search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழமையான புனித செபஸ்தியார் ஆலயம்
    X

    பழமையான புனித செபஸ்தியார் ஆலயம்

    கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி என்ற கிராமத்திற்கு அருகில் உள்ள மாடத்தட்டுவிளை என்ற ஊரில் அமைந்துள்ளது புனித செபஸ்தியார் ஆலயம்.
    கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி என்ற கிராமத்திற்கு அருகில் உள்ளது மாடத்தட்டுவிளை என்ற ஊர். புனித தோமையார் வழியாக திருமுழுக்கு பெற்ற சில கிறிஸ்தவ குடும்பங்கள், கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் மாடத்தட்டுவிளையில் தங்கினார்கள். இவர்கள் தான் மாடத்தட்டுவிளையில் குடியமர்த்தப்பட்ட முதல் கிறிஸ்தவ பூர்வீக குடிமக்கள் ஆவார்கள்.

    இங்கு காணப்படும் விளக்குத்தூண் கல்வெட்டு இவர்களின் தொன்மைக்கு சான்றாகும். இந்த கல்விளக் குத்தூண் 15-2-1371-ல் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த கல்தூண் இப்போது ஆலயத்தின் வடமேற்கு மூலையில் கம்பீரமாக நிற்கிறது. இந்தக் கல்வெட்டில் காணப்படும் எழுத்துக்கள், கல்வெட்டின் தொன்மையை உறுதி செய்கின்றன. இதன் மூலம் இங்கு சுமார் 652 ஆண்டுகளுக்கு முன்பே, புனித செபஸ்தியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனித அந்தோணியார் ஆலயம் இருந்தது என்பது உறுதியாகிறது.

    இயேசு சபை குருக்களால் போர்த்துக்கீசியர் ஆதரவுடன், மாடத்தட்டுவிளையில் கி.பி. 1603-ம் ஆண்டு களிமண்ணால் ஆன ஆலயம் அமைக்கப்பட்டது. நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள கோட்டாறுக்கு அடுத்தபடியாக இங்குதான் தேவாலயம் அமைக்கப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. அன்று முதல் மாடத்தட்டுவிளை, கோட்டாறு பங்கு தளத்தின் கீழ் கொல்லம் இயேசு சபை கல்லூரியின் கண்காணிப்பில் செயல்படத் தொடங்கியது.

    கி.பி. 1644-ல் ரோம் இயேசு சபை அதிபருக்கு, அருட்தந்தை ஆந்திரேயாஸ் லோப்பன் என்பவர் கோட்டாறு பங்கு தளத்தில் அடங்கியுள்ள கிளை பங்குகள் பற்றிய புள்ளி விவரம் அனுப்பியுள்ளார். அதில், மாடத்தட்டுவிளை மலைப்பகுதியில் உள்ளது என்றும், பாதுகாவலர் புனித செபஸ்தியார் என்றும், அப்போது 350 கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர் என்றும் தெரிவித்துள்ளார். வராப்புழை மறை மாவட்டத்தில் இருந்து கொல்லம் தனி மறை மாவட்டமாக செயல்படத் தொடங்கியதும், மாடத்தட்டுவிளை கோட்டாறு பங்கில் இருந்து பிரிந்தது. கி.பி. 1853-ம் ஆண்டு மார்ச் 15-ந் தேதி முதல், காரங்காடு பங்கின் கிளைப்பங்கானது.

    பின்னர் கி.பி 1918-ம் ஆண்டு நவம்பர் 10-ந் தேதி காரங்காட்டில் இருந்து பிரிந்து, மாடத்தட்டுவிளை தனி பங்கானது. இந்த ஆலயத்தின் உள் அமைந்திருக்கும் புனித செபஸ்தியார் திருவுருவச்சிலை ரோமாபுரியில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும். இந்த சிலை உலகம் முழுவதும் உள்ள பொதுவான தோற்றத்திலிருந்து வேறுபட்டு காணப்படுகிறது. இங்குள்ள புனித செபஸ்தியாரின் இடது கை மார்பிலும், வலது கை உடலோடும் ஒட்டிய நிலையிலும் அமைந்துள்ளது சிறப்புக்குரியதாகும்.

    கி.பி 1923-ம் ஆண்டு ஜனவரி 2-ந் தேதி, புனித செபஸ்தியாரின் உடலில் இருந்து சிறிய எழும்புத் துண்டை கொல்லம் ஆயர் அலோசியஸ் மரிய பென்சிகர் மாடத்தட்டுவிளை ஆலயத்துக்கு வழங்கினார். இது ஒவ்வொரு ஆண்டும் புனித செபஸ்தியாரின் திருநாளான ஜனவரி 20-ந் தேதியும், இவ்வாலயத்தின் 9-ம் திருவிழாவின் போதும், பக்தர்களின் பார்வைக்கும், வணக்கத்திற்கும் ஆலயத்தில் வைக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித செபஸ்தியாரின் திருப்பண்டத்தை முத்தமிட்டு, அந்தப் புனிதரின் ஆசிபெற்று வருகின்றனர்.

    -எஸ்.ஆன்றனி ராஜாசிங், வில்லுக்குறி.
    Next Story
    ×