search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குற்றம் இல்லாமல் வாழ முயற்சி எடுப்போம்
    X

    குற்றம் இல்லாமல் வாழ முயற்சி எடுப்போம்

    குற்றம் இல்லாமல் வாழ அனைவரும் முயற்சி எடுப்போம். இயேசு பிரானின் கோட்பாடுகளை ஏற்று நடக்க உறுதி பூணுவோம். இதுவே நல்வாழ்வு வாழ வழி வகுக்கும்.
    அக்காலத்தில் இயேசு பிரான் ‘ஒலிவ மலை’ என்ற இடத்திற்குச் சென்றார். இரவு அங்கு தங்கி இருந்தார். பொழுது விடிந்தது. அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவர்களைக் கண்டு மகிழ்ந்தார். அவர்களோடு அமர்ந்து அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.

    மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும், விபசாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருத்தியை அவர்களோடு அழைத்து வந்தனர். அந்தப் பெண்ணை கூட்டத்தின் நடுவில் நிறுத்தினார்கள்.

    பிறகு அவர்கள் இயேசு பிரானைப் பார்த்து, “போதகரே! இந்தப் பெண் விபசாரத்தில் ஈடுபட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது, ‘மோசே’ நமக்குக் கொடுத்த திருக்கட்டளை ஆகும். இது குறித்து நீர் என்ன சொல்கிறீர்?” என்று கேட்டனர்.

    இயேசு பிரானின் மேல் குற்றம் சுமத்த, ஏதாவது கேட்க வேண்டும் என்பதற்காக, இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு சோதித்தனர். அவர் தரையைப் பார்த்து குனிந்து கொண்டு, தனது விரலால் தரையில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். அவர்கள் அவரை விட்டபாடில்லை. விடாமல் தொடர்ந்து வினாவை தொடுத்த வண்ணம் இருந்தனர்.

    அவர் அவர்களை நிமிர்ந்து பார்த்து, “உங்களுள் பாவம் இல்லாதவர், முதலில் இவள் மீது கல் எறியட்டும்” என்றார்.

    மீண்டும் தரையில் குனிந்து எழுதிக் கொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி, அனைவரும் ஒருவர் பின் ஒருவராக நகர்ந்து சென்று விட்டனர். இறுதியாக இயேசு மட்டும் அங்கே இருந்தார். அந்தப் பெண் அங்கு நின்று கொண்டிருந்தாள்.

    இயேசு நிமிர்ந்து பார்த்தார். அப்பெண்ணைப் பார்த்து, “அம்மா! அவர்கள் எங்கே? உன்னைக் குற்றவாளி என்று அவர்கள் தீர்ப்பிடவில்லையா?” என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண், “இல்லை ஐயா” என்று பதில் கூறினாள். உடனே இயேசு பிரான், அவளைப் பார்த்து, “நானும் தீர்ப்பிடவில்லை. நீ போகலாம். இனி பாவம் செய்யாதே” என்றார்.

    இந்தச் சம்பவத்தில் இருந்து நாம் என்ன உணர்கிறோம்? குற்றமற்றவர் என்று ஒருவர் கூட இருக்க முடியாது. உலகத்தில் உதித்த எல்லோரும் பாவச்சேற்றில் உழன்று கொண்டுதான் இருக்கிறோம். பாவம் செய்தவர்களைத் திருந்தி வாழ வேண்டும் என்று கூறுவதுதான் சிறந்த அறிவுரை ஆகும். யாரும் யாரையும் தீர்ப்பிட முடியாது. காரணம் யாரும் யாரையும் தீர்ப்பிடமுடியாத அளவுக்கு, அனைவரின் வாழ்க்கையும் ஏதோ ஒரு வழியில்-ஏதோ ஒரு வகையில் பாவ வாழ்க்கையாகத்தான் இருக்கிறது.



    ஒருவரைத் தீர்ப்பிடுவதும், தீர்ப்புக்கு உள்ளாக்குவதும் அக்காலத்தில் சர்வ சாதாரணமாக இருந்திருக்கிறது. தன் குற்றத்தைப் பார்க்காமல், பிறர் குற்றத்தையே காணும் பழக்கம் மனித சமுதாயத்தில் மலிந்து கிடக்கிறது.

    போதிக்கக் கூடியவர்களைக் கேள்வி கேட்பதும் வழக்கமாகி விட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு பிரான் வாழ்க்கையில் இப்படி எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந் திருக்கின்றன. விபசாரம் செய்யும் பெண்களுக்கு இப்படி கொடூர மான தண்டனைகளை வழங்கி இருக்கிறார்கள்.

    இயேசு பிரான் இந்த நிகழ்வை எப்படிக் கையாள்கிறார் பார்த்தீர்களா? ‘உங்களில் குற்றமில்லாதவன்’ என்ற வரிதான் வந்தவர்களைச் சிந்திக்க வைக்கிறது.

    யாரும், யாரையும் தீர்ப்பிடக்கூடாது என்ற கருத்தும், குற்றமில்லாதவர் யார்? என்ற வினாவும் எந்தக் காலத்திற்கும் பொருந்தக் கூடிய ஒன்றாக இருக்கிறது.

    நாம் வாழும் இந்தக் காலத்திலும் இக்கருத்தைப் பற்றி சிந்திப்போம். நம்மைச் சுற்றி ஓர் உலகம் இயங்குகிறது. இந்த உலகத்தில் பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். பல்வேறு சமயத்தையும் சாதிகளையும் சார்ந்தவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். சாதிகளுக்குள் சண்டை; சமயங்களுக்குள் பகைமை என்பதெல்லாம், புரையோடி இருக்கிறது. இந்த நிலையில் அரசியல் வேறு மனித சமுதாயத்தை அலைக்கழிக்கிறது. எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் மனித சமுதாயம் மாண்புடன் திகழும் என்பதில் சந்தேகம் இல்லை.

    ஆனால் வேண்டியவர்களுக்கு ஒரு நீதி; வேண்டாதவர் களுக்கு ஒரு நீதி என்பதெல்லாம் இவ்வுலகத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்டு செயலாக்கம் பெறுகிறது.

    தவறு செய்வது மனித சமூகத்தில் இயல்பானதுதான். அந்த இயல்பை மாற்றி அமைப்பதற்குத்தான், மதம் என்னும் மார்க்கம் இருக்க வேண்டுமே தவிர, பகைமையை உருவாக்கக் கூடியதாக இருக்கக் கூடாது. விபசாரம் செய்து விட்டாள்; இவளைக் கல்லால் எறிய வேண்டும் என்று ஒரு கூட்டம் ஓடி வந்ததைக் கண்டோம். அந்தக் கூட்டத்தை ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டு, சிந்திக்க வைக்கிறார், இயேசு பெருமான்.

    ‘உங்களில் குற்றமில்லாதவன், முதல் கல்லை எறியட்டும் என்கிறார். அக்காலத்தில் பெண் தவறு செய்தால், பெரிய தவறாகச் சித்தரிப்பார்கள். இந்தக் காலத்திலும் அதே நிலைதான் நீடிக்கிறது. ஆணாதிக்க சமுதாயமாக அன்றிருந்த நிலைதான் இன்றும் தொடர்கிறது.

    ஆகவே சிந்திக்கத் தொடங்குவோம். இயேசு பிரான் சொன்னதைப்போல, யாரும் யாரையும் தீர்ப்பிடும் நிலையில் இல்லை என்பதை உணர்வோம். குற்றம் இல்லாமல் வாழ அனைவரும் முயற்சி எடுப்போம். சாதி, சமய பகைமையை ஒழித்து, நல்லுறவைப் பேணி வளர்ப்போம். இயேசு பிரானின் கோட்பாடுகளை ஏற்று நடக்க உறுதி பூணுவோம். இதுவே நல்வாழ்வு வாழ வழி வகுக்கும்.

    செம்பை சேவியர்.
    Next Story
    ×