search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ‘அற்புதமான வாசல்கள் உங்களுக்காக திறக்கப்படும்’
    X

    ‘அற்புதமான வாசல்கள் உங்களுக்காக திறக்கப்படும்’

    தேவ ஆலோசனைகளை உங்கள் தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்வுக்கென்று நீங்கள் எடுத்துக் கொண்டு உரிமை பாராட்டி ஆசீர்வாதத்தின் வாசல்களுக்குள் பிரவேசியுங்கள்.
    பிரியமானவர்களே! ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்களை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    நம்முடைய வாழ்நாட்களில் ஆசீர்வாதமான நாட்களைக் காணும்படி கிருபை செய்த கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன். வாக்குத்தத்தம் பண்ணினவர் உங்கள் ஒவ்வொருவரோடும் இருந்து தமது வாக்குத்தத்தத்தின்படியே ஆசீர்வாதமான திறந்த வாசலை உங்களுக்கு முன்பாக வைத்து அதனுள் நீங்கள் பிரவேசிக்கும்படி உங்களுக்கு கிருபை பாராட்டுவார்.

    வாக்குத்தத்தத்தை கிருபையாக கொடுத்த கர்த்தர் அதை சுதந்தரிப்பதற்கான வழியையும் நமக்குக் காட்டுகிற தேவனல்லவா. ஆகவே தொடர்ந்து செய்தியை மிகுந்த ஜெபத்தோடும் விசுவாசத்தோடும் உரிமைபாராட்டி வாசியுங்கள். இதுவரை கண்டிராத அற்புதமான வாசல்கள் உங்களுக்காகத் திறக்கப்படுவதைக் காண்பீர்கள்.

    வானத்தின் வாசல்

    ‘அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான்’. (ஆதி.28:17)

    ஒவ்வொரு ஆண்டையும் நாம் கர்த்தருக்குள் தொடங்கும்போது புதிய ஆசீர்வாதங்கள், புதிய கிருபை, புதிய காரியங்கள் என புதியவைகளைக் குறித்து நாம் அதிகமாய் எதிர்பார்ப்போம். ஆனால் ஒவ்வொரு நாளும் கடந்து செல்லச்செல்ல நம் அருமை ஆண்டவருடைய வருகை நம்மை நெருங்குகின்றதை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.

    வாக்குத்தத்தங்கள் உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களுக்கு மட்டுமல்ல உன்னதத்திற்குரிய ஆசீர்வாதங்களுக்காகவும் ஆண்டவர் வாக்குத்தத்தம் அருளுகிறார்.

    வருகையின் கடைசி நாட்களில் நாம் வந்துவிட்டதனால் என்றுமில்லாத அளவுக்கு ஆண்டவர் தம்முடைய வல்லமையை வெளிப்படுத்தவும், அதை அதிகரிக்கச் செய்யவும் சித்தம் கொண்டுள்ளார். ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையும் ஆன்மிக ஆசீர்வாதத்தின் மேல் ஆவல் கொள்ளும்போது உன்னதமான அனுபவங்களை அப்படிப்பட்டோருக்கு அளவில்லாமல் கொடுக்கப் போகிறார்.

    பழைய ஏற்பாட்டு பரிசுத்தவானாகிய யாக்கோபு தன்னுடைய வனாந்தர மார்க்கமான பிரயாணத்தில் இரவு வேளையில் தூங்கும்போது, சொப்பனத்தின் மூலம் பரலோக ஆசீர்வாதங்களை அவருக்கு வெளிப்படுத்தினார். அவர் சொப்பனத்தில் தேவதூதர்களைக் கண்டார். வானத்தையும் (பரலோகம்) பூமியையும் இணைக்கிற ஏணியைக் கண்டார். அந்த ஏணிக்கு மேலாக தேவனாகிய கர்த்தர் நிற்கிறதையும் கண்டார். ஆகவே அந்த ஸ்தலத்திற்கு இது தேவனுடைய வீடே அல்லாமல் வேறல்ல. இது வானத்தின் வாசல் என்ற வெளிப்பாட்டைப் பெற்றார்.

    உங்கள் வனாந்தரப் பாதையில் உங்களுக்குக் கொடுக்கப்படும் சொப்பனங்களை, தரிசனங் களைக் குறித்து அசதியாயிராதீர்கள். கடைசி நாட்களில் சொப்பனங்கள், தரிசனங்கள் மூலம் கர்த்தர் உங்களோடு இடைப்படுவார். அப்படிப்பட்ட உன்னத அனுபவங்கள் நிறைந்த வாசல் உங்களுக்குத் திறக்கப்படும்.

    இதனால் நீங்கள் தேவனை, அவருடைய சித்தத்தை அறிந்து கொள்ளவும் மட்டுமல்ல உங்கள் விசுவாசம் பெருகவும் ஏதுவாயிருக்கும்.

    ஜெபத்தால் தானாய் திறக்கும் வாசல்

    ‘அவர்கள் முதலாங்காவலையும் இரண்டாங்காவலையும் கடந்து, நகரத்திற்குப் போகிற இருப்புக்கதவண்டையிலே வந்தபோது அது தானாய் அவர்களுக்குத் திறவுண்டது. அதன் வழியாய் அவர்கள் புறப்பட்டு ஒரு வீதி நெடுக நடந்து போனார்கள். உடனே தூதன் அவனை விட்டுப் போய்விட்டான்’ (அப்.12:10).

    உங்களுக்கு எதிராய் இருக்கிற அடைக்கப்பட்ட வாசல்களை உங்களுக்காக கர்த்தர் திறந்து உங்களை சூழ்ந்திருக்கிற கட்டுகளிலும், காவல்களிலிருந்து அற்புதமாக தேவன் உங்களை விடுதலையாக்குவார். திறந்த வாசல் வழியாக நீங்கள் பிரவேசிப்பீர்கள். உங்களை ஒருவனும் தடை செய்யமுடியாது. ஆகவே கர்த்தருக்குள் சந்தோஷமாகவும் தைரியமாகவும் ஆசீர்வாதத்தை சுதந்தரியுங்கள்.

    அதே வேளையில், ‘சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட பேதுரு சங்கிலிகளினால் கட்டப்பட்டு பூட்டப்பட்ட சிறைக்குள் நித்திரை பண்ணிக் கொண்டிருந்தார்’ என அப்.12:5,6 சொல்லுகிறது. இந்தச் சூழ் நிலையில் ‘சங்கிலிகள் தானாய் கழன்றுவிட, அவ்வறைக்குள் தூதன் பிரவேசிக்க, இரும்புக் கதவுகள் தானாய் திறக்க, அற்புதமாய் அவர் வெளியே கொண்டு வரப்பட்டார்’ என்று அப்.12-ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம் அல்லவா?

    இவையெல்லாம் சம்பவித்ததற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு பதில் அப்.12:5 கூறுகிறது. ‘அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார்கள்’.

    ஊக்கமான ஜெபம், அடைக்கப்பட்ட வாசல்களைத் திறக்கும்படி செய்யும். மேலும் கூடி ஜெபிக்கும் ஜெபம் இப்படிப்பட்ட அற்புதங்களைக் கொண்டு வரும். ஆகவே உங்கள் ஜெபம் ஊக்கமான ஜெபமாக மாறட்டும். எந்தச் சூழ்நிலையிலும் உங்கள் ஜெப நேரத்தைத் தவற விடாதீர்கள்.

    முடிந்தால் நண்பர்களோடு இணைந்து ஜெபிக்க அர்ப்பணியுங்கள். அப்போது உங்களுக்கு விரோதமாய் அடைக்கப்பட்ட சகல வாசல்களும் தானாய் திறக்கப்படும், ஆசீர்வாதங்களை அனுபவிப்பீர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

    மேற்கண்ட தேவ ஆலோசனைகளை உங்கள் தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்வுக்கென்று நீங்கள் எடுத்துக் கொண்டு உரிமை பாராட்டி ஆசீர்வாதத்தின் வாசல்களுக்குள் பிரவேசியுங்கள். அருமை இரட்சகரான இயேசு உங்களோடிருப்பார்.

    சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54

    Next Story
    ×