search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு உவமைக் கதைகள் வழியாக செய்த போதனைகள்
    X

    இயேசு உவமைக் கதைகள் வழியாக செய்த போதனைகள்

    தனது பரலோகத் தந்தையான யகோவா காட்டிய வாழ்க்கை நெறிகளை மீண்டும் கற்பிக்க, உவமைக் கதைகளே சிறந்த ஊடகம் என்பதை இயேசு கிறிஸ்து அறிந்திருந்தார்.
    இயேசு கிறிஸ்து உவமைக் கதைகள் வழியாக போதனைகள் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். ஏனெனில் தனது பரலோகத் தந்தையான யகோவா காட்டிய வாழ்க்கை நெறிகளை மீண்டும் கற்பிக்க, உவமைக் கதைகளே சிறந்த ஊடகம் என்பதை அவர் அறிந்திருந்தார். பல நேரங்களில் அவர் கூறும் உவமைக் கதைகள் எளிமையாக மக்களுக்கு விளங்கின. ஆனால் பல கதைகள் மறைமுகமான அர்த்தம் கொண்டிருந்தன.

    ஒருமுறை அவர் திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளர் கதையைக் கூறினார். இந்தக்கதை மறைமுகமான அர்த்தத்தைக் கொண்டிருந்தது. ஆனால் புரிய வேண்டியவர் களுக்கு நன்றாகவே புரிந்தது. இயேசு சுட்டிக்காட்டிய உண்மையான அர்த்தம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் முன் அந்தக் கதையைக் கேட்போம்.

    செலுத்தப்படாத குத்தகை

    ஒரு மனிதர் தன்னிடமிருந்த நிலத்தில் ஒரு திராட்சைத் தோட்டத்தை உருவாக்க நினைத்தார். ஏனெனில் அது வளமான மண். நிலத்தை உழுது, பண்படுத்தி உயர்ந்த திராட்சை ரக விதைகளை அதில் வரிசையாக விதைத்து நீர் பாய்ச்சினார். பிறகு தோட்டத்தைச் சுற்றி மதிற்சுவர் அமைத்தார். தோட்டத்தை காவல் காக்க, ஒரு காவல் கோபுரத்தை அமைத்தார். அறுவடை காலத்தில் திராட்சையைப் பிழிவதற்கு ஓர் ஆலையை அமைத்தார். திராட்சைச் செடிகள் முளைவிட்டு சிரித்தன. பிறகு தனது தோட்டத்தைக் குத்தகைக்கு கேட்டுவந்த தொழிலாளர்களிடம் மனமகிழ்வுடன் விட்டுவிட்டுத் தூரதேசத்திற்குப் பயணம் புறப்பட்டார்.

    கொல்லப்பட்ட நியாயம்

    அறுவடைக் காலம் நெருங்கிவந்தது. விளைச்சலில் தன்னுடைய பங்கைப் பெற்றுவர தனது பணியாளர் ஒருவரைக் குத்தகைத் தொழிலாளர்களிடம் அனுப்பினார் தோட்ட உரிமையாளர். அவர்களோ அவரைப் பிடித்து, அடித்து, வெறுங்கையோடு திருப்பி அனுப்பினார்கள். அதனால், மீண்டும் இன்னொரு பணியாளரை அவர் அனுப்பினார். அவரையும் அவர்கள் ஓட ஓட விரட்டியடித்தார்கள். பிறகு மூன்றாவதாக ஒருவரை அனுப்பினார். அவரைக் கொன்றே போட்டார்கள். தோட்ட உரிமையாளருக்கு ஓர் அன்பான மகன் இருந்தான்.

    ‘என் மகனுக்கு அவர்கள் நிச்சயம் மதிப்புக் கொடுப்பார்கள்’ என்று கூறி, கடைசியாகத் தன் மகனை அனுப்பினார். ஆனால் அந்தத் தோட்டக்காரர்கள், ‘இவன்தான் இந்தத் தோட்டத்திற்கு வாரிசு. வாருங்கள், நாம் இவனைத் தீர்த்துக்கட்டிவிடலாம். அதன்பிறகு இவனுடைய இந்தச் சொத்து நமக்கு உரிமையாகிவிடும்’ என்று கலந்துபேசிச் சதித்திட்டம் தீட்டினார்கள்.

    அதன்படியே அவனை மதிப்பதுபோல நடித்து, அவன் கைகளைப் பிணைத்து அவனைக் கொலை செய்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே அவனது உடலைத் தூக்கிப் போட்டார்கள். இப்படிச் செய்வதால் அவனது உடலைக் கண்டு அனைவரும் அச்சம் கொள்வார்கள் என்று அவர்கள் அந்தக் கொடுஞ்செயலைச் செய்தார்கள்.

    இப்போது, திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளர் என்ன செய்வார்? அவர் வந்து, தன் மகனுடன் நியாயத்தையும் கொன்றுபோட்ட அந்தக் குத்தகைத் தொழிலாளர்களை அழித்துவிட்டு, திராட்சைத் தோட்டத்தை நேர்மையானவர் களிடம் குத்தகைக்குக் கொடுத்துவிடுவார்’ என்று கதையைக் கூறி முடித்தார் இயேசு.

    டவுளை ஏமாற்றிய மனிதன்

    அப்போது, இயேசுவைப் பிடித்து அவரைக் கொலை செய்ய, உயர்பதவிகளில் இருந்த யூத பரிசேயர்கள் வழிதேட ஆரம்பித்தார்கள். ஏனென்றால், தங்களை மனதில் வைத்தே அவர் இந்த உவமைக் கதையைச் சொன்னார் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அந்தக் கதையைச் சொன்னபோது திரளான மக்கள் இயேசு அருகே இருந்ததால், அவரைவிட்டு விட்டு அப்போதைக்கு விலகிப்போனார்கள்.

    இந்தக்கதையின் வழியாக இயேசு சொன்னது என்ன?

    இந்த உலகம், வளம் நிறைந்த திராட்சைத் தோட்டம் போன்றது. தான் படைத்த மனிதர்களிடம் அதைக் குத்தகைக்காக கடவுள் விட்டிருந்தார். நேர்மையாகவும், நீதியாகவும், யாருக்கும் தீங்கிழைக்காமல் இந்தத் தோட்டத்தைப் பராமரிக்கும்படி அவர் மனிதர்களிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு எப்படி வாழ வேண்டும் என்று வழிகாட்டுவதற்காக பத்து கட்டளைகளையும் கொடுத்தார். அவற்றைக் கடைப் பிடிப்பதே தனக்குச் செலுத்தும் குத்தகைப் பங்கு என கடவுள் எதிர்பார்த்தார். ஆனால் மனிதர்களோ கட்டளைகளை மறந்துபோனார்கள்.

    தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அதிகாரம் செய்ய ஆரம்பித்தார்கள். ஒருவரை ஒருவர் தீர்ப்பிட்டார்கள். அடுத்தவர் மண்ணையும், பெண்ணையும் அபகரிக்க ஆரம்பித்தார்கள். சக மனிதரை அடிமைப்படுத்தினார்கள். தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட கொலை பாதகம் செய்யவும் அவர்கள் தயங்கவில்லை. மனிதர்கள் திருந்த மறுபடியும் வாய்ப்புத் தரும் விதமாகவே பரலோகத் தந்தை தனது ஒரே மகனை இந்த உலகுக்கு அனுப்பினார். ஆனால் அவரால் தங்கள் அதிகாரத்துக்கு ஆபத்து வரும் என்று பொறாமைப்பட்ட யூத பரிசேயர்கள், அவரைக் கொல்ல தருணம் பார்த்தனர்.

    தோட்ட உரிமையாளரின் மகன் இவரே!


    மனம் திருந்தாத அதிகார வர்க்கத்தின் மூலம் தனக்கு நேர இருக்கும் கொடிய மரணத்தை மறைபொருளாகக் குறிப்பிட்டே, திராட்சைத் தோட்ட உரிமையாளரின் கதையைச் சொன்னார் இயேசு. ஆனால் அதிகார மட்டத்தில் இருந்த யூத பரிசேயர்களோ இயேசுவின் பேச்சிலேயே அவரைச் சிக்க வைப்பதற்காக தங்களில் சிலரையும், ரோமாபுரி மன்னன் ஏரோதுவின் ஆதரவாளர்கள் சிலரையும் இயேசு விடம் அனுப்பினார்கள்.

    அவர்கள் அவரிடம் வந்து, ‘போதகரே! நீர் எப்போதும் உண்மை பேசுகிறவர். யாருக்கும் தனிச்சலுகை காட்டாதவர். மனிதர்களுடைய வெளித்தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காதவர். கடவுளுடைய நெறியை சத்தியத்தின்படி கற்பிக்கிறவர் என்றெல்லாம் எங்களுக்குத் தெரியும்’ என்று சொல்லிவிட்டு, ‘ரோம அரசனுக்கு வரி செலுத்துவது முறையா இல்லையா? செலுத்த வேண்டுமா வேண்டாமா?’ என்று கேட்டார்கள்.

    அவர்களுடைய வெளிவேஷத்தை இயேசு புரிந்துகொண்டார். ‘ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? ஒரு தினாரியு நாணயத்தை என்னிடம் கொண்டுவாருங்கள்’ என்றார். அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள்.

    ‘இதிலுள்ள உருவமும் பட்டப்பெயரும் யாருடையது?’ என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘ரோம அரசனுடையது’ என்றார்கள். அப்போது இயேசு அவர்களை நேருக்கு நேராகப் பார்த்து, ‘அரசனுக்குரியதை அரசனுக்கும், கடவுளுக் குரியதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்’ என்றார். சூழ்ச்சிக்காரர்கள் வாயடைத்து போனார்கள்.

    -சகாயராஜ், சென்னை.
    Next Story
    ×