search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தவக்கால சிந்தனை: தாழ்மையே மேன்மைக்கு வழி
    X

    தவக்கால சிந்தனை: தாழ்மையே மேன்மைக்கு வழி

    அஸ்திவாரத்தின் ஆழத்திற்கு ஏற்றபடிதான் கட்டிடத்தின் உயரம் அமைவது போல, தாழ்ச்சி என்ற பண்பிற்கு ஏற்றபடிதான் மனித மாண்பு உயரும்.
    தவக்காலத்தின் நிறைவு புனித வாரத்தின் இறுதி மூன்று நாட்களாகும். அந்த மூன்று நாள் வைபவத்தை இன்று (பெரிய வியாழன்) மாலை தொடங்குகிறோம். இன்றைய வழிபாட்டின் நற்செய்தி வாசகம், இயேசு தம் வாழ்விலும், பணியிலும் கடைபிடித்து போதித்து வந்த தாழ்ச்சி என்ற பண்பினை படம் பிடித்து காட்டுகிறது.

    தாழ்ச்சி என்ற பண்பே தலைசிறந்த பண்பு என்பதை நாம் அறிவோம். தம்மை தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்படுவார்கள் என்றும் சிறு பிள்ளையை போல் தன்னை தாழ்த்தி கொள்கிறவரே விண்ணரசில் மிகப்பெரியவர் என்றும், பெரியவனாயிருக்க விரும்புகிறவன் தொண்டனாகட்டும் என்றும், இயேசு அவ்வப்போது தம் சீடர்களுக்கு போதித்து இருந்தார் என்பதை இயேசுவின் நற்செய்தி நூல்கள் கூறுகின்றன.



    இறுதி இரவு வேளையில் அதே தாழ்ச்சி என்ற பண்பை செயல்வழி பாடமாக தம் சீடர்களுக்கு செய்து காட்டினார். தாமே தமது சீடர்களின் பாதங்களை கழுவி நீங்களும் ஒருவர் ஒருவருடைய பாதங்களை கழுவும் அளவிற்கு தாழ்ந்து பணி செய்யுங்கள் என்று வலியுறுத்தி காண்பித்தார். ஆம், தாழ்ந்து பிறரன்பு பணி செய்வோரே இன்று உலகிற்கு தேவை. புனித அன்னை தெரசா இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

    தாழ்ந்து பிறரன்பு பணி செய்வோரை கடவுளும் விரும்புகிறார் என்பதை கீழ்வரும் கூற்று உறுதிப்படுத்துகிறது. “நீரின் ஓட்டமெல்லாம் தாழ்வான நிலம் நோக்கியே; இறைவனின் நாட்டமெல்லாம் தாழ்ந்து பிறரன்பு பணி செய்வோரை நோக்கியே.“ எனவே, அகந்தை, ஆணவம், அகங்காரம், தற்பெருமை போன்ற தீய பண்புகளை வேரறுப்போம். தேவையில் இருப்பவர்களுக்கு தாழ்ந்து பிறரன்பு பணி செய்ய முன்வருவோம். அஸ்திவாரத்தின் ஆழத்திற்கு ஏற்றபடிதான் கட்டிடத்தின் உயரம் அமைவது போல, தாழ்ச்சி என்ற பண்பிற்கு ஏற்றபடிதான் மனித மாண்பு உயரும்.

    அருட்திரு. எஸ்.தேவராஜ், செயலர்,

    அறுவடை நற்செய்தி பணிமையம், ஏ.வெள்ளோடு.
    Next Story
    ×