search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தவக்கால சிந்தனைகள்: மனமாற்றத்துக்கான காலமே தவக்காலம்
    X

    தவக்கால சிந்தனைகள்: மனமாற்றத்துக்கான காலமே தவக்காலம்

    மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் தவக்காலம், ஈஸ்டர் பெருவிழா நாள்வரை 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் நோன்பு இருப்பார்கள். நோன்பு காலத்தில் கடைபிடிக்கப்படும் தவக்கால சிந்தனைகளை பற்றி பார்க்கலாம்.
    “உடைகளை அல்ல, இதயத்தை கிழித்துக் கொண்டு திரும்பி வாருங்கள்“ (யோவேல் 2:13)

    உலகிலேயே மிகவும் நீளமான பயணம் என்பது மனிதன் தனக்குள் செல்கின்ற பயணமாகும். மனிதனின் சுய ஆய்வு பயணத்துக்கான காலமே, திருச்சபை வழங்கியுள்ள அருளின் காலமான இந்த தவக்காலம். கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவின் பாடுகளை மையப்படுத்தி மனமாற்றத்துக்கான காலமாக இதை கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் திருநீற்றுப்புதன் (சாம்பல் புதன்) அன்று தொடங்கி நாற்பது நாட்கள் தவக்காலமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த காலம் நீண்ட நெடிய அர்த்தமுள்ள தயாரிப்பை, இறைவனை நோக்கிய பயணத்தை வலியுறுத்துகிறது.

    திருவிவிலியத்தில் நோவா காலத்தில் நாற்பது நாட்கள் இரவும் பகலும் மழை பெய்தது. (தொ.நூ 7:4) பின் மக்களினம் உருவானது. இஸ்ரயேல் மக்கள் 40 ஆண்டுகளாக பாலைவனத்தில் (இ.ச 8:2) கடவுளால் நெறிப்படுத்தப்பட்டனர். மோசே சீனாய் மலையில் 40 நாட்கள் தங்கியிருந்து (வி.ப 24:18) திருச்சட்டம் பெற்றார். இயேசு அலகையால் சோதிக்கப்படும் முன் நாற்பது நாட்கள் நோன்பிருந்தார் (மத் 4:2). தவக்காலத்தின் நாற்பது நாட்கள் என்பது மனம் வருந்தி மனமாற்றம் பெற்று இறைவனின் கொடைகளையும், வரங்களையும் பெறும் காலமாகும்.



    கிறிஸ்தவர்கள் சாம்பல் திலகமிட்டு தவக்காலத்தை தொடங்குகின்றனர். சாம்பல் என்பது பாவத்துக்காக மனம் வருந்துவதையும், மனமாற்றத்தையும், நிலையாமையையும் நினைவூட்டுகிறது. தர்மம் செய்து பிறரன்பு செயலில் ஈடுபடுதல், வெளிவேடமற்ற இறை உறவுக்கு வழி வகுக்கும் செபம், பாவத்துக்காக மனம் வருந்தி மேற்கொள்ளும் நோன்பு ஆகியவை இக்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய ஒழுங்கு முறைகள் ஆகும்.

    மனிதனின் நிலையாமை, துன்பங்கள், பாவங்கள், கடவுளன்பு, மன்னிப்பு, செபம், நோன்பு பற்றி சிந்தித்து மனம்மாறி பாவக்கறைகளான “ பரத்தமை, கெட்ட நடத்தை, காமவெறி, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம்“ (கலாத்தியர் 5:19-21) வீண் பெறுமை, ஒருவருக்கொருவர் எரிச்சல் மூட்டுதல், பொறாமை (கலா 5:26) போன்றவற்றை தவிர்த்து, தீய இதயத்தை கிழித்து தூயவர்களாக, நல்லவர்களாக, நேர்மையானவர்களாக வாழ உறுதியெடுப்போம். இயேசுவின் வழியில் சமூக அக்கறையோடு புதிய சமுதாயம் படைப்போம்.

    அருட்திரு அ.டேவிட் செபாஸ்டின்,

    பங்குத்தந்தை, குமரன் திருநகர், திண்டுக்கல்.
    Next Story
    ×