search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு துன்புறுத்தப்பட்டு சிலுவையில் அறையுண்டு இறத்தல்
    X

    இயேசு துன்புறுத்தப்பட்டு சிலுவையில் அறையுண்டு இறத்தல்

    யூதர்களின் நிசான் மாதம் 14ஆம் நாள் வெள்ளிக்கிழமை, அதாவது யூதர் பாஸ்கா விழாக் கொண்டாடுவதற்கு முந்திய நாள் இயேசு இறந்தார் என்பது பொதுவான கருத்து. இது பற்றி மாற்றுக்கருத்தும் உள்ளது.
    முதன்மைக் கட்டுரை: இயேசுவின் சாவு

    நற்செய்தி நூல்கள்படி, இயேசு தம் பணிக்கால இறுதியில், எருசலேம் நகரைச் சென்றடைந்தார். வெற்றி ஆர்ப்பரிப்போடு மக்கள் அவரை வரவேற்க அவர் நகருக்குள் நுழைந்தார் (காண்க: மத்தேயு 21:1-11; யோவான் 12:12-19). அங்கு கோவில் வளாகத்தில் ஆடுமாடுகள், புறாக்கள் போன்ற பலிப்பொருள்களை விற்பதும் வாங்குவதுமாகச் சந்தடி நிலவியதைக் கண்டார். ஒருசிலர் நாணயம் மாற்றுவதில் மும்முரமாய் இருந்தார்கள். அவர்களைக் கண்டித்து இயேசு அனைவரையும் கோவிலிலிருந்து வெளியேற்றினார் (காண்க: மத்தேயு 21:12-17).
    "பிலாத்து அவர்களிடம், 'இதோ மனிதன்' என்றான்" (யோவான் 19:5).

    ஆனால், யூத சமயத் தலைவர்கள் இயேசுவை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவுசெய்திருந்தனர். இதிலிருந்து இயேசுவின் பாடுகள் (துன்பங்கள்) தொடங்குகின்றன.

    நற்செய்தி நூல்கள் நான்கும் இயேசுவின் துன்பங்கள் பற்றி விரிவாக விளக்குகின்றன (காண்க: மத்தேயு 26-27; மாற்கு 14-15; லூக்கா 22-23; யோவான் 12-13).

    நான்கு நற்செய்தி நூல்களிலும் இயேசுவின் துன்பங்கள் பற்றிய வரலாறு மிகவும் ஒத்திருக்கின்றது. எனினும், சில வேறுபாடுகளும் உள்ளன. இயேசு துன்பம் அனுபவித்ததைக் கீழ்வரும் கட்டங்களாக விளக்கலாம்:

    1) யூதர்களின் பாஸ்கா விழா வருவதற்கும் சில நாள்களுக்கு முன் ஒரு பெண் நறுமணத் தைலத்தால் இயேசுவின் தலையில் பூசுகிறார்.

    2) எருசலேமில் இயேசு தம் சீடர்களோடு பந்தியமர்ந்து இறுதி இரா உணவை அருந்துகிறார். அப்போது தம் சீடர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்; தம்மைச் சீடர்களில் ஒருவர் காட்டிக்கொடுப்பார் என்று முன் கூறுகிறார்; தம் உடலையும் இரத்தத்தையும் உலக மக்களின் மீட்புக்காகக் கையளிப்பதாகக் கூறுகிறார். அப்பத்தையும் இரசத்தையும் எடுத்து, சீடர்களுக்குக் கொடுத்து அது தம் உடலும் இரத்தமும் ஆகும் எனவும் தாம் செய்ததைச் சீடரும் தம் நினைவாகச் செய்யவேண்டும் என்கிறார். சீடர்களின் காலடிகளைக் கழுவி, தம் முன்மாதிரியை அவர்கள் பின்பற்றி ஒருவர் மற்றவருக்குப் பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்துகிறார்.

    3) உணவு அருந்திய பின் கெத்சமனித் தோட்டத்திற்குச் செல்லும் வழியில், தம் சீடர்கள் தம்மைக் கைவிடுவார்கள் என இயேசு கூறுகிறார். பேதுரு, "எல்லாரும் உம்மை விட்டு ஓடிப்போய்விட்டாலும் நான் ஒருபோதும் ஓடிப்போக மாட்டேன்" (மத்தேயு 26:33) என்று துணிச்சலோடு கூறுகிறார். மனித இதயங்களை அறிந்த இயேசு அதற்குப் பதில்மொழியாக, "இன்றிரவில் சேவல் கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்" (மத்தேயு 26:34) என்றுரைக்கிறார்.

    4) இரவு: கெத்சமனித் தோட்டத்தில் இயேசு "துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்" (மத்தேயு 26:37). தம் தந்தையாம் கடவுளை நோக்கி வேண்டல் செய்கிறார்: "என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக்கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப்படியே நிகழட்டும்" (மத்தேயு 26:39). இதற்கிடையே, இயேசுவே தேர்ந்தெடுத்திருந்த பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவராகிய யூதாசு இஸ்காரியோத்து வாளும் தடியும் தாங்கிய பெருங்கூட்டத்தோடு அங்கே வருகிறார்."ரபி வாழ்க" என்று கூறி இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக்கொடுக்கிறார் (காண்க: மத்தேயு 26:49; லூக்கா 22:52; யோவான் 18:3). இயேசுவைக் கைது செய்கிறார்கள். சீடர்களோ தங்கள் உயிருக்கு அஞ்சி, தம் குருவைக் கைவிட்டுவிட்டு ஓடிப்போகிறார்கள்.

    5) இரவு: இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச்செல்கிறார்கள். அங்கே, யூத தலைமைச் சங்க உறுப்பினராகிய மறைநூல் அறிஞரும் மூப்பர்களும் கூடி வந்து இயேசுவுக்கு மரண தண்டனை விதிப்பதற்காக அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடுகின்றனர். மன்ற விசாரணை நடக்கும்போது காவலர் ஒருவர் இயேசுவைக் கன்னத்தில் அறைகிறார் (காண்க: யோவான் 18:22). இயேசுவுக்கு மரண தண்டனை விதித்து மன்றம் தீர்ப்பளிக்கிறது. மத்தேயு நற்செய்திப்படி, "பின்பு அவருடைய முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள். மேலும் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து, 'இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார் என்று சொல்' என்று கேட்டனர்" (மத்தேயு 26:67-68). பின்னர் "இயேசுவைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர்"(மத்தேயு 27:2). இந்த பொந்தியு பிலாத்து (Pontius Pilate) யூதேயா நாட்டில் உரோமை ஆட்சியாளர்களின் பதிலாளாக இருந்து கொடிய விதத்தில் செயல்பட்டதாக வரலாறு.

    6) அதே இரவு: தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து, இயேசுவுக்கு என்ன நேரிடும் என்பதை அறிய பேதுரு உள்ளே நுழைந்து காவலரோடு உட்கார்ந்திருக்கிறார். அப்போது காவலர்கள் பேதுருவை அடையாளம் கண்டுகொண்டு, "நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன் தானே" என்று கேட்கின்றனர். அதற்கு பேதுரு, "இம்மனிதனை எனக்குத் தெரியாது" என்று மும்முறை அடித்துக் கூறி மறுதலித்துவிட்டார் (காண்க: மத்தேயு 26:69-75). உடனே சேவல் கூவிற்று. "அப்பொழுது, 'சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்' என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார்" (மத்தேயு 26:75).

    7) மறுநாள் காலை: உரோமை ஆளுநன் பொந்தியு பிலாத்துவின் மாளிகை. பிலாத்து இயேசுவை விசாரித்துவிட்டு, "இவனிடத்தில் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை" லூக்கா 23:4) என்று கூறுகிறான். ஆனால் யூத சமயத் தலைவர்களும் கும்பலும் சேர்ந்துகொண்டு "அவனைச் சிலுவையில் அறையும்" என்று உரக்கக் கத்துகிறார்கள் (காண்க: மாற்கு 15:14). கலகக்காரர்களோடு பிடிபட்ட குற்றவாளியாகிய பரபா என்பவனையோ இயேசுவையோ விடுதலை செய்ய பிலாத்து முன்வருகிறான். ஆனால் கும்பல் பரபாவை விடுவித்து இயேசுவைச் சிலுவையில் அறையும்படி கேட்கிறது. மத்தேயு நற்செய்திப்படி, இயேசுவுக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டதைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் இருந்து இயேசுவைக் கட்டிக்கொடுக்க கூலியாகப் பெற்றிருந்த முப்பது வெள்ளிக்காசுகளையும் திருப்பிக்கொடுக்க முயல்கின்றான்; அவர்களோ அதை வாங்க மறுக்கிறார்கள். காசுகளைக் கோவிலில் எறிந்துவிட்டு "புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக்கொண்டான்"(மத்தேயு 27:3-8).

    8) யோவான் நற்செய்திப்படி, பிலாத்து இயேசுவோடு உரையாடலில் ஈடுபட்டு, "நீ அரசனா?" என்று கேட்டான். "அதற்கு இயேசு, 'அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்' என்றார். பிலாத்து அவரிடம், 'உண்மையா? அது என்ன?' என்று கேட்டான்"(யோவான் 18:37-38). பிலாத்தின் ஆணைப்படி இயேசு சாட்டையால் அடிக்கப்பட்டார். வீரர்கள் ஒரு முள்முடி பின்னி இயேசுவின் தலையில் வைத்து, செந்நிற மேலுடையை அவருக்கு அணிவித்தார்கள். அவரிடம் தான் குற்றம் ஏதும் காணவில்லை என்று பிலாத்து கூறி, இயேசுவை அவர்களுக்குக் காட்டி, "இதோ! மனிதன்" (யோவான் 19:5) என்றான். மத்தேயு நற்செய்திப்படி, பிலாத்து, இயேசுவின் இரத்தப்பழியில் தனக்குப் பங்கில்லை என்று கூறி "தன் கைகளைக் கழுவினான்" (மத்தேயு 27:24).

    9) யோவான் நற்செய்தியைத் தவிர மற்ற மூன்று நற்செய்திகளும் (ஒத்தமை நற்செய்திகள்), இயேசுவைக் கைது செய்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயிபாவிடம் விசாரணைக்குக் கொண்டுசென்றதாகக் கூறுகின்றன. யோவான் நற்செய்தியின்படி, இயேசுவைக் கயிபாவின் மாமனார் அன்னாவும் விசாரித்தார். "இந்தக் கயபாதான், 'மக்களுக்காக ஒருவர் மட்டும் இறப்பது நல்லது' என்று யூதர்களுக்கு ஆலோசனை கூறியவர்"(யோவான் 18:14).

    10) சாவுக்குத் தீர்ப்பிடப்பட்ட இயேசுவின் தோள்மேல் சிலுவையைச் சுமத்தினர். மரண தண்டனை விதிக்கப்பட்ட பிற குற்றவாளிகளைப் போல "இயேசு சிலுவையைச் சுமந்துகொண்டு 'மண்டை ஓட்டு இடம்' என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர்" (யோவான் 19:17). இயேசு சிலுவையைச் சுமக்க சீரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் கட்டாயப்படுத்தப்பட்டார் (காண்க: லூக்கா 23:26). இயேசுவின் துன்பத்தைக் கண்டு பெண்கள் மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்தார்கள்; அவர் பின்னே சென்றார்கள்; அப்போது இயேசு அவர்களுக்கு ஆறுதல் மொழி கூறினார் என்று லூக்கா குறிப்பிடுகிறார் (காண்க: லூக்கா 23:27-31).

    11) அங்கே இயேசுவைச் சிலுவையில் அறைந்து பிலாத்துவின் கட்டளைப்படி "நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்" என எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட பெயர்ப் பலகையை அவர் தலைக்கு மேல் தொங்கவிட்டனர் (காண்க: யோவான் 19:17-22). காலை ஒன்பது மணிக்கு இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்கிறார் மாற்கு (காண்க: மாற்கு 15:25). அது காலை 9 தொடங்கி 3 மணி நேர இடைவெளியை (அதாவது நண்பகல்வரை) குறிக்கும். யோவான் கூற்றுப்படி, இயேசு சாவுக்குத் தீர்ப்பிடப்பட்டது பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள் "ஏறக்குறைய நண்பகல் வேளை" (யோவான் 19:14). அந்த நண்பகல் வேளையில்தான் யூத குருக்கள் பாஸ்கா ஆட்டுகுட்டியைக் கோவிலில் பலியிடத் தொடங்குவார்கள். ஆக, இயேசுவே பாஸ்கா ஆட்டிக்குட்டி போல பலியாக்கப்பட்டார் என்னும் கருத்து தொக்கிநிற்பதைக் காணலாம் (காண்க: யோவான் 1:29 – "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!").

    12) இயேசுவோடு வேறு இரண்டு குற்றவாளிகளும் (கள்வர்களும்) சிலுவையில் அறையப்பட்டிருந்தனர். அவர்கள் இருவ்ரு இயேசுவை இகழ்ந்ததாக லூக்கா தவிர மற்ற மூன்று நற்செய்தியாளரும் கூறுகின்றனர். லூக்கா மட்டும் அந்த, இரு கள்வரில் ஒருவன் இயேசுவின்மீது பரிவு காட்டியதாகக் குறிப்பிடுகிறார் (காண்க: லூக்கா 23:39-43).

    13) சிலுவையில் மூன்று மணி நேரம் தொங்கி இயேசு இறந்தார். அவர் சிலுவையில் தொங்கியபோது உரைத்த சொற்களை நற்செய்தியாளர்கள் வெவ்வேறு விதமாகப் பதிவு செய்துள்ளார்கள். பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரிசைமுறை கீழ்வருமாறு:

    "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை"(லூக்கா 23:34).
    "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்"(லூக்கா 23:43).
    "அம்மா, இவரே உம் மகன்"(யோவான் 19:25-27).
    "எலோயி, எலோயி, லெமா சபக்தானி?" ((அரமேயம்). ("என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?")
    "தாகமாய் இருக்கிறது" (யோவான் 19:28).
    "எல்லாம் நிறைவேறிற்று"(யோவான் 19:30).
    "தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்"(லூக்கா 23:46).

    இயேசு சிலுவையில் தொங்கியபோது கூறியதாக நற்செய்தி நூல்கள் பதிவுசெய்துள்ள மேற்காட்டிய கூற்றுக்களை விரித்துரைத்து அவற்றின் ஆழ்பொருளை எடுத்து விளக்கும் செயல் கிறித்தவ வரலாற்றில் சிறப்பான ஒன்று.

    14) இயேசு சிலுவையில் இறந்த சரியான நேரம் குறித்து வேறுபட்ட கருத்துகள் உள்ளன. பெரும்பான்மையோர் இயேசு பிற்பகல் 3 அளவில் இறந்தார் என்பர். யூதர்களின் நிசான் மாதம் 14ஆம் நாள் வெள்ளிக்கிழமை, அதாவது யூதர் பாஸ்கா விழாக் கொண்டாடுவதற்கு முந்திய நாள் இயேசு இறந்தார் என்பது பொதுவான கருத்து. இது பற்றி மாற்றுக்கருத்தும் உள்ளது.
    Next Story
    ×