுங்கள்’ என்றான். அம்மா அவனிடம் காரணம் கேட்டாள். அவனோ, ‘இன்று நான் அதிக தவறுகள் செய்    திருக்கிறேன். எனவே செபத்தில் அவற்றை கடவுளிடம் சொல்ல வேண்டும், நீங்கள் இருந்தால் கேட்பீர்கள், கேட்டால் திட்டுவீர்கள். கடவுளிடம் மட்டுமே சொன்னால் அவர் மன்னித்து, மறந்து விடுவார்’ என்றான்.

    இந்த சிறுவன் ‘ஆண்டவரை அறிந்தவன் மட்டுமல்ல, ஆண்டவருக்குள் வளரத்தொடங்கி விட்டான்’ என்று பொருள்.

    எனவே கடவுளுடைய வார்த்தைக்கு மறுபடியும் பிறப்பிக்கிற ஆற்றல் மட்டுமல்ல, அவருக்குள் வளருவதற்குத் தேவையான ஆற்றலும் உள்ளது.

    தூய வாழ்வு வாழ்தல்

    மறுபடியும் பிறக்கிற, கடவுளுக்குள் வளருகிற வாழ்வு மட்டுமல்ல, தூய்மையான வாழ்வைக் காத்துக் கொள்ளவும் கடவுளுடைய வார்த்தைகள் துணை புரிகின்றன.

    கடவுளுக்குள் வளர்ந்து வருகிற போது இவ்வுலகம், இவ்வுலகின் தன்மைகள் நம்முடைய வாழ்வை திசை திருப்புகின்றன. ஆனால் கடவுளுடைய வார்த்தைகள், போதனைகள் நம்மை சுத்தமாக்குகின்றன.

    ‘நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கனவே தூய்மையாய் இருக்கிறீர்கள்’ என்கிறது யோவான் 15:3.

    ஆண்டவரிடம், ‘உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் கூடும்’ என்று கேட்டவருக்கு ‘எனக்குச் சித்தமுண்டு நீ சுத்தமாகு’ என பதிலளித்தார் இயேசு. ஆண்டவரின் வார்த்தை நம்மை சுத்தமாக்குகிற ஆற்றல் உள்ளது.

    கடவுளுடைய வார்த்தைகள், ஒருவரை மறுபடியும் பிறக்கச் செய்கிற ஆற்றல் உள்ளது. மறுபடியும் பிறந்தவரை ஆண்டவருக்குள் வளரச் செய்கிற ஆற்றல் உள்ளது.

    அதை விட மேலாக சுத்தமான வாழ்க்கை வாழ காத்துக் கொள்ளுகிற ஆற்றல் உள்ளது கடவுளுடைய வார்த்தை.

    வெலிங்டன் ஜேசுதாஸ், நல்மேய்ப்பர் ஆலயம், வேளச்சேரி, சென்னை.
    Next Story
    ×