search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிலுவை தரும் மாற்றம்
    X

    சிலுவை தரும் மாற்றம்

    சிலுவை நமது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால் வேறு எது நமது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது.
    கல்வாரி மலை, இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறார். தனது மரணத்தின் விளிம்பில் நின்று மானுடத்தின் மன்னிப்புக்காய் குரல் கொடுக்கிறார் இயேசு.

    அவருடைய உரத்த குரலொலி பலருக்கு நகைப்பைத் தந்தது, சிலருக்கு இடைஞ்சலாய் இருந்தது. ஆனால் அங்கிருந்த ஒரு மனிதருக்கு அது வாழ்வு தரும் குரலாய் ஒலித்தது.

    அந்த மனிதர் ஒரு நூற்றுவர் தலைவன். ‘நூற்றுவர் தலைவன்’ என்றால் நூறு படை வீரர்களுக்குத் தலைவன் என்பது பொருள்.

    நூற்றுவர் தலைவனை சிலுவை தொட்டது. இயேசுவின் வார்த்தைகள் தொட்டன. மதம் இயேசுவை மறுதலித்தது. மதத்துக்கு வெளியே நின்ற நூற்றுவர் தலைவன் இயேசுவால் தொடப்பட்டார்.

    அந்த நூற்றுவர் தலைவன் இயேசுவின் சீடன் அல்ல. இயேசுவை விரும்பியவன் அல்ல. இயேசுவின் போதனைகளினால் ஈர்க்கப்பட்டவன் அல்ல.

    அந்த சிலுவை அவனைத் தொட்டது. சிலுவை வார்த்தைகள் அவனைத் தொட்டன. அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு அவனைத் தொடவில்லை. பாதகர்களின் பகட்டுச் சிரிப்பு அவனைத் தொடவில்லை. காவல்காரர்களின் கேலிச்சிரிப்பு அவனை அசைக்கவில்லை.

    ஆனால் தவறே செய்யாமல் உலகின் பாவங்களை சிலுவை வடிவில் தனது தோளில் விருப்பத்தோடு சுமந்து சென்ற இயேசுவின் சிரிப்பு அவனைத் தொட்டது. வலி மிகுந்த நேரத்திலும் பிறர் மீது குற்றம் சுமத்தாத இயேசுவின் வார்த்தைகள் அவனைத் தொட்டன. அந்த நூற்றுவர் தலைவன் சிலுவையைப் பார்த்தான். சிலுவையினால் தொடப்பட்டார். அவனுடைய வாழ்க்கை மாறியது.

    இன்று சிலுவை நமக்கு முன்னால் நிற்கிறது. இயேசுவின் வார்த்தைகள் நம்மிடம் இருக்கின்றன. நமது வாழ்க்கையில் மாற்றங்களை நிகழ்த்த வல்ல வார்த்தைகள் அவை. அவருடைய சிலுவை நம்மைத் தொடுகிறதா? அவருடைய வார்த்தைகள் நமக்குள் மாற்றங்களை ஏற்படுத்துகின்றனவா? சிந்திப்போம்.

    இயேசுவின் வார்த்தைகள் ஆதி முதல் இன்று வரை பல்வேறு வகையில் நம்மோடு உறவாடுகிறது.

    1.அவர் மலையில் எழுதினார், மனிதன் மாற்றி எழுதினான்.

    பழைய ஏற்பாட்டில் பத்து கட்டளைகளை கடவுள் மோசேயிடம் கொடுத்தார். அந்த வார்த்தைகளைக் கடவுள் மலையில் எழுதினார்.

    ‘ஆண்டவர் சீனாய் மலைமேல் மோசேயோடு பேசி முடித்தபின், கடவுளின் விரலால் எழுதப்பட்ட கற்பலகைகளான உடன்படிக்கைப் பலகைகள் இரண்டையும் அவரிடம் அளித்தார்’ (யாத்திராகமம் 31:18) என்கிறது விவிலியம்.

    ஆனால் அந்த வார்த்தைகளை மனிதன் மாற்றி எழுதினான். சட்டங்களை தனது வசதிக்கு ஏற்ப திரித்து எழுதினான்.

    ‘உன் தந்தையையும் தாயையும் மதித்து நட’ என்றும் ‘தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்’ என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா! ஆனால் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, ‘நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது ‘கொர்பான்’ ஆயிற்று; அதாவது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று’ என்றால், அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை. இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்’ என்று இயேசு அவர்களிடம் கூறினார். (மார்க் 7:8-13)

    கடவுளின் வார்த்தைகள் நமக்குள் மாற்றங்களை ஏற் படுத்த வேண்டுமே தவிர, கடவுளின் வார்த்தைகளில் நாம் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடாது.

    2. அவர் மன்னன் மாளிகையில் எழுதினார், மனிதன் மறந்து போனான்.

    கடவுள் தனது திட்டம் என்ன என்பதை மன்னனின் அறை சுவரில் எழுதிய நிகழ்வு ஒன்று தானியேல் காலத்தில் நடந்தது. தானியேல் இறைவனோடு நடந்த ஒரு இறை மனிதர்.

    ‘அவர் இந்தக் கையைத் தம் திருமுன்னிருந்து அனுப்பி, இந்த எழுத்துகளைப் பொறிக்கச் செய்தார்’ (தானியேல் 5:24) என்கிறது பைபிள்.

    ‘தீய வாழ்க்கையை இறைவன் அழிப்பார்’ எனும் அந்த எச்சரிக்கை வார்த்தைகளை மனிதன் மறந்து போனான்.

    3. அவர் மணலிலே எழுதினார், மனிதன் மறைந்து போனான்.

    இயேசுவின் முன்னால் விபசாரத் தவறிழைத்த ஒரு பெண்ணை மக்கள் தள்ளிக்கொண்டு வருகின்றனர். ‘விபசாரத் தவறுக்குத் தண்டனை கல்லால் எறிந்து கொல்வது’ என்பது மோசேயின் கட்டளை. இயேசு புதிய போதனையை அங்கே சொன்னார். கல்லால் கொல்வதை விடுத்து, அன்பு கொள்வதை போதித்தார்.

    ‘உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்’ என்று அவர்களிடம் கூறினார். மீண்டும் குனிந்து தரையில் எழுதிக் கொண்டிருந்தார். (யோவான் 7:8)

    இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டவர்கள் முதியவர் தொடங்கி இளையவர் வரை அங்கிருந்து விலகிப் போனார்கள்.

    4. அவர் மனிதனுடைய மனதிலே எழுதினார், தனது ரத்தத்தினால் எழுதினார்.

    ‘என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதி வைப்பேன்’ (எபிரேயர் 10:16) என்கிறது இறை வார்த்தை.

    கல்லிலும், சுவரிலும், மணலிலும் எழுதியவர் இன்று நமது மனங்களில் எழுதியிருக்கிறார். சிலுவையில் தனது ரத்தத்தைச் சிந்தி நம்மை மீட்ட இறைவன் நமது உள்ளத்தில் இன்று உறவாடுகிறார். அவருடைய வார்த்தைகள் பைபிள் வடிவில் நமது கரங்களில் இருக்கின்றன.

    அந்த வார்த்தைகள் நமது வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறதா?

    சிலுவை நமது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால் வேறு எது நமது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது.

    சிந்திப்போம், செயல்படுவோம். இறையாசீர் உங்களை நிரப்பட்டும்.

    ஞா.வெலிங்டன் ஜேசுதாஸ், நல்மேய்ப்பர் ஆலயம்,

    வேளச்சேரி.
    Next Story
    ×