search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று சாம்பல் புதன்கிழமை பிரார்த்தனை
    X

    கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று சாம்பல் புதன்கிழமை பிரார்த்தனை

    கிறிஸ்தவர்களுக்கான 40 நாட்கள் தவக்காலம் தொடங்குவதை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று (புதன்கிழமை) சாம்பல் பிரார்த்தனை நடைபெறுகிறது.
    எருசலேம் பெத்லகேமில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு பிறந்தார் என்று கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. இறைப் பணியைத் தொடங்குவதற்கு முன்பு ஏசு 40 நாட்கள் உபவாசம் இருந்தார்.

    அதை நினைவுகூரும் வகையில், கிறிஸ்தவ பக்தர்கள் 40 நாட்கள் உபவாச நிலையை கடைபிடிக்கின்றனர். இந்த 40 நாட்களை லெந்து நாட்கள் அல்லது கஸ்தி நாட்கள் அல்லது தவக்காலம் என்று குறிப்பிடுகின்றனர். தவக்காலம் தொடங்கும் நாள்தான் சாம்பல் புதன்கிழமையாகும்.

    இன்று அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனை நடைபெறும். பக்தர்கள் அனைவரும் எளிய வகை உடைகளை உடுத்தி வந்து இந்த ஆராதனை நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள்.

    கத்தோலிக்க திருச்சபையினர், கடந்த ஆண்டில் குருத்தோலை ஞாயிறு தினத்தன்று பயன்படுத்திய குருத்தோலைகளை எரித்து அதன் சாம்பலை பூசிக்கொண்டு, ஆராதனைகளில் பங்கேற்பார்கள்.



    இந்த 40 நாட்கள் தவக்காலகட்டத்தில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் மாமிச உணவுகளை தவிர்க்கின்றனர். சிலர் ஒருவேளை உணவை விட்டுவிடுவார்கள். கிறிஸ்தவர்கள் தங்களின் ஆன்மிக நிலைப்பாட்டை சிந்திக்கச் செய்வதற்காக இந்த தவக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இந்த காலகட்டத்தில் பல தேவாலயங்களில் மாலை நேர ஆராதனை நடத்தப்படும். ஒவ்வொரு நாளிலும் சிறப்பு போதனைகள் வழங்கப்படும். இந்த 40 நாட்களின் இறுதியில் வரும் வெள்ளிக்கிழமையை ‘புனிதவெள்ளி’ என்று கிறிஸ்தவர்கள் துக்க நாளாக கடைப்பிடிக்கின்றனர்.

    பல்வேறு போதனைகளை செய்துவந்த இயேசு அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டு சிலுவையில் அறைந்து கொலை செய்யப்பட்டு கல்லறையில் வைக்கப்பட்ட நிகழ்வையே ‘புனித வெள்ளி’யாக கிறிஸ்தவர்கள் நினைவுகூர்கின்றனர்.

    கல்லறையில் வைக்கப்பட்ட இயேசு 3 நாட்கள் கழித்து உயிரோடு எழுந்தார் என்று பைபிள் கூறுகிறது. அந்த வகையில் புனித வெள்ளிக் கிழமைக்கு அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையை, ஏசு உயிர்த்தெழுந்த நாளாக, அதாவது ‘ஈஸ்டர்’ பண்டிகையாக மகிழ்ச்சியுடன் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

    தவக்காலமான 40 நாட்களில் பக்தர்கள் கடைப்பிடித்து வந்த கட்டுப்பாடுகள், ‘ஈஸ்டர்’ தினத்தோடு நிறைவடைகிறது. எனவே, உணவுக் கட்டுபாடுகளை விடுத்துவிட்டு, ‘ஈஸ்டர்’ தினத்தன்று விருந்து உணவை கிறிஸ்தவர்கள் சாப்பிடுவது வழக்கமாக உள்ளது.
    Next Story
    ×